Wednesday, October 15, 2014

ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்


ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்

பண் : காந்தாரப்பஞ்சமம் (3--22) ராகம் : கேதாரகௌளை
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: சீர்காழி

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே



மந்திரம் நான்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்று, அவர்தம்மை ஆள்வன;
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இடர்
ஆன கெடுப்பன, அஞ்சு எழுத்துமே

நல்லவர் தீயர் எனாது, நச்சினர்
செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ;
கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன, அஞ்சு எழுத்துமே

கொங்குஅலர் வன்மதன் வாளிஐந்து; அகத்து
அங்குள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்
தங்கு அரவின் படம் அஞ்சும்; தம் உடை
அங்கையில் ஐவிரல்; அஞ்சு எழுத்துமே

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்;
பீடை கெடுப்பன; பின்னை நாள்தோறும்
மாடு கொடுப்பன; மன்னு மாநடம்
ஆடி உகப்பன, அஞ்சு எழுத்துமே

வண்டு அமர் ஓதி மடந்தை பேணிண,
பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே

கார்வணன், நான்முகன், காணுதற்கு ஓணாச்
சீர்வணச் சேவடி செவ்வி, நாள்தோறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன, அஞ்சு எழுத்துமே

புத்தர், சமண் கழுக்கையார், பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே

நற்றமிழ் ஞானசம்பந்தன், நால்மறை
கற்றவன் காழியார் மன்னன் உன்னிய
அற்றம்இல் மாலை ஈர்ஐந்தும் அஞ்சு எழுத்து
உற்றன் வல்லவர் உம்பர் ஆவரே

No comments:

Post a Comment