Friday, April 1, 2016

கடவுள் பக்தி என்றால் என்ன?


கடவுள் பக்தி என்றால் என்ன? 

பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். 

செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார். செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார்.

விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.

அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். 

அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார்.

அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர். கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. 

இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று பற்றுவதே ”உண்மையான பக்தி” இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.

பத்து தெட்சிணாமூர்த்திகள்....

பத்து தெட்சிணாமூர்த்திகள்....

மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்
தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)
சிற்ப அழகு - ஆலங்குடி
வீராசன நிலை - சென்னை திரிசூலம்
மிருதங்க தெட்சிணாமூர்த்தி - கழுகுமலை (தூத்துக்குடி)
யோகாசன மூர்த்தி - அனந்தபூர் (ஆந்திரா)
வீணா தெட்சிணாமூர்த்தி - நஞ்சன்கூடு (கர்நாடகா)
வியாக்யான தெட்சிணாமூர்த்தி - அகரம் கோவிந்தவாடி (காஞ்சிபுரம் அருகில்)
நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி - மயிலாடுதுறை வள்ளலார் கோயில்
நின்ற நிலையில் வீணையுடன் - திருத்தணி, நாகலாபுரம் வேதநாராயணர் கோயில்

கதலி நரசிங்கர் கோவில்:

 கதலி நரசிங்கர் கோவில்:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள ஜம்புலிபுத்தூரில் அமைந்திருக்கிறது இந்த கதலி நரசிங்கர் (நரசிம்மர்) ஆலயம். ஆண்டிபட்டியிலிருந்து இருந்து பெரியகுளம் அல்லது வைகை அணைக்குச் செல்லும் பேருந்துகள் இந்த ஊர் வழியாகச் செல்கின்றன

முன்பு ஒரு காலத்தில், செண்பக மரங்கள் நிறைந்த பகுதியாக இந்த ஊர் இருந்ததால் இந்த ஊருக்கு, 'செண்பக வனம்' என்றும் பெயர் உண்டு

பாம்பு புற்றினுள் வாழைப்பூ வடிவில் கல் விக்கிரகமாக எம்பெருமான் சுயம்புவாக தரிசனம் கொடுத்து அவதரித்ததால், 'கதலி நரசிங்கர்' (கதலி என்றால் வாழை!) என்ற பெயரில் அந்தத் தெய்வத்தை வழிபட ஆரம்பித்தனர். பிறகு, பாண்டியர்கள் ஆட்சியில் கோயில் கட்டப்பட்டது. அதன்பின் நாயக்க மன்னர்கள் மண்டபங்கள் உள்ளிட்ட திருப்பணிகள் செய்துள்ளனர்.

சன்னதி தீர்த்தம் :

அழகிய தெப்பக்குளத்துடன் அழகாக அமைந்திருக்கிறது ஆலயம். ஸ்தல விருட்சம் நாவல் மரம். முகப்பில் பந்தக்கால் மண்டபம். சிற்பங்களுடன் கூடிய சிறிய கோபுரத்துடன் திகழ்கிறது. உள்ளே நுழைந்ததும் ஸ்தம்பம் மற்றும் பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கடந்து சென்றால் சிற்ப தூண்களுடன் திகழும் மகா மண்டபம். இங்கு கதலி நரசிங்க பெருமாளை நோக்கி மேற்கு பார்த்த சிறியதும் பெரியதுமாக சிறிய சன்னதியில் இரண்டு கருடாழ்வார்களின் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எப்போதும் ஒரு கருடாழ்வார் விக்கிரகம் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். இத்திருத்தலத்தில் மட்டும் இரு கருடாழ்வார்கள் உள்ளனர். இவர்களை வணங்கி இடப்புறம் திரும்பினால் நின்ற திருக்கோலத்தில் காலபைரவர். விசேஷ நாட்களில் இவருக்கு வடை மாலை சார்த்தி வழிபடுகிறார்கள்.

சுமார் 180 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். இந்தக் கோயிலின் பட்டாச்சார்யர் ஒருவர் பூஜைகளை முடித்து விட்டு, கால பைரவர் சந்நிதிக்கு எதிரே உறங்குவது வழக்கமாம்! ஒரு நாள் இந்த அர்ச்சகர், தனது கால்களை பைரவருக்கு எதிராக நீட்டி படுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட பைரவர், அர்ச்சகரைத் தூக்கி தெருவில் தேரடியில் போட்டு விட்டாராம். விடிந்ததும், பைரவரது செயலை அறிந்த பட்டர், தினமும் அபிஷேகம்.

நைவேத்தியம் எல்லாம் செய்யும் என்னை இப்படிச் செய்யலாமா? என்று ஆத்திரத்துடன் அங்கிருந்த இரும்பு ஆயுதத்தை எடுத்து பைரவரின் தலையில் அடித்தாராம். இதனால் பைரவரின் தலையில் பெரிய வடு ஒன்று ஏற்பட்டு விட்டது. இதன் பிறகு, தனது தவறை உணர்ந்து பைரவரிடம் மன்னிப்பு கேட்டார் பட்டர். பிற்காலத்தில் பக்தர்களது முயற்சியால் புதிய பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். பழைய சிலை, கோயிலின் ஒரு மூலையில் புதைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்த பைரவர் வரம்தருவதில் மிகவும் வல்லவர் என்கிறார்கள்.

அதன் அருகில் தெற்கு நோக்கிய சந்நிதியில், இருகரம் கூப்பியபடி காட்சி தருகிறார் ஆஞ்சநேயர். இவரை மனமார பிரார்த்தித்துச் சென்றால் மகப்பேறு வாய்க்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை. அப்படி, தங்களது வேண்டுதல் பலித்தவர்கள் இவருக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டுச் செல்கின்றனர். அடுத்து, பெரிய முன்மண்டபம் தாண்டினால் முத்து மண்டபம். இதன் வடக்கு மூலையில், தெற்கு நோக்கி காட்சி தருகிறார் சேனை முதல்வர். உற்சவ காலங்களில் இவருக்கே முதல் மரியாதை. கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வரதராஜர், நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம். முன் வலக்கரம் அபய ஹஸ்தம் காட்ட,முன் இடக்கரத்தை தொடை மீது வைத்து, நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.இவரது திருவடி அருகில், சிறிய சிலை வடிவில் சுயம்புவாக தோன்றிய வாழைப்பூ போன்ற வடிவில் காட்சி தருகிறார் கதலிநரசிங்க பெருமாள். அபிஷேக, நைவேத்திய, தீபாராதனை வேளைகளில் மட்டுமே இவரை தரிசிக்க இயலும். மற்ற நேரங்களில் இவரது திருவுருவம் கவசத்தால் மூடி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதலிநரசிங்கப் பெருமாள், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் இந்த சந்நிதியில் உள்ளனர்.பெருமாளின் சந்நிதியை ஒட்டி வலப்புறத்தில் லட்சுமி நரசிம்மர் தனிசந்நிதி. இதையடுத்து கிழக்கு நோக்கிய தனிச் சந்நிதியில் செங்கமலத் தாயார் அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்களுடன் கருணை பொங்கக் காட்சி தரும் இந்த அன்னையை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

.தாயாரின் சந்நிதிக்கு எதிரே நான்கு தூண்களுடன் திகழும் மண்டபத்துக்கு திருமண் காப்பு மண்டபம் என்று பெயர். திருவிழாவின்போது உற்சவம் முடிந்து ஆலயம் திரும்பியதும் இந்த மண்டபத்தில் எழுந்தருளி இளைப்பாறுவார் கதலி நரசிங்கப் பெருமாள். அப்போது, வெண்சாமர உபசாரத்துடன் இவருக்கு தீபாராதனை காட்டி, அதையே தாயாருக்கும் காட்டுவார்கள். இது, இந்த ஆலயத்தின் விசேஷமாகக் கருதப்படுகிறது.

சன்னதி தீர்த்த தெப்பகுளம் :

இந்தக் கோயிலில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. நடை திறப்பு காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.15 மணி வரையும் திறந்திருக்கும். சனிகிழமை மட்டும் மதியம் 1 மணி வரையும் இரவு 8 மணிவரையும் திறந்திருக்கும்.

இக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம், புரட்டாசி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, பெரிய கார்த்திகை போன்ற விழா வைபவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஸ்வாமி நகர்வல புறப்பாட்டுக்கு அன்ன, சிம்ம, ஆஞ்சநேய, கருட, சேஷ, யானை மற்றும் குதிரை வாகனங்களும் சப்பரமும் உள்ளன. புதிய தேரும் உள்ளன.

வீட்டு பூஜை குறிப்புகள் - 20

  வீட்டு பூஜை குறிப்புகள் - 20

1 வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

2. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

3. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.

4. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.

5. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

6. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

7. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.

8. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

9. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.

10. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

11. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.

12. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

13. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

14. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

15. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

16. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

17. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

18. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

19. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

20. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

எட்டு வகை லட்சுமியின் அருளும் கிடைக்கும் வெள்ளிக்கிழமை விரதம்:

எட்டு வகை லட்சுமியின் அருளும் கிடைக்கும் வெள்ளிக்கிழமை விரதம்:

எட்டுவகை லட்சுமியின் அருளும் இருந்தால், நமக்கு ஏராளமான செல்வங்கள் வந்து சேரும். சகல சித்தியும் தரும் ஆதிலட்சுமி, சிறப்புகள் வழங்கும் சந்தான லட்சுமி, அரச போகம் தரும் கஜ லட்சுமி, செல்வம் தரும் தன லட்சுமி, பசி தீர்க்க உணவளிக்கும் தான்ய லட்சுமி, கவலையைப் போக்கும் மகாலட்சுமி, வெற்றியைத் தரும் விஜய லட்சுமி, வீரம் கொடுக்கும் வீர லட்சுமி ஆகிய எட்டு வகை லட்சுமிகளையும் விரதமிருந்து வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைத்து வருகைப்பதிகம் பாடவேண்டும்.

தன லட்சுமியின் அருளைப் பெற வேண்டுமானால், வசதி இல்லாதவர்களுக்கு பொருளுதவி செய்ய வேண்டும். தான்ய லட்சுமியின் அருளைப் பெற, பசியோடு வருபவர்களுக்கு உணவளிக்க வேண்டும். வித்யா லட்சுமியின் அருள் கிடைக்க, படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு புத்தகம், பேனா வாங்கிக் கொடுக்க வேண்டும்.

இதுபோல அந்தந்த லட்சுமிக்கு விரத வழிபாடுகளையும், அவை மகிழ்ச்சியடையும் விதத்தில் செயல்பாடுகளையும் செய்தால் செல்வச் செழிப்புடன் வாழலாம்.

திருக்காளத்தீஸ்வரர் கோவில் - தென் காளஹஸ்தி:

திருக்காளத்தீஸ்வரர் கோவில் - தென் காளஹஸ்தி:

புராணங்கள் போற்றும் பஞ்சபூத திருத்தலங்களில் ஒன்றாக, வாயுலிங்கத் தலமாக ஒளிரும் திருத்தலம் காளஹஸ்தி எனப்படும் திருக்காளத்தி. கண்ணப்ப நாயனாருக்கு அருள் வழங்கிய தலம், உத்தரவாகினியாகப் பொன்முகலி ஆறு பாயும் ஊர், ராகு, கேது ஆகிய சாயா கிரகங்கள் நல்ல கிரகங்களாக நன்மை வழங்கும் புண்ணிய க்ஷேத்திரம் என்று இவ்வூருக்கு மகிமைகள் நிறைய உண்டு.

அதனாலேயே இவ்வூருக்குச் சென்று அங்கு உறையும் காளத்திநாதரையும் ஞானாம்பிகையையும் வழிபட்டு வருவதை பெரும் பாக்கியமாகக் கருதுவார்கள் பக்தர்கள்.

சரி! பொருளாதாரச் சூழல், வயோதிகம், தள்ளாமை முதலான காரணங்களால், ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்தத் தலத்துக்குச் செல்ல இயலாதவர்கள் என்ன செய்வது?

வெகு காலத்துக்கு முன் பிச்சை எனும் சிவத்தொண்டர் ஒருவருக்கும் இப்படியொரு நிலை ஏற்பட்டது. ராணி மங்கம்மாளின் அரசவையில் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார் பிச்சை. சிவ பக்தரான அவர், வருடம்தோறும் மகா சிவராத்திரி தினத்தன்று, திருக்காளத்தி சென்று காளத்தியப்பரைத் தரிசித்து வழிபடுவது வழக்கம். ஆனால், வயது முதிர்ந்த நிலையில் அவரால் காளத்திக்குச் செல்ல முடியவில்லை. எனவே, சிவபெருமானை மனதில் தியானித்து, உண்ணா நோன்பு இருந்து வந்தார்.

கனவில் கிடைத்த கட்டளை!

ஒருநாள், அவர் கனவில் அந்தணக் குழந்தையாகத் தோன்றிய சிவபெருமான், ''காட்டூர் எனும் ஊர் அருகே வில்வ வனத்தில், வெள்ளை அரளி பூத்திருக்கும் மரத்தடியில், உனக்கு அருள்பாலிக்கக் காத்திருக்கிறேன். என்னை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபடு'' என்று அருள்புரிந்தார்.

விழித்தெழுந்த பிச்சை காட்டூர் சென்று ஊர் மக்களிடம் கனவு விஷயத்தைக் கூறி, அவர்களையும் அழைத்துக்கொண்டு வில்வ வனத்துக்குச் சென்றார். அங்கே, வெள்ளை அரளி பூத்திருந்த மரத்தின் அடியில் லிங்கத்திரு மேனியராக காட்சியளித்த சிவனாரைக் கண்டு சிலிர்த்துப்போன மக்கள் சிவ நாம பாராயணம் முழங்க, லிங்கத் திருமேனியை மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு காட்டூருக்குச் செல்ல முற்பட்டனர். ஆனால், சிவ சித்தமோ வேறு விதமாக இருந்தது. வண்டி குறிப்பிட்ட தொலைவைக் கடந்ததும் அதன் அச்சு முறிந்தது; மேற்கொண்டு நகர முடியவில்லை.

சிவனின் சித்தம் இது என்பதை உணர்ந்து அந்த இடத்துக்கு அருகில் இருந்த ஆறுமுகப் பெருமான் கோயிலிலேயே, வேத மந்திரங்கள் முழங்க சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தனர். அந்த இடம்தான் தற்போது உத்தமபாளையம் என அழைக்கப்படுகிறது. திருக்காளத்திக்குச் சென்று வந்தால் கிடைக்கும் பலனை பக்தனுக்கு அருள்வதற்காக எழுந்தருளிய பெருமான் திருக்காளத்தீஸ்வரர் என்று திருநாமம் கொண்டார். தலமும் தென்காளஹஸ்தி என்று சிறப்பு பெற்றது.

ஆற்றில் பவனி வந்த அம்பாள்

மூலவர் கிடைத்த பிறகு, அம்பாளின் சிலை செய்து பிரதிஷ்டை செய்ய ஊர்மக்கள் விரும்பினார்கள். எத்தனை சிற்பிகள் முயன்றும் அம்பாளுக்கான விக்கிரகம் சரியான வடிவத்தில் அமையவில்லை. பிச்சையும், ஊர் முக்கியஸ்தர்களும் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தனர்.
இந்த நிலையில் ஒரு வெள்ளிக்கிழமையன்று இரவில் சிவனடியார் பிச்சையின் கனவில் தோன்றிய அம்பாள், ''கோயிலின் அருகில் உள்ள முல்லையாற்றில் வெள்ளம் வரும்போது, மூங்கில் கூடையில் நான் பவனி வருவேன். எனது விக்கிரஹத் திருமேனியை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டால், ஊர் செழிக்க அருள்புரிவேன்'' எனக் கூறி மறைந்தாள்.

அதன்படியே ஓரிரு மாதங்களிலேயே ஆற்றில் வெள்ளம் கரை புரண்டது. அருகிலுள்ள கோகிலாபுரம் எனும் ஊரில் நதிக்கரையில் அம்பாள் விக்கிரஹமும் கரை ஒதுங்கியது என்கிறார்கள் ஊர் மக்கள். அந்த அம்பாளையும் கோயிலில் பிரதிஷ்டை செய்து, காளஹஸ்தி அம்பிகையின் திருப்பெயரான ஞானாம்பிகை என்றே திருநாமம் சூட்டினர்.

அம்பாள் விக்கிரகம் கரை ஒதுங்கிய கோகிலாபுரத்தை அம்பாளின் பிறந்தகமாகவே கருதுகிறார்கள். எனவே, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறும் திருக்கல்யாணத்தின் போது, இவ்வூரைச் சேர்ந்த மக்கள் அம்பாளுக்கு பிறந்த வீட்டுச் சீரும், மருமகனான சிவனாருக்கு வஸ்திரமும் சமர்ப்பிக்கும் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இத்திருத்தலத்தில் ராஜவிநாயகர், சரபேஸ்வரர், பைரவர், சோமாஸ்கந்தர், லிங்கோத்பவர், குபேரன்குபேரலட்சுமி, 63 நாயன் மார்கள் ஆகியோரையும் தரிசித்து வழிபடலாம்.

ராகு கேது பரிகாரம்...

சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. ராகு பகவான் சிம்ஹிதேவியுடனும், கேதுபகவான் சித்ரலேகாவுடனும் அடுத்தடுத்த சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு நடக்கும் காலசர்ப்ப தோஷ பரிகார ஹோமத்தில் பங்கு கொண்டு வழிபடுவதுடன், ஹோமம் முடிந்ததும் தரப்படும் (ஹோமத்தில் கிடைக்கும்) ரோக சாம்பல், தேங்காய்வாழைப்பழம், நவதானியம், ராகுகேதுவின் வெள்ளித் தகடுகள் ஆகியவற்றை எடுத்துச்சென்று அருகில் உள்ள முல்லையாற்றில் இடவேண்டும். இதனால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

கண் நோய் நிவர்த்தியாகும்

கண்ணப்ப நாயனாருக்கு காளஹஸ்தி தலத்தில் சிவனார் முக்தி கொடுத்தருளியதை நினைவுகூரும் வகையில், இந்தத் தலத்திலும் காளத்தீஸ்வரருக்கும் கண்ணப்பருக்கும் சிவராத்திரியின்போது சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. கண் தொடர்பான நோய் உள்ளவர்கள் இந்த வைபவத்தில் பங்குகொண்டு ஸ்வாமிக்கும் நாயனாருக்கும் வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டால் கண் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

சகஸ்ரலிங்கம், சுரதேவர்

ஒரே லிங்கத் திருமேனியில் சிறிய அளவில் 1008 லிங்கங்களுடன் காட்சிதரும் சகஸ்ரலிங்க தரிசனம் இக்கோயிலின் விசேஷம்.
இங்குள்ள சுரதேவருக்கு ரசம் சாதம் படைத்து வழிபட்டால், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் உடல் உஷ்ண நோய்கள் நீங்கும்.
பாம்பு மற்றும் விஷப் பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதுடன், பெளர்ணமி தினங்களில் இந்தக் கோயிலுக்கும் வந்திருந்து, இங்கு அருள்பலிக்கும் விஷராஜா என்ற தெய்வத்துக்கு வஸ்திரம் அணிவித்து பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இதனால் விஷத்தின் பாதிப்பு நீங்கி விரைவில் குணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் இங்கு பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, மகாலட்சுமி, ஆகியோருடன் காளி தேவியும் சேர்ந்து அஷ்ட மாதர்களாகத் தரிசனம் தருவது விசேஷ அம்சம்.

மேற்கூரையில் காலச்சக்கரம்

இங்குள்ள அர்த்தமண்டப விதானத்தில் வாஸ்து பிரம்மாவையும், அவரருகே இடது கையில் வீணையை மீட்டும் நிலையில் சரஸ்வதியையும், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்களையும் தரிசிக்கலாம். அதைச் சுற்றி சதுரமான வடிவில் 12 ராசிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மிருகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பிறந்த தேதி, ராசி மற்றும் நட்சத்திரம் தெரிந்திருந்தவர்கள், இந்த காலச் சக்கரத்தின் மூலம் தற்போதைய கிரக நிலை, தோஷ விபரங்கள், திருமணப் பொருத்தம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்!

கோவிலுக்கு போகும் வழி

தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது உத்தமபாளையம். அங்குள்ள பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது கோயில்.

பாவங்களைப் போக்கும் ஸ்ரீசித்திரகுப்தர்

பாவங்களைப் போக்கும் ஸ்ரீசித்திரகுப்தர்!

பௌர்ணமி தரிசனம்...
திருப்பூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில், சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது சின்னாண்டிபாளையம் கிராமம்.

இங்கே அற்புதமாகக் கோயில் கொண்டு, அருள்பாலித்து வருகிறார் சித்திரகுப்தர். நம் பாவ- புண்ணியங்களைக் கணக்கிடும் சித்திரகுப்தரை வழிபட்டால், நமக்கு அருள்புரிந்து, நம் பாவங்களைக் களைவார் என்பது ஐதீகம்!

சுமார் 100 வருடப் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில், தலைப்பாகையுடன் வலக் கையில் இரும்பு எழுத்தாணியும், இடக் கையில் பனை ஓலையும் கொண்டு, கணக்கு எழுதும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார் சித்திரகுப்தர்.

எமதர்ம ராஜாவின் கணக்கரான ஸ்ரீசித்திரகுப்த பெருமான், சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று அவதரித்தவர். எனவே, கடந்த 85 வருடங்களாக, சித்ரா பௌர்ணமி நாளில் சித்திரகுப்தருக்குப் பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்கின்றனர் பக்தர்கள். மேலும், அந்த நாளில், சித்திர குப்த மகா யாகம் நடை பெறும். அப்போது சித்திரகுப்தரின் சரிதம், கதையாக வாசிக்கப்படுவது வழக்கம். இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற்றது இந்த வைபவம். அதிகாலை யில் துவங்கிய யாகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சித்திரை மாதம் பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட, சகல வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், கல்யாண வரம், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மாதந்தோறும் பௌர்ணமி நாளில், மாலையில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சித்திரகுப்தரை வேண்டினால், விரைவில் இல்லத்தில் நல்ல காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்.