லக்ஷ்மி கடாக்ஷம் இருக்கும் இடத்தில் சரஸ்வதி கடாக்ஷம் இருப்பது மிகவும் அரிது என்பார்கள். ஏழ்மையில் வாடிய புலவர்கள் ஏராளம். வெற்றித்திருமகள் இருக்கும் இடத்திலும் இப்படித்தான். ஆனால் இந்த மூன்று தேவியர்களின் அருளும் ஒரே இடத்தில் இருக்கும்படியாகச் செய்யும் சிவத்தலம் சிவபுரம் என்பது. கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சாக்கோட்டை என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தூரம் சென்றால் திருக்கோயிலை அடையலாம்.
சிவபுரத்தை மனத்தால் நினைத்தாலே, அலைமகள்,கலைமகள், மலைமகள் ஆகிய மூன்று தேவியர்களின் அருளும் கிடைத்துவிடும் என்கிறார் சம்பந்தர். “ “சிவபுர நினைபவர் திருமகளோடு திகழ்வரே” என்றும், “சிவபுர நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே” என்றும், “சிவபுரமது நினைபவர் செயமகள் தலைவரே” என்றும் கூறுவதால் அறியலாம். அது மட்டுமல்ல. நமது இடர்களைக் களைய வல்ல தலமும் இது. இந்தப் பிறவியில் எதிர்ப்படும் துன்பங்களை மட்டுமல்ல. அடுத்த பிறவியில் வரக்கூடிய துன்பங்களையும் நீக்கும் அருள் மிகுந்த தலமாக இது விளங்குவதை, “இருமையும் இடர் கெடுமே” என்பார் ஞானசம்பந்தர்.
"மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ் நட(ம்) நவில்பவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென உடையவன் எமை உடையவனே."
என்பது அந்த அருந்தமிழ்ப் பாடல்.
நிறையவன் உமையவள் மகிழ் நட(ம்) நவில்பவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென உடையவன் எமை உடையவனே."
என்பது அந்த அருந்தமிழ்ப் பாடல்.
திருமால் வெள்ளைப் பன்றியாகப் பலகாலம் சிவபூஜை செய்த அருமையான தலம் இது. இச்செய்தியை ஆச்சார்ய மூர்த்திகள் இருவரும் தம் பதிகங்களில் குறிப்பிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, அப்பர் பெருமானது திருப்பாடலை இங்கு சிந்திப்போமாக.
சிவபெருமானே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றான். நிலமாகவும்,நிலத்தில் விளையும் பயிராகவும்,அப்பயிருக்குக் காரணமான நீராகவும், நீரை (கங்கையை) ஏற்கும் சடையை உடையவனாகவும், செங்கோல் வேந்தன் என்று மக்கள் புகழ்வதையே பரிசாகக் கொள்ளும் அரசனுக்கு அப்பெயர் விளங்கக் காரணமாகவும், பிறைபோன்ற கோரப்பல் உடைய வெள்ளைப்பன்றி வடிவில் திருமால் பலகாலம் பிரியாமல் வழிபட்ட பெருமையை உடையவனாகவும், தேவர்களுக்கெல்லாம் தேவனாகவும் சிவன் எனவும் அப்பெருமான் விளங்குகின்றான். இப்படிச் சொல்லும் அப்பரின் திருத்தாண்டகத்தை இப்போது முழுவதும் காண்போம்:
"பாரவன் காண் பாரதனில் பயிர் ஆனான் காண்
பயிர் வளர்க்கும் துளியவன் காண் துளியில் நின்ற
நீரவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும்
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளைப்பன்றி
பிரியாது என்றும் வழிபட்டு ஏத்தும்
சீரவன் காண் சீருடைய தேவர்க்கெல்லாம்
சிவனவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே"
பயிர் வளர்க்கும் துளியவன் காண் துளியில் நின்ற
நீரவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும்
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளைப்பன்றி
பிரியாது என்றும் வழிபட்டு ஏத்தும்
சீரவன் காண் சீருடைய தேவர்க்கெல்லாம்
சிவனவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே"
ஆர்யாம்பிகையும் சிவகுருநாதரும் அருள் வழங்கும் சிவபுரத்தைத் தரிசித்து நலம் யாவும் பெறுவோமாக.
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''