Friday, September 26, 2014

ஸ்ரீராமனும் நவராத்திரியும்!

தெய்வ அவதாரங்களும் புராணக் கதாபாத்திரங்களும் அம்பாளை வழிபட்டு நல்லருள் பெற்ற திருக்கதைகளை புராணங்கள் விளக்குகின்றன. கிருஷ்ண பகவான் துர்கையின் ஓர் அம்சமான ஸ்ரீகாத்யாயினி தேவியை குறித்து விரதம் இருந்த தகவலையும், அரிச்சந்திரன் ஸதாட்சி எனும் அம்பிகையைக் குறித்து விரதம் இருந்து அருள்பெற்ற கதையையும் அந்த ஞான நூல்கள் விவரிக்கின்றன.
ராவணனை வதம் செய்யும் முன் ஸ்ரீராமன் நவராத்திரி விரதம் அனுஷ்டித்தார் என்றும், அவருக்கு இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை நாரதர் விளக்கினார் என்றும் வியாசர் தேவிபாகவத புராணத்தில் பதிவு செய்துள்ளார்.
சீதாதேவியை ராவணன் அபகரித்துக்கொண்டு போனதும், ராமர் துயரத்தில் ஆழ்ந்தார். அப்போது அவரை நாடி, மகதி என்னும் வீணையை மீட்டியபடி நாரதர் வந்து சேர்ந்தார்.
அவரை வரவேற்று வணங்கிய ஸ்ரீராமனும் லட்சுமணனும் அவர் அருகே அமர்ந்தனர். ஸ்ரீராமனின் முகவாட்டத்தைக் கண்ட நாரதர்  பேசத் தொடங்கினார்...
''ராகவா! சாதாரண மானிடனைப் போல் நீ ஏன் துயரப்படுகிறாய்? நடந்தது எல்லாம் எனக்குத் தெரியும். சில காரியங்களுக்காக நான் சொர்க்கலோகம் போனபோது, அங்கு நடந்த சில விவரங்களைத் தெரிந்துகொண்டுதான் உன்னிடம் வந்தேன். அதை அப்படியே உன்னிடம் சொல்கிறேன் கேள். தனக்கு மரணம் வரும் என்பது தெரியாமல், ராவணன் சீதையை அபகரித்துவிட்டான். ராவணனை சம்ஹாரம் செய்வதற்காகவே நீ அவதரித்து இருக்கிறாய். ராவணன் சீதையிடம் கொண்ட மோகம், பூர்வ ஜென்மத்தால் ஏற்பட்டது.
போன பிறவியில் சீதை, தவத்தில் சிறந்த முனிவர் ஒருவரின் மகளாக அவதரித்து வளர்ந்து வந்தாள். தவம் செய்த அவளைக் கண்டு மோகம் கொண்ட ராவணன் பலாத்காரமாக அவள் கையைப் பிடித்து இழுத்தான். தனக்கு மனைவியாகும்படி வற்புறுத்தினான். கோபம் தாங்காத அவள், 'தீயவனே! உன்னைக் கொல்வதற்காக நானே அயோநிஜையாக (கர்ப்பவாசம் இல்லாமல்) அவதரிப்பேன். உன்னால் தொடப்பட்ட இந்த உடம்பை இனியும் வைத்திருக்கமாட்டேன்’ என்று சொல்லித் தீயில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
அப்படிப்பட்ட கற்புக்கரசியை விவரம் தெரியாமல், பாம்பை எடுத்துக் கழுத்தில் போட்டுக் கொள்வதுபோல, தன் குலமெல்லாம் நாசமடைவதற்காகவே ராவணன் அபரித்துக் கொண்டு போயிருக்கிறான். நீயும் தேவர்களின் பிரார்த்தனைக்காக அஜமகாராஜன் பரம்பரையில் ராவணன் வதத்துக்காகவே அவதரித்து இருக்கிறாய்.
ஆகவே, ராமா! சீதையைப் பற்றிக் கவலைப்படாதே. சீதை அசோகவனத்தில் உன்னையே தியானித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய உணவுக்காக தேவேந்திரன் காமதேனுவின் பாலை ஒரு பாத்திரத்தில் இட்டு, சீதையிடம் அனுப்பி இருக்கிறான். அதை உண்டு சீதை பசி, தாகம் இல்லாமல் இருக்கிறாள். நானும் பார்த்தேன். நீ தைரியமாக இரு!' என்று ஆறுதலும் தைரியமும் உரைத்த நாரதர், நவராத்திரி விரத மகிமையையும் அவருக்கு விவரித்தார்.
''ரகு குல உத்தமா! ராவணனை சம்ஹரிப்பதற்கான வழியைச் சொல்கிறேன். நவராத்திரியில் விரதம் இருந்து அம்பிகையை பூஜை செய்தால், அது எல்லாவிதமான ஸித்திகளையும் கொடுக்கும். இந்திரன், விஸ்வாமித்திரர், பிருகு, வசிஷ்டர், காசியபர், ப்ருகஸ்பதி முதலானவர்கள் எல்லாம் நவராத்திரி விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டு, அவரவர் வேண்டியதைப் பெற்றார்கள்.
ராமா! சுகத்தை விரும்புபவன் மங்கலகரமான இந்த விரதத்தை அனுஷ்டிப்பான். ராவணனை வதம் செய்தவற்கு உண்டான ஊக்கத்தோடு முயற்சி உள்ளவனாக விதிப்படி இந்த விரதத்தைச் செய்!'' என்றார்.
ஸ்ரீராமன் அவரிடம், ''முனிவரே! தாங்கள் எல்லாம் அறிந்தவர். தாங்கள் வழிபடச் சொன்ன அம்பிகை யார்? அவள் மகிமை என்ன? அவள் எவ்வாறு வடிவம் கொள்கிறாள்? அவளுக்கான விரதம் எப்படிப்பட்டது!'' என்று கேட்டார்.
அவருக்குத் விரிவாக பதில் உரைத்தார் நாரதர்.
''அகில உலகங்களுக்கும் அன்னையான ஆதிசக்தியே அந்த அம்பிகை. அவள் எக்காலத்தும் இருக்கக்கூடியவள். சகல துக்கங்களையும் போக்கடிப்பவள். சகல விதமான விருப்பங்களையும் நிறைவேற்றி வைப்பவள். எல்லாராலும் பூஜிக்கத் தகுந்தவள்.
என் தந்தையான பிரம்ம தேவரிடம் சிருஷ்டி சக்தியாக இருக்கிறாள். மகாவிஷ்ணுவிடம் பரிபாலிக்கும் சக்தியாக இருக்கிறாள். ருத்ரனிடம் சம்ஹார சக்தியாக இருக்கிறாள். பிரம்மன் முதல் சிற்றெறும்பு வரை அனைத்திலும் இருக்கும் சக்திகள் எல்லாம் அந்த பராசக்தியிடம் இருந்து தோன்றிய சக்திகளே. பிரம்மன் முதலான பலரும், பலவிதமாக அவளைப் பற்றித் துதித்து இருக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் அளவே கிடையாது!'' என்றார் நாரதர்.
ஸ்ரீராமன் தொடர்ந்து கேட்டார்... ''மகரிஷியே! தேவி விரதத்தின் விதிமுறைகளைப் பற்றி விரிவாகச் சொல்லுங்கள். அந்த விரதத்தைக் கடைப்பிடித்து அவள் அனுக்கிரகத்தைப் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன்.''
ஸ்ரீராமன் இப்படிக் கேட்டதும், ''ராமா! நானே முன்னால் இருந்து இந்த பூஜையை நடத்துகிறேன். தேவர்களுக்கு அனுகூல ஸித்தி உண்டாகும்படி உனக்கு உற்சாகத்தை விளைவித்து பூஜையை முடித்து வைக்கிறேன்'' என்றார் நாரதர்
மால்யவான் மலையில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாரதர் முன்னிலையில் முறைப்படி பூஜை தொடங்கப்பட்டது. ஸ்ரீராமன் உபவாசத்தோடு இருந்து பிரதமை முதல் பூஜையை நடத்தி வந்தார். அஷ்டமி தினம். நள்ளிரவு நேரம். அந்த மலையின் உச்சியில், அம்பிகை சிங்க வாகனத்தில் எழுந்தருளி, தரிசனம் தந்தாள். ராவண சம்ஹாரத்துக்காக ராமருக்கு அருள் புரிந்து மறைந்தாள் (இந்த இடத்தில், மகா விஷ்ணு எடுத்த மச்சாவதாரம் தொடங்கி ராமாவதாரம் வரை அனைத்து அவதாரங்களையும் சொல்லி, அவற்றின் பெருமைகளையும் சொல்லி இருக்கிறாள் அம்பிகை).
ஸ்ரீராமனின் வழியில் நாமும், அற்புதமான இந்த நவராத்திரி தினங்களில் அம்பாளை வழிபட்டு அனுகூலம் பெறுவோம்

No comments:

Post a Comment