அயோத்தி அரசன் நிமி. புகழும் பெருமையும் மிக, நல்லாட்சி நடத்தி வந்தான். நிமியின் பெருமையில் பொறாமை கொண்டிருந்தான் அசுரன் ஒருவன். வலிமையால் வெல்ல இயலாத அசுரன், நிமியை வீழ்த்த தக்க நேரம் பார்த்திருந்தான்.
ஒரு முறை முன்னோர் சிராத்த நாளில் வசிஷ்டரை அழைத்தான் நிமி. அவன் அழைப்பில் அரண்மனை சென்று, சிராத்தம் முடிந்து உணவருந்த அமர்ந்தார் வசிஷ்டர். நிமியை வீழ்த்த நேரம் பார்த்திருந்த அசுரன், சமையல்காரன் வேடத்தில் அரண்மனையில் புகுந்து, சிராத்த உணவில் மாமிசம் கலந்து பரிமாறினான். இதனைக் கண்ட வசிஷ்டர் மிகுந்த கோபமுற்றார். அரசனைப் பார்த்து, ""எனக்கு புலால் உணவு படைத்த நீ அசுரனாகக் கடவது'' என்று சாபமிட்டார்.
ஆனால், பின்னர் உண்மை உணர்ந்த அவர் பெரும் துயரடைந்தார். மனம் கலங்கிய நிலையில், ந்ருஸிம்ஹ வனம் வந்து மனம் அமைதி பெற குகை ஒன்றில் தவத்தில் ஆழ்ந்தார். அவரது தவத்துக்கு மெச்சிய நான்முகன், அவர் முன் தோன்றி, மனம் அமைதி பெற்று இயல்பு நிலையில் வாழ வரம் அருளினார்.
அதன் பின்னர் வெளியே வந்த முனிவர், மேனகையுடன் வாழ்ந்துவந்தார். தன் இலக்கும் தவமும் கலைந்து போனது பற்றி அவர் அறிந்தாரில்லை. ஒரு நாள், வசிட்டரின் காதில் அசரீரி ஒன்று கேட்டது. "வசிட்டனே... உனது தவம் தடைப்பட்டு விட்டது. நீ உண்மையில் உன் தவத்தின் பயனைப் பெற வேண்டுமானால், ஓர் உபாயம் கூறுகிறேன். கேள். நீ நரஸிம்ம வனத்தின் உட்பகுதிக்குச் செல். அங்கே நிருஸிம்ஹ ரூபியாக ஸ்ரீவிஷ்ணுவை தரிசிப்பாய். அவரை எண்ணி தவம் செய். அங்கே கோயில் கொண்ட விஷ்ணுவின் அருளால் பலர் தவமியற்றி சித்திபெற்றிருக்கிறார்கள்' என்றது.
வசிஷ்டரும் அவ்வாறே ந்ருஸிம்ஹ வனத்தின் உள்ளே சென்றார். சிங்கப் பெருமானை தரிசித்து, வலம் வந்து, தவம் புரியத் தொடங்கினார்.
வசிஷ்டர் மீண்டும் கடுந்தவம் செய்யத் தொடங்கியதைக் கண்ட தேவர்கள், இந்திரனிடம் தெரிவித்தனர். இதனால் அவரது தவத்தைக் கலைக்க மீண்டும் முயன்றான் தேவேந்திரன். ஐராவத யானை மீதேறி, ஆயுதம் எடுத்துத் தாக்கி, முனிவரின் தவத்தைக் கலைக்கத் தொடங்கினான்.
ஆனால், தான் செய்வது தவறெனத் தெரிந்தது இந்திரனுக்கு. தன் தவறைப் போக்க, நிருஸிம்மர் சந்நிதி கொண்ட பாவன விமானத்தின் கீழ்ப் புறம் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, நீராடி தவம் புரியத் தொடங்கினான். இந்திரன் தோற்றுவித்த தீர்த்தம் இந்திரபுஷ்கரிணி எனப்படுகிறது.
இது புராணப் பெருமை பெற்றுள்ளது. இதன் கரையில் தவம் செய்த யக்ஞகுப்தருக்கு பிரகலாதன் தரிசனம் தந்து, ஆசியளித்தானாம். கெüதமரின் சாபத்தால் துன்புற்ற தேவேந்திரன் இதில் நீராடி பாவம் நீங்கப் பெற்றானாம். தீர்த்தச் சிறப்பு மிக்க இந்தத் தலத்தில், பாவன விமானத்தின் தென்புறத்தில் ஜமதக்னி தீர்த்தம் உள்ளது.
ஜமதக்னியின் புத்திரர் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட தீர்த்தம். தன் தந்தையைக் கொன்ற கார்த்தவீர்யார்ஜுனனையும் அவனைப் போன்ற துஷ்ட அரசர்களையும் கொல்ல அருள் வேண்டி இங்கே பரசுராமர் நிருஸிம்ஹரை நோக்கி தவம் செய்து, வில்லும் அம்பும் பெற்றார்.
மார்கண்டேய புராணத்துள், நிருஸிம்ஹவன மாஹாத்மியத்துள் உள்ளது இந்தத் தலத்தின் புராணம். ரிஷி ஜைமினி தமக்கு நற்கதி கிடைக்க வழி கேட்டு பிருகு முனிவரை அணுகினார். ""இதே கேள்வியை நாரதரும் பிரம்மாவிடம் கேட்டார். அவர் கூறிய பதிலை உனக்குக் கூறுகிறேன்'' என்று சொல்லி, இந்தத் தலத்தின் மகிமையை ஜைமினிக்கு பிருகு சொல்வதாக அமைந்துள்ளது இந்தத் தல புராணம்.
புராணப் பெருமை பெற்ற இந்தத் தலம் சிங்கிரிக்குடி, சிங்கர்குடி, சிங்கர்கோயில் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. அபிஷேகப்பாக்கம் என்றால் அனைவருக்கும் தெரிகிறது. இங்கே லட்சுமிநரசிம்மர் அபூர்வமான கோலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். மூலவர் 16 திருக்கரங்களுடன் திகழும் உக்ர நரசிம்மர். ஒவ்வொரு கரத்திலும் ஓர் ஆயுதம் தாங்கியுள்ளார். வலதுபுற 8 கரங்களில் பதாகஹஸ்தம், பிரயோக சக்கரம், குத்துக் கத்தி, பாணம் ஆகியவற்றைத் தாங்கியும், அசுரனின் தலையை அறுத்த நிலையில், கத்தியால் அசுரன் ஒருவனைக் குத்தியவாறு, இரண்யன் காலை அழுத்திப் பிடித்தபடி, இரண்யன் குடலைக் கிழிப்பது போல் எனவும் ஆக எட்டு கரங்களும், இடதுபுற கரங்களில், குடல் மாலையைப் பிடிப்பது, சங்கம், கேடயம், வில், கதை ஆகியவற்றுடன், வெட்டப்பட்ட தலை, இரண்யனின் தலையை அழுத்திப் பிடித்தபடி, குடலைக் கிழிப்பது என இடதுபுற 8 கரங்களுமாய் உக்ர ரூபத்தில் காட்சி தருகிறார் நரசிம்மர்.
பிரகலாதனுக்கு அருள் புரிந்த நிலையில், பிரகலாதன் நரசிம்மரின் கீழே வலப்புறத்தில் கைகள் குவித்துத் தொழுதபடி உள்ளான். பெருமாளின் இடப்புறம் வதம் செய்யப்பட்ட இரணியன் மனைவி நீலாவதி, வசிஷ்டர், சுக்கிரன், மூன்று அசுரர்கள் ஆகியோரும் உடன் உள்ளனர்.
கனகவல்லித் தாயார் தனி சந்நிதியில் உள்ளார். பிரகலாத வரதனாக உற்ஸவ மூர்த்தி. கிருஷ்ணாரண்ய úக்ஷத்ரம் என்ற புராணப் பெயர் கொண்ட தலம். "ஆல்' தல விருட்சமாகத் திகழ்கிறது. ஜமதக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு(பார்க்கவ) தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் உள்ளன.
புரட்டாசியில் புண்ணியம் தரும் அட்டநரசிம்மத் தலங்கள்: இரணியனை சம்ஹரிக்க திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து தங்கள் துயர் தீர்த்ததைக் கொண்டாடிய தவ முனிவர்கள், பின்னர் தாங்கள் எப்போதும் நரசிம்ம அவதாரக் கோலத்தைத் தரிசிக்க வழி செய்யுமாறு கோரினர். முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று நரசிம்ம அவதாரக் கோலம் காட்டினார் பெருமாள். அவ்வாறு தமிழகத்தில் நரசிம்ம அவதாரக் கோலம் காட்டிய எட்டு இடங்கள் அட்ட நரசிம்ம தலங்கள் எனப்படுகின்றன. இவற்றில் நடுவில் அமைந்துள்ள பூவரசங்குப்பத்தைச் சுற்றி சோளிங்கர், நாமக்கல், அந்திலி, சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல், சிங்கர்குடி, சித்தனைவாடி ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் சிங்கர்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல்ஆகிய மூன்று நரசிம்ம தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பு. அருகருகே இருப்பதால், விழுப்புரத்தை மையமாக வைத்து இவற்றை ஒரே நாளில் நாம் தரிசிக்கலாம்.
இந்த சந்நிதி கருவறையில் 16 திருக்கரங்களுடன் இரணியனை வதம் செய்த கோலத்தில் உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், பாலநரசிம்மர் என மூன்று நரசிம்ம மூர்த்திகளை தரிசிக்கலாம். ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்ஸவர் பிரகலாதவரதன் அருள்பாலிக்கிறார். வைகானச ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. ராஜராஜ சோழன், விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் உள்ளிட்டோர் இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். ஆற்காடு நவாப், பிரெஞ்சு அதிகாரிகள் உள்ளிட்டோரும் நரசிம்மருக்கு அணிகலன்கள் பல அளித்துள்ளனர்.
இங்கே கனகவல்லித் தாயாரை வழிபட்டால் மனநலன் பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் ஆகியவற்றால் துன்புறுபவர்கள் நன்மை பெறுவர் என்பது நம்பிக்கை.
வேண்டுதல்: இது ஒரு பரிகாரத் தலமும்கூட. நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும். குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் - பிசாசு பிடித்தவர்கள், நரம்புத் தளர்ச்சியில் துன்புறுபவர்கள் நலம் பெற இங்கே வேண்டிக் கொள்கின்றனர். சுவாதி நட்சத்திரம், பிரதோஷ நாள், செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஹோரையில் நரசிம்மரை தரிசித்தால் குறைகள் தீரும். வேண்டுதல் நிறைவேறும். நரசிம்மர் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றுவது பலன் தரும் நேர்த்திக்கடன்.
தரிசன நேரம்: காலை 7.30- 12 மணி வரை, மாலை 4.30- 9.00 மணி வரை
விழாக்கள்: சித்திரை சுவாதி நரசிம்மர் ஜயந்தியன்று தேர்த் திருவிழா, மாசி மகத்தில் புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி, ஐப்பசியில் பவித்ர உற்ஸவம், வைகுண்ட ஏகாதசி மாலை கருட சேவை, மாட்டுப் பொங்கலன்று தீர்த்தவாரி.
அமைவிடம்: புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 11 கி.மீ. தொலைவிலும், கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும் உள்ள தவளக்குப்பம் வழியாக மேற்கு நோக்கிச் செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவு. அபிஷேகப்பாக்கம் என அழைக்கப்படுகிறது.