Thursday, September 29, 2016

திருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்

திருமந்திர  ரகசியம் - ஓர் அறிமுகம்
---------------------------------------------
-------

{ திருமந்திரத்தின் முழு சாரமும் யோகத்தை
அறிய ,பயில விரும்பும் நண்பர்களுக்காக ....
இதோ.......}

"மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது!
காலை எழுந்து கருத்துஅறிந்து ஓதிடின்
ஞாலத் தலைபவனை நண்ணுவர் அன்றே!"
-திருமூலர்

சைவ சமய திருமுறைகளில் பத்தாவது
திருமுறையாக போற்றப் படுவது திருமூலர்
அருளிய திருமந்திரம்.

பன்னிரு
திருமுறைகளில் முதல் ஒன்பது திருமுறைகள்
தோத்திர வகையாகவும், பத்தாவது
திருமுறையான திருமந்திரம் சாத்திர
வகையாகவும், பதினோராவது திருமுறை
பிரபந்த வகையாகவும், பன்னிரெண்டாவது
திருமுறை புராணவகையாகவும் குறிக்கப்
பட்டிருக்கிறது.

சாத்திரவகையான
திருமந்திரம்தான் மெய்யான இறையின்
தத்துவத்தையும், அதன் மேலான
மாண்பினையும் தமிழுக்கு உரைத்த ஆதிநூல்
என்றால் மிகையில்லை.

என்னுடைய தனிப்பட்ட அவதானத்தில்,
அழியும் தன்மையுடைய நமது உடலை
யோகத்தின் மூலம் பக்குவமாக்கி,
சிற்றின்பங்களின் பிடியில் இருந்து விலகி,
எல்லா உயிர்களிடத்தும் கபடமில்லாத அன்பு
செலுத்துவதன் மூலம் நம் சீவனை
சிவனாக்கி மரணமில்லா பெருவாழ்வு
வாழ்வதன் நுட்பநிலைகளை விவரிக்கும்
நூலாகவே திருமந்திரத்தை பார்க்கிறேன்.

இந்த நூலில் பொதிந்திருக்கும் பல அரிய
தகவல்கள் இன்னமும் முழுமையாக
கட்டவிழ்க்கப் படவில்லை. எளிய
சொல்லாடல்களால் அமையப் பெற்ற இந்த
பாடல்களின் பின்னே இருக்கும் சூட்சுமங்கள்
சிலதை நானறிந்த வகையில் இந்த வாரத்தில்
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திருமூலரின் வாக்கின் படி மூவாயிரம்
பாடல்களால் ஆன இந்த நூல் நமக்கு
முழுமையாக கிடைத்திருக்கிறது
முதலில் இந்த நூலின் அமைப்பு எத்தகையது
என்பதை பார்ப்போம்.

மொத்தமாக பத்து
பிரிவுகளாய் பிரிக்கப் பட்டுள்ள இந்த நூலின்
முதல் பகுதியை “பாயிரம்” என்கின்றனர்.

மற்ற ஒன்பது பிரிவுகளும் “தந்திரங்கள்”
என்று அழைக்கப் படுகின்றன.

பாயிரம்
-------------

இதில் மொத்தம் நூற்றி ஐம்பத்தியாறு
பாடல்கள் உள்ளது.

இந்த பாடல்கள்
பதின்மூன்று தலைப்புகளில் பிரிக்கப்
பட்டிருக்கிறது.

அவை முறையே,..

கடவுள்
வாழ்த்து, அந்தணர் ஒழுக்கம், அரசாட்சி முறை,
அவையடக்கம், அறஞ்செய்யான் திறம்,
அறஞ்செய்வான் திறம், ஆகமச் சிறப்பு, ஆகுதி
வேட்டல், மும்மூர்த்திகளின் முறைமை,
வானச் சிறப்பு, வேதச்சிறப்பு, குருபரம்பரை,
திருமூலர் தன் வரலாறு கூறுதல் என
பிரிக்கப் பட்டிருக்கிறது.

பாயிரம் என்ற முதல் பிரிவில்
பதின்மூன்று தலைப்புகளின் கீழ் நூற்றி
ஐம்பத்தியாறு பாடல்கள் இருப்பதையும்
பார்த்தோம். இன்று தந்திரங்களின்
கட்டமைப்பினை பற்றி பார்ப்போம்.

முதலாம் தந்திரம்
----------------------------

பதினேழு தலைப்புகளின் கீழ் நூற்றி
அறுபத்தியாறு பாடல்களைக் கொண்டது
முதலாம் தந்திரம்.

இது பொதுவில் ஒழுக்க
நெறிகளைப் பற்றி கூறுகிறது.

இரெண்டாம் தந்திரம்
----------------------------------

இருபத்தி ஐந்து தலைப்புகளின் கீழ் இருநூற்றி
எட்டு பாடல்கலைக் கொண்டது இரெண்டாம்
தந்திரம். இவை சிவனையும், சீவனையும்
விளக்குகின்றன.

மூன்றாம் தந்திரம்
----------------------------

இருபத்தியொரு தலைப்புகளின் கீழ்
முன்னூற்று முப்பத்துமூன்று பாடல்களைக்
கொண்டது மூன்றாம் தந்திரம். இவற்றில்
பெரும்பாலும் யோகம் பற்றிய விளக்கங்கள்
காணக் கிடைக்கிறது.

நான்காம் தந்திரம்
-----------------------------

பதின்மூன்று தலைப்புகளின் கீழ் ஐநூற்று
முப்பது பாடல்களைக் கொண்டது நான்காம்
தந்திரம். இவற்றில் உபாசனை வழிமுறைகள்
கூறப் பட்டிருக்கிறது.

ஐந்தாம் தந்திரம்
--------------------------

இருபது தலைப்புகளின் கீழ் நூற்றி
ஐம்பத்திநான்கு பாடல்களைக் கொண்டது
ஐந்தாம் தந்திரம்.

சைவ சமயத்தின் வகைகள்
மற்றும் சரியை, கிரியை, யோகம், ஞானம்
போன்றவைகளை இந்த பகுதி விளக்குகிறது.

ஆறாம் தந்திரம்
-------------------------

பதின்நான்கு தலைப்புகளின் கீழ் நூற்றி
இருபத்தியெட்டு பாடல்களைக் கொண்டது
ஆறாம் தந்திரம்.

குருதரிசனம், ஞானநிலை,
துறவு, தவம் மற்றும் திருநீற்றின் பெருமைகள்
இந்த பிரிவில் காணலாம்.

ஏழாம் தந்திரம்
-----------------------

முப்பது தலைப்புகளில் நானூற்றிஏழு
பாடல்களைக் கொண்டது ஏழாம் தந்திரம்.

இவை ஆறு ஆதாரங்கள், ஆறு லிங்கங்கள்,
புலனடக்கம், தகாத ஒழுக்கம் பற்றி
விளக்குகின்றது.

எட்டாம் தந்திரம்
-------------------------

முப்பத்தி மூன்று தலைப்புகளில் ஐநூற்றி
பதினெட்டு பாடல்களைக் கொண்டது எட்டாம்
தந்திரம். இவை சித்தாந்த விளக்கம், ஞானிகள்
செயல் மற்றும் முக்குணங்கள் பற்றி
விளக்குகின்றது.

ஒன்பதாம் தந்திரம்
------------------------------

இருபத்தி இரண்டு தலைப்புகளில் நாநூறு
பாடல்களைக் கொண்டது ஒன்பதாம் தந்திரம்.

இவை குரு தரிசனம், மூவகை
பஞ்சாட்சரங்கள், ஞான உதயம், வாழ்த்து
என்பது பற்றி விளக்குவதோடு திருமந்திரம்
நிறைவடைகின்றது.

ஆக மொத்தமாய் பாயிரம் சேர்த்து ஒன்பது
தந்திரங்கள் நூற்று தொன்னூற்றி ஐந்து
தலைப்புகளுடன், மூவாயிரத்தி
எண்பத்தியோரு பாடல்களைக் கொண்ட
பொக்கிஷம்தான் திருமந்திரம்.

குருவருளைப் பெற ஓர் எளிய வழி தினமும்
காலையில் எழுந்து திருமந்திரத்தை உணர்ந்து
படித்து வந்தாலே சித்திக்கும். இப்படி
சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்ட
திருமந்திரத்தில் மறைபொருளாய்
உணர்த்தப்பட்டு இன்று வரை ரகசியமென
கருதப் படும் ஒன்றினைப் ப்ற்றி பார்ப்போம்......

No comments:

Post a Comment