Saturday, September 24, 2016

நந்திகேஸ்வரர்.

சிவபெருமானின் இருப்பிடமான கயிலாயத்தில் வாயிற்காப்பாளனாகவும், பூதகணங்களின் தலைவனாகவும் இருப்பவர் நந்திகேஸ்வரர். இறைவன் சிவபெருமானைச் சந்திக்க வருபவர்கள் அனைவரும் முதலில் தன்னை வணங்கி, தன்னிடம் அனுமதி பெற்ற பின்புதான் இறைவனைச் சந்திக்க முடிகிறது என்று இவருக்குள் தோன்றிய எண்ணம், பின்னர் தற்பெருமையாக மாறியது.

தற்பெருமையின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் நந்தியை, அதிலிருந்து விடுவித்து அவருக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்த சிவபெருமான், ஒருநாள் நந்தியிடம் ஒரு மலரைக் கொடுத்து, மலர் வாடுவதற்கு முன்பாக விஷ்ணுவிடம் கொடுத்துவிட்டுத் திரும்பும்படி சொல்லி அனுப்பி வைத்தார்.

நந்தியும் சிவபெருமான் கொடுத்த மலரைக் கையில் எடுத்துக் கொண்டு வைகுண்டம் சென்றார். அங்கு அவர், வாயிற்காப்பாளர்களாக இருந்த துவார பாலகர் களான ஜயன், விஜயன் ஆகிய இருவரிடமும் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். அதைக் கண்ட வாயிற்காப்பாளர்கள் அவரை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.

தன்னை வாயிலிலேயே தடுத்து நிறுத்தியதைக் கண்டு கோபமடைந்த நந்தி, “வாயிற்காப்பாளர்களே, இறைவன் சிவபெருமான் கொடுத்தனுப்பிய மலரைக் கொண்டு வந்த என்னை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தித் தவறு செய்கிறீர்கள்” என்று சொல்லிச் சத்தம் போட்டார்.

“நந்தியே, ஏன் சத்தம் போடுகிறாய், நீயும் எங்களைப் போன்று வாயிற்காப்பாளன்தானே, முக்கியமானவர் களைச் சந்திப்பதற்கு முன்பு, அங்கிருக்கும் வாயிற்காவலர்களிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டுமென்பது உனக்குத் தெரியாதா? தவறை நீ செய்து விட்டு, எங்களைத் தவறு செய்ததாகச் சொல்கிறாயே?” என்று அவர்களும் சத்தம் போட்டனர்.

அவர்கள் சொன்னதைக் கேட்டு மேலும் கோபமடைந்த நந்தி, “நான் கயிலாயத்தின் வாயிற்காப்பாளன் மட்டுமில்லை, பூதகணங்களின் தலைவனாகவும் இருப்பவன். நீங்கள் இருவரும் எனக்கு இணையானவர்களில்லை. மேலும், என்னைத் தடுக்கும் தகுதி உங்களிருவருக்குமே இல்லை” என்று சத்தமாகப் பேசினார்.

வாயிற்காப்பாளர்கள் இருவரும், “நந்தியே, இறைவன் விஷ்ணு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார். நீ வீணாகச் சத்தமிட்டு அவருடைய உறக்கத்தைக் கலைத்து விடாதே” என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னதைக் கேட்ட நந்தி, “அவருடைய உறக்கம் கலைந்தால் கலையட்டும், நான் அவரிடமே நியாயம் கேட்கிறேன். உங்களிருவரிடமும் பேசி எந்தப் பயனுமில்லை” என்று மேலும் சத்தமாகப் பேசினார்.

வெளியில் நடந்த சத்தத்தைக் கேட்டு விழித்த விஷ்ணு, “வாயிற்காப்பாளர்களே, நந்தியை உள்ளே அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார். விஷ்ணு சொன்னதைக் கேட்டதும், நந்தி அவர்களிருவரையும் மதிக்காமல் உள்ளே சென்று விட்டார். அவர் அங்கிருந்த விஷ்ணுவை வணங்கி, சிவபெருமான் கொடுத்தனுப்பிய மலரை அவரிடம் கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்ட விஷ்ணு அவரைப் பார்த்துச் சிரித்தபடி, “நந்தியே, மலர் கொடுத்தனுப்பிய இறைவனுக்கு என் நன்றியைச் சொல்லிவிடு” என்றார். நந்தியும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தார்.

வெளியில் வந்த நந்தி, விஷ்ணுவைக் காண வாயிற்காப்பாளர்கள் அனுமதியில்லாமலே தான் உள்ளே சென்று வந்த பெருமையுடன், அங்கிருந்த வாயிற்காப்பாளர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட நினைத்தார்.

அதைக் கண்ட வாயிற்காப்பாளர்கள் இருவரும் கோபமடைந்து, “நந்தியே, நீ ஒரு வாயிற்காப்பாளனாக இருந்தும், வாயிற்காப்பாளர் அனுமதியின்றி உள்ளே சென்று தவறு செய்ததுமில்லாமல், எங்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கவும் செய்கிறாய். உன்னுடைய இந்தத் தவறுக்குத் தண்டனையாக, உன் உடல் முழுவதும் வெப்பமடைந்து, அதனால் ஏற்படும் எரிச்சலில் பெரும் துன்பமடைவாய்” என்று சாபம் கொடுத்தனர்.

அவர்கள் கொடுத்த சாபத்தைக் கேட்ட நந்தி, “பூத கணங்களின் தலைவனான எனக்குச் சாபம் கொடுக்கும் தகுதியே உங்களுக்கு இல்லை, எனக்கு நீங்கள் சாபம் தருவது வேடிக்கையாக இருக்கிறது” என்று சொல்லிப் பலமாகச் சிரித்தார்.

அவர் சிரிப்பதைக் கண்ட வாயிற்காப்பாளர்கள் இருவரும், “நந்தியே, கயிலாயத்தில் வாயிற்காப்பாளனாக இருந்த உன்னிடம் அனுமதி பெறாமல், உள்ளே செல்ல முயன்ற ராவணனுக்குத் தண்டனையாக அவனது நாடு, ஒரு குரங்கால் அழிந்து போகும் என்று சாபம் கொடுத்த நீ, அதையெல்லாம் மறந்து, அதே தவறைச் செய்திருக்கிறாய். எனவே எங்களின் சாபம் உனக்கும் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்கும்” என்றனர்.

அதைக் கேட்ட நந்தி சிரித்தபடியே, “வாயிற்காப்பாளர்களே, நீங்கள் கொடுத்த சாபம் என்னை ஒன்றும் செய்யாது” என்று சொல்லியபடி அங்கிருந்து வெளியேறினார். அவர் வைகுண்டத்திலிருந்து வெளியேறிய நிலையில் வைகுண்ட வாயிற்காப்பாளர்களான துவாரபாலகர்கள் கொடுத்த சாபம் அவரை வந்தடைந்தது. அவர் உடல் முழுவதும் வெப்பம் பரவி எரிச்சல் ஏற்பட்டது. அந்த எரிச்சலால் அவர் பெரும் துன்பமடைந்தார்.

கயிலாயம் சென்ற அவர் சிவபெருமானை வணங்கி, விஷ்ணுவிடம் தான் மலரை வாடுவதற்கு முன்பாகக் கொடுத்து வந்த தகவலைச் சொன்னார். பின்னர் அவர் சிவபெருமானிடம், “இறைவா, நான் வைகுண்டம் சென்ற போது, அங்கிருந்த துவாரபாலகர்கள் என்னை மதிக்கவும் இல்லை, உள்ளே செல்ல அனுமதிக்கவும் இல்லை. அவர்களைக் கண்டித்த எனக்கு அவர்கள், உடலில் எரிச்சல் ஏற்பட்டுத் துன்பமடைவாய் என்று சாபம் கொடுத்து விட்டனர். அந்தச் சாபத்திலிருந்து தாங்கள் என்னை உடனே விடுவித்தருள வேண்டும்” என்று வேண்டினார்.

அதைக் கேட்ட சிவபெருமான், “கயிலாயத்திற்கு என்னைத் தேடி வரும் அனைவரும் உன்னை வணங்கி, உன்னிடம் அனுமதி பெற்ற பின்பே என்னைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கும் நீ, வைகுண்டத்தில் வாயிற்காப்பாளர்களாக இருப்பவர்களிடம் அனுமதி பெற்றுத்தானே சென்றிருக்க வேண்டும். தவறு செய்த உனக்கு அவர்கள் கொடுத்த சாபம் சரியானதுதான்” என்றார்.

உடனே நந்தி, “இறைவா, நீங்களே இப்படிச் சொல்லலாமா? அந்தச் சாபத்திலிருந்து என்னை விடுவித்து, என்னுடைய துன்பத்தைப் போக்கி அருளுங்கள்” என்று வேண்டினார்.

அதைக் கேட்ட சிவபெருமான், “உனக்குச் சாபம் கொடுத்தது வைகுண்ட வாயிற்காப்பாளர்கள் என்று நினைக்காதே, வாயிற்காப்பாளர்கள் வழியாக உன்னுடைய தற்பெருமைக்கு விஷ்ணு கொடுத்த தண்டனை அது. எனவே பூலோகம் சென்று விஷ்ணுவை வழிபட்டு, அந்தச் சாபத்திலிருந்து விடுபட முயற்சி செய்” என்றார்.

இறைவன் சொன்னதைக் கேட்ட நந்தி, அவரிடம் விடைபெற்றுப் பூலோகம் சென்றார்.

விமோசனம்

பூலோகம் வந்த நந்தி தன்னுடைய உடலில் ஏற்பட்ட கடுமையான எரிச்சலால் பெரும் துன்பமடைந்தார். அந்தத் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக விஷ்ணு வழிபாட்டைச் செய்ய நினைத்து ஒரு இடத்தில் போய் அமர்ந்தார். ஆனால், அவர் அந்த இடத்தில் அமர முடியாதபடி அவருடைய உடலின் எரிச்சல் முன்பிருந்ததை விட அதிகமாகத் தொடங்கியது.

உடல் எரிச்சல் தந்த துன்பத்தைத் தாங்க முடியாத அவர், அங்கிருந்து எழுந்து ஓடத் தொடங்கினார். ஓடிக் கொண்டேயிருந்த நிலையில், அவரின் உடல் எரிச்சல் சிறிது குறைந்தது. அதனால், அவர் எங்கும் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்தார். பல நாட்களாக ஓடிக் கொண்டே இருந்த அவர், வழியிலிருந்த செண்பகாரண்யம் எனும் வனப்பகுதிக்குள் நுழைந்தார்.

அந்தக் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தவுடன் அவரது உடலிலிருந்த எரிச்சல் பெருமளவு குறைந்து போனது. சற்று நேரம் இளைப்பாறிய அவர், மெதுவாக நடந்து சென்றார். அங்கே விஷ்ணு கோவில் ஒன்று இருப்பது அவருக்குத் தெரிந்தது.

இறைவன் விஷ்ணுவின் திருவடிகளில் அமர்ந்திருந்த மகாலட்சுமி, இறைவன் மார்பில் வசிக்க வேண்டும் என்று விரும்பிய நிலையில், அந்த இடத்தைப் பெறுவதற்காக இறைவன் விஷ்ணுவை வேண்டித் தவமிருந்து தான் விரும்பிய இடத்தைப் பெற்ற கோவில் அது.  

அந்தக் கோவிலைக் கண்ட நந்தி, அங்கேயே தனது வழிபாட்டைச் செய்ய முடிவு செய்தார். அந்தக் கோவிலைச் சுற்றிலும் இருந்த செடி, கொடிகளைஎல்லாம் அகற்றி, அந்த இடம் முழுவதையும் சுத்தம் செய்தார். பிறகு, கோவிலுக்கருகிலிருந்த குளத்தில்  நீராடினார். அந்தக் குளத்திலிருந்து, நீர் கொண்டு வந்து, அங்கிருந்த விஷ்ணு சிலையைச் சுத்தம் செய்தார். அந்தக் காட்டுப் பகுதியில் மலர்ந்து கிடந்த செண்பக மலர்களைப் பறித்துக் கொண்டு வந்து சிலையினை அலங்கரித்துத் தினமும் வழிபாடு செய்து வந்தார்.

அவருடைய தொடர் வழிபாட்டில் மகிழ்ந்த விஷ்ணு ஒருநாள், அவர் முன்பாகத் தோன்றினார். அவர் நந்தியைப் பார்த்து, “நந்தியே, நீ மனம் நிறைந்து செய்த வழிபாட்டால் என் மனம் குளிர்ந்தது போல், என் வாயிற்காப்பாளர்கள் உனக்களித்த சாபம் நீங்கி, இனி உன் உடலும் குளிர்ச்சியடையும்” என்றார்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த நந்தி அவரை வணங்கினார். பின்னர் அவர் விஷ்ணுவிடம், “சுவாமி, நான் சாப விமோசனம் பெற்ற இந்தத் தலம் இனி என்னை நினைவூட்டும் விதமாக அமைந்து சிறப்படைய வேண்டும்” என்று வேண்டினார். விஷ்ணுவும், “நந்தியே, நீ சாப விமோசனம் பெற்ற இத்தலம் இருக்குமிடம் இனி, நந்திபுரம் என்று உன் பெயரையும் சேர்த்து அழைக்கப்பட்டுச் சிறப்படையும்” என்றார்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த நந்தி விஷ்ணுவை வணங்கி, அவரிடமிருந்து விடைபெற்றுக் கயிலாயம் சென்றார்.

தனது சிறு செயல்பாட்டைக் கூடப் பெருமையாகப் பேசிக் கொள்ளும் பலர், அதே செயலை அடுத்தவர்கள் செய்யும் போது, அதைச் சாதாரணமாக மதிப்பிடுகின்றனர். இந்தத் தற்பெருமை கொண்டவர்களுக்குத் துன்பமே வந்து சேரும் என்பதை உணர்த்துவதாக நந்தி பெற்ற சாபமும், விமோசனமும் உணர்த்துகின்றன.

No comments:

Post a Comment