Friday, September 26, 2014

ஆலயதத்துவம்

ஆலயதத்துவம்

ஆன்மா லயித்திருக்கும் இடம் ஆலயம். அந்த உண்மையை நமக்கு உணர்த்துவதே ஆலயதத்துவம். பகவான் உலகம் என்ற அண்டத்தைப் படைத்தது போலவே உடல் என்ற பிண்டத்தையும் படைத்திருப்பதால் அண்ட, பிண்ட தத்துவங்களில் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த உண்மையைக் கண்டறிந்தவர்கள் யோகிகள். அவர்கள் தான் போகிகளுக்கும், ரோகிகளுக்கும் வேத, ஆகம சாஸ்திரங்களை விளக்கி வைத்து நாமும் புரிந்து கொள்ள வழி செய்தவர்கள் (யோகி - ஒருவேளை உண்பவன், போகி - இருவேளை உண்பவன், ரோகி - பல முறை உண்பவன் ஆதலால் வியாதிகளுக்கும், துன்பங்களுக்கும் அடிமைப்பட்டவன்)

யோகிகள் உணவுக் கட்டுப்பாடுள்ளவர்கள் என்பதால் மனத்தைக் கட்டுப்படுத்தி தியானம் செய்யும் பழக்கமுள்ளவர்கள். அதன் பயனால் யோகபலம் பெற்றவர்கள். எதையும் செய்யவும் உணரவும் சக்தி பெற்றவர்கள். குறிப்பாக, ‘லம்பிகா’ என்ற யோகப் பயிற்சியினால், நாக்கினை இருபுருவங்களுக்கும் மத்தியில் செலுத்தி அங்கிருந்து பெருகும் அமிர்தபானத்தைப் பருகுவதால் அவர்களுக்குப் பசி, தாகம் இருக்காது. புருவமத்தியில் (லலாடம்) தவமியற்றுவர்களே இறைவனைக் கண்டு மகிழ்ந்தவர்கள். உடலின் காமகூடத்தில் ஏற்படும் வீரியங்களை உடலின் மேல்நோக்கிச்செலுத்தி, உடலெங்கும் பரவச் செய்து கிடைக்கும் பேரின்பத்தை நன்கு உணர்ந்தவர்கள். ஆதலால், சிற்றின்பத்தை ஒதுக்கி, சரீரபலம், மனோபலம் ஆகியவற்றினால் உடலுள்ளிருக்கும் ஆத்மா, பரமாத்மாவுடன் கலந்து காலம் கழிவதே தெரியாமல் இறையுணர்வாகிய இன்பத்திலேயே திளைத்தவர்கள். ஆதிசங்கரர், இவர்களை “ஊர்த்துவரேதசர்கள்’ என்கிறார்.
வீரிய விந்துகளை வெளியே செலுத்துவதால் (சங்கினி நாடிமூலம்) கிடைப்பது சிற்றின்பம். இதற்கு மற்றவரின் உதவியும் தேவை. சிற்றின்பர்களுக்கு பசியும், தாகமும் இருந்து கொண்டே இருப்பதால் மனக்கட்டுப்பாடு இருப்பதில்லை. சரீரபலம் குறையும். இவர்களுக்கு ஆன்மபலம் அவசியம் தேவை என்பதை உணர்ந்த யோகிகள் அவர்களுக்கு மனபலம் ஏற்பட ஆலயங்களை எழுப்பினார்கள் என்பதே காலம் காட்டும் வரலாறு. அதற்கு பிண்டதத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு எளிதில் பழகி தொடர்ந்து ஆலயவழிபாடு செய்வதால் இறையின்பம் காண வழி செய்து கொடுத்தனர்.
ஆலயம்: மனித ஆகிருதியாகிய பிண்டம் - இது அடிப்படை
அதில் கால்கள் - முன் கோபுர(ங்கள்)ம்
பாதப்படலங்கள் - கோபுரத்தின் பக்கங்கள்
பாதங்களின் இடைவெளி - கோபுரவாயில்
குதம் - பலிபீடம்குஹ்யம் (ரகசிய இடம்) - துவஜஸ்தம்பம் (எ) கொடிமரம்
அண்டகோசம் - வாகனங்கள்
வயிறு - மணிமண்டபம்
தொப்புள் - மணிமண்டபத்திலுள்ள மணி
மார்பு - மகாமண்டபம்
கழுத்து - அர்த்தமண்டபம்
தோள்கள் - உட்பிராகாரங்கள்
கைகள் - வெளிப்பிராகாரங்கள்
விலாப்புறங்கள்/கைகளுக்குள்ள இடைவெளி - இவையும் வெளிப்பிராகாரங்கள்
செவிகள் - பிராகாரப் பலகணிகள் (நுழைவாயில்கள்)
முகம் - ‘அந்தராளம்’ (எ) முன்மண்டபம் (மூலஸ்தானத்திற்குமுன்)
கண்கள் - கர்ப்பக்கிரக நிலைத்தூண்கள்மூக்கு - அவற்றின் மேலுள்ள கல்
தலை - கர்ப்பக்கிரகம்
ஆயிரம் இதழ்கொண்ட தாமரரை - விமானம்
ஆத்மா - விமானத்தின் கீழேயுள்ள விக்ரஹம்
இருதயக்கமலம் - ஆலயத்தடாகம்
இடையும் அதன் வலம், இடப் பக்கங்களும் - பின்னும் பக்கங்களில் உள்ள கோபுரங்களும்
எலும்புகள் - சுவர்களின் கற்கள்
நரம்புகள் - கல்தூண்கள்
மாமிசப்பகுதி - சுண்ணாம்பு/சிமெண்ட் கலவைகள்
ரஸம், ரத்தம், மாமிசம், மேதஸ் - (உடலில் கொழுப்பு,) எலும்பு, மஜ்ஜை, சுக்லம் (கண்ணின் வெள்ளைப்பகுதி) என்ற ஏழு தாதுக்களும் - ஏழு மதிற் சுவர்கள்
அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்த மயம் என்ற ஐந்து கோசங்கள் - ஐந்து மதில்களையும்
ஸ்தூல - ஸுக்ஷ்ம - காரணசரீரங்கள் - மூன்று மதில்களையும்
ஒரேமதில் இருந்தால் இந்த அத்தனை தத்துவங்களுமே அதில் அடங்கி விட்டதாகவும் அறிய வேண்டும். சிலயோகிகள், இறைவனின் நிற்கும் திருக்கோலமே கோபுர வடிவம் என்றும் அதைச்சார்ந்த ஆலயத்தை இறைவனின் சயன(படுத்த)க் கோலமாகவும் கூறுவர். ‘கோபுரதரிசனம் கோடிபுண்ணியம்’ என்று கூறியதன் உண்மை இதுதானே?
பூஜை செய்யும்போது (க்ஷோடச) பதினாறு வகை உபசாரம் செய்வதை பஞ்ச பூத. சம்பந்தமானவை என்பதையும் அறியவும்.
1. பூமி - நைவேத்தியம்
2. நீர் - ஸ்நானம்
3. நெருப்பு - தீபம்
4. காற்று - சாமரம்
5. ஆகாயம் - மணிஓசை
ஏனெனில் இவை யாவும் இறைவனால் படைக்கப்பட்டவை. இறைவனுக்கே அர்ப்பணிக்கப்படுகின்றன.
குறிப்பாக ஈசன் எவ்வடிவிலுள்ளான் என்பதைக் கூற முடியாது என்றாலும் மனித வடிவில் வழிபடுவது ஏன்? அதற்கு ஒரே காரணம், மனித இனத்தின் மனம், தன்னைப் போன்ற வடிவத்தை ஆதரித்து எளிதாக ஏற்றுக் கொள்கின்றது. (மானைக் காட்டியே மானைப்பிடிப்பது போல்) அதனால்தானோ ஸ்ரீராமன், புத்தர், சங்கரர், ஸ்ரீராமகிருஷ்ணபரம ஹம்சர், இயேசு நாதர், முகமது நபி போன்ற அவதார புருஷர்கள் மனித வடிவில் வந்தனர்? குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதோபதேசம் செய்யும்போது அருச்சுனனுக்கு விஸ்வரூபம் எடுத்து தரிசனம் காட்டிய போது அதைக் காண ஞானக்கண் பெற்றும் கூட, பவந்து பகவானை மீண்டும் மனித வடிவிற்குத் திரும்பிவரப் பிரார்த்தனை செய்தான்.
ஆதலால் இறைவனின் உண்மையான திருவுருவத்தைக் காண நம்மால் இயலாது என்பதே நிதர்சனம். வேறு பல வடிவங்களிலும் நம்மால் காண இயலாது. நினைத்துப் பார்க்கவும் மனம் இடம்தராது.
“கண்ணுறும் வடிவத்திலேயே கடவுள் உளன்” என்று நினைத்தலே இறைவன் நாம் காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது தெளிவாகிறது. யோகிகள், நமக்குக் காட்டிய பக்தி மார்க்கமே ஆலய வழிபாடு மூலம்தான். பக்தியற்ற இறைவழிபாடு உயிரற்ற உடலுக்குச் சமம்.

No comments:

Post a Comment