Friday, October 17, 2014

தீபாவளி என்னும்.....

விரதமிருந்தால் உடலும் உள்ளமும் தூய்மையடையும் விரதங்கள் பல அவற்றில் சிவபெருமானை வழிபடும் விரதங்கள் எட்டு எனக் கந்தபுராணத்தில் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் கூறுகிறது.
1. சோமவிரதம்:
2. திருவாதிரை விரதம்:
3. உமா மகேசுவர விரதம்:
4. மகாசிவராத்திரி விரதம்
5. கேதார விரதம்
6. கல்யாண சுந்தரர் விரதம்
7. சூல விரதம் (பாசுபத விரதம்)
8. இடப விரதம் (அஷ்டமி விரதம்)
தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக எங்கும் கொண்டாடுகின்றார்கள். ஆனால் அதன் உண்மையை அறிந்தவர்கள் ஒரு சிலரே பெரும்பாலானோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார் அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள். பிராக்சோதிடபுரியை ஆண்ட நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் அரக்கனை அழித்த நாளுக்கு ஒரு
கொண்டாட்டம் நிகழ்வது எங்கும் எக்காலத்தும் இருந்தது இல்லை.
அப்படி இருக்குமாயின் இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனை, பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்த நாகாசுரன், ஜலந்தராசுரன், இரண்யாட்சன், திருணாவர்த்தன் இப்படி புகழ் பெற்ற அசுரர்களை எல்லாம் கொன்ற நாளைக் கொண்டாடுவதாயின் நம் ஆயுளே அதற்குச் சரியாகிவிடும். ஆகவே, நரகாசுரனைக் கொன்றதற்காக தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் = விளக்கு; ஆவளி = வரிசை
தீபத்தை வரிசையாக வைத்து பிரம்ம முகூர்த்தத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்து நீராடி, சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள் தீபாவளி என உணர்க.
தீபாவளியன்று பகல் இரவு முழுவதும் பட்டினி இருந்து இரவில் தீபங்களை வரிசையாக வைத்துச் சிவபூசை செய்து விடியுமுன் நீராடி புத்தாடை உடுத்தி சுத்த சைவ உணவு உண்டு அனுஷ்டிப்பது தீபாவளி விரதமாகும்.
தீப மங்கள ஜோதியாக விளங்கும் பெருமானை நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி
வணங்குகின்றார்களன்றோ?
"விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது ஞானசம்பந்தர் வாக்கு."
தீபாவளியன்று மது மாமிசங்களையுண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவர். இனியேனும் இந்தத் தீய நெறியைக் கைவிட்டுத் தூயநெறி நின்று நலம் பெறுவார்களாக.
தீபாவளி விரதம் காலாந்தரத்தில் பல மாறுதல்கள் ஆகிவிட்டது. தீபாவளியன்று பகலும் இரவும் வயிறு புடைக்க சாப்பிட்டுத் தூங்கி விழித்து அதிகாலை
எண்ணெயிட்டு நீராடி புத்தாடை உடுத்தி பலப்பல ஆகாரங்கள் சாப்பிட்டுப் பட்டாசுகள் வெடித்துக் குசாலாக இருந்து கொண்டு நண்பர்களையும் பந்துமித்திரர்களையும் “கங்கா ஸ்நானம் ஆச்சோ” என குசலம் விசாரிப்பது நடைமுறையாகிவிட்டது.
தீபங்களை ஏற்றினால் இருள்தானே விலகிவிடும் அதுபோல நம் உள்ளக்கோயிலில் ஞானவிளக்கை ஏற்றினால் அறியாமையாகிய இருள்தானே விலகி
விடும். இதை அப்பர் சுவாமிகள்
"உடம்பு எனும் மனை அகத்து(வ்), உள்ளமே தகளி ஆக,
மடம் படும் உணர் நெய் அட்டி, உயிர் எனும் திரி மயக்கி
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்,
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே."
"உடம்பு என்ற வீட்டிலே மனமே அகலாக, பசு ஞானமான உணர்வே நெய்யாக, உயிரே திரியாக, சிவஞானத் தீயினால் விளக்கை ஏற்றி, அந்த ஞான ஒளியிலே இலயித்திருந்து பார்க்கில் கடம்ப மலர் மாலையை விரும்பி அணியும், முருகனுடைய தந்தையாகிய சிவபெருமானுடைய திருவடிகளைக் காணலாம்."
என்று அற்புதமாக பாடுகின்றார்.
இவ்வாறு ஞானவிளக்கேற்றி அறியாமையை அகற்றுவதே தீபாவளிப் பண்டிகையின் நோக்கம். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம்,மதம், மாச்சரியம் என்ற தீய சக்திகளை இறைவனுடைய திருநாமங்களாகிய பட்டாசுகளினால் சுட்டுத் தள்ளவேண்டும்.
இறைவனுடைய திருநாமங்கள் தீய சக்திகளை அழிக்கும் படைக்கலங்கலாகும்.
"படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்;
இடைக்கலம் அல்லேன்; எழு பிறப்பும்(ம்) உனக்கு ஆட் செய்கின்றேன்;
துடைக்கினும் போகேன்; தொழுது வணங்கித் தூ நீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய்-அணி தில்லைச் சிற்றம்பலத்து அரனே!"
"அழகிய தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே ! என்னை ஏழையர் செய்யக் கூடிய தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந் தெழுத்தினையும் அடியேன் நாவினில் நீங்காது கொண்டுள்ளேன். இடையில் ஒருபோதும் உனக்கு அடிமைத் தொண்டு செய்தலைத் தவிர்ந்தேன் அல்லேன். எழுவகைப்பட்ட பிறப்புக்களில் எந்தப் பிறவி எடுத்தாலும் எடுத்த பிறவிக்கு ஏற்ப உனக்கு அடிமைத் தொண்டு செய்கிறேன். அடியேனை நீ விலக்கினாலும் அடியேன் உன்னை விட்டுப் பெயரேன். எப்பொழுதும் உன்னை மனத்தால் தொழுது உடலால் வணங்கித் திருநீறு அணிந்து உன்னால் காக்கப்படவேண்டிய பொருளாக அடியேன் உள்ளேன்."
என்று அருளிச்செய்த நாவுக்கரசரது நற்றமிழ்ப் பாடலால் இது விளங்குகின்றது. இதனை அறிந்து நாம் தீபாவளி விரதமிருந்து சிவபெருமானின் திருவருளை அடைய வேண்டும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...! நமசிவாயம் வாழ்க...!

No comments:

Post a Comment