Wednesday, October 16, 2013

வறுமை விலக்கி எல்லா வளங்களையும் பெருக்கும் கனகதாரா ஸ்தோத்திரம்

வறுமை விலக்கி எல்லா வளங்களையும் பெருக்கும் கனகதாரா ஸ்தோத்திரம்


ஆதிசங்கரர் பிட்சைக்குப் போகும் போது ஒரு ஏழைப்பெண்மணியின் வீட்டின் முன் நின்று பிட்சை கேட்டார். வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது அந்த வீட்டில். அப்படியிருந்தும், அடுத்த நாள் துவாதசி பாரணைக்காக வைத்திருந்த ஒரு வாடிய நெல்லிக்காய் மட்டுமே உணவுப் பொருளாக இருந்தது! பிட்சை கேட்கும் பிள்ளைக்கு இதைத் தவிர கொடுக்க ஏதுமில்லையே என்று பெரிதும் மனம் குமைந்தாள் வீட்டுக்காரப் பெண்மணி. ஆனாலும், மனம் குறுகி அந்த தெய்வக் குழந்தைக்கு அந்த நெல்லிக்காயை பிட்சையிட்டாள். அடுத்த வேளை உணவுக்கு எந்தப் பொருளும் இல்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த அந்தப் பெண்மணியின் தாய்மைக் கனிவைக் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர்.

 மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட திருமகள், ‘‘இப்பெண்மணி, அவளது முந்தைய ஜென்மத்தில் குசேலரின் மனைவியாக வாழ்ந்தவள். கஷ்டங்கள் அனைத்தும் கண்ணன் அருளால் நீங்கி குபேர வாழ்க்கையை மேற்கொண்டபோது, தன் பழைய ஏழ்மைச் சம்பவங்களை மறந்து செல்வச் செருக்கால் ஒருவருக்கும் உதவி செய்யாமல் இருந்தாள். அந்தப் பாவமே இன்று அவளை தாத்ரியமாக வாட்டுகிறது’’ என்றாள்.

‘‘அம்மா! எது எப்படியிருந்தாலும் நாளை பாரணைக்கு வைத்திருந்த ஒரே ஒரு வாடல் நெல்லிக்கனியைக்கூட எனக்கு பிட்சையிட்டதால் அவளது அனைத்துப் பூர்வ ஜன்மப் பாவங்களும் நீங்கி விட்டன. தங்கள் கடைக்கண் பார்வை இந்தப் பெண்மணி மீது விழவேண்டும்’’ என்று கூறி கனகதாரா ஸ்தோத்திரத்தால் திருமகளைத் துதித்தார். அதனால் மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள். இன்றும் அந்த நிகழ்விற்கு சத்திய சாட்சியாய் கேரளாவில் அந்த வீடு ‘ஸ்வர்ணத்து மனை’ எனும் பெயரில் திகழ்கிறது. வரலட்சுமி தினத்தன்று ஆரம்பித்து இத்துதியை அனுதினமும் பாராயணம் செய்தால் அனைவரும் சகல செல்வவளங்களும் பெறுவது உறுதி.

அங்கம் ஹரே: புளக பூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுளாபரணம் தமாலம்
அங்கீக்ருதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாயா:


பொதுப் பொருள்: மகாவிஷ்ணுவின் திருமேனி நீலமேக வண்ணம் கொண்டது. அதாவது, மேகம்போல கருத்திருக்கும். ஆனால், தனக்கு நேர்
எதிரான, பொன் போன்று தகதகக்கும் திருமேனி கொண்ட மகாலட்சுமி, தனக்கு மனையாளாக அமைந்திருக்கிறாளே என்ற பெருமகிழ்ச்சியில் அவர் உடலே சிலிர்க்கும். அந்த சிலிர்ப்பில் உண்டான ரோமாஞ்சனம் எப்படி இருக்கிறது? சிறு சிறு மலர் மொட்டுகள் போலிருக்கிறது! மகாவிஷ்ணுவின் இந்த மகிழ்ச்சியை மகாலட்சுமி தன் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.

அந்த விழிகள் பொன்வண்டுகள் போன்றிருக்கின்றன. தமால விருட்சம் என்ற தேவலோக மரத்தின் மீது அரும்பியிருக்கும் மலர்மொட்டுகளிலிருந்து தேனை உண்ண அவற்றைச் சுற்றிச் சுற்றிப் பறந்துவரும் பொன்வண்டுகள் போன்ற கண்கள் ஸ்ரீதேவியினுடையது. எப்படி பொன்வண்டுக்கு மொட்டிலுள்ள தேன் மட்டுமே தோன்றுகிறதோ, அதேபோல தன் பக்தனின் நற்குணங்களை மட்டுமே மகாலட்சுமி கவனிக்கிறாள். அவனுடைய தோஷங்களை அவள் பொருட்படுத்துவதில்லை. மகாவிஷ்ணு தமால விருட்சம் போன்றவர்.

எப்படி ஒரு பிரமாண்டமான மரம் எல்லா ஜீவராசிகளுக்கும் நிழல் கொடுத்து அவர்களுடைய களைப்பைப் போக்கிப் புத்துணர்வு பெற வைக்கிறதோ அது போன்ற கருணை கொண்டவர் மகாவிஷ்ணு. இத்தகைய மகாவிஷ்ணுவின் ரோமாஞ்சனத்தைத் தன் கடைக்கண்ணால் நோக்கும் மங்கள தேவதையான மகாலட்சுமியின் அந்த கடாட்சம் எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கவல்லது. அந்த லட்சுமி கடாட்சம் எனக்கு எல்லா நலன்களையும், சௌகர்யங்களையும் வழங்கட்டும்.
(லட்சுமி கடாட்சத்துக்கு இந்த கனகதாரா ஸ்தோத்திரமே பிரதான உபாயமாகும். அதிலும் இந்த முதல் ஸ்லோகம் மிகவும் அந்தரங்கமான உபாயம் என்றும் சொல்லப்படுகிறது)

முக்தா முஹுர்விதததீ வதனே முராரே:
ப்ரேமத்ரபாப்ரணிஹிதானி கதாகதானி
மாலாத்ருஸோர்மதுகரீவ மஹோத்பலே யா
ஸாமே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:


பெரியதாக, நறுமணமிக்கதாக உள்ள நீலோத்பல மலரின் தேனை சுவைப்பதற்காக வண்டுகள் அணிவகுத்து வருவதும் பிறகு ரஸம் அருந்தித் திரும்புவதுமாக இருப்பதுபோல மகாலட்சுமியின் விழிகள் தன் நாயகனின் மலரனைய முகத்தின் மீது பார்வையாய் அமர்வதும், பிறகு வெட்கம் காரணமாக மீள்வதுமாக இருக்கின்றன. அதாவது, பக்தனின் மேன்மையான குணத்தால் ஈர்க்கப்பட்டு அவனுக்கு தன் பார்வையால் அனுக்ரகம் புரிய வரும் மகாலட்சுமி, அவனது குறைகளைப் பார்க்காமல் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டுவிடுவாள். இந்தகைய பெருந்தன்மையுள்ள மகாலட்சுமி அனைத்து ஐஸ்வர்யங்களையும் எனக்கு வழங்க வேண்டும்.

ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்தம் அநிமேஷம் அனங்கதந்த்ரம்
ஆகேகரஸ்திதகநீநிகபக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேந்மம புஜங்கஸயாங்கனாயா:


பேரழகு மிக்க இந்த மகாலட்சுமியைத் தன் மனையாளாக அடைந்த ஆனந்தத்தினால் அவளையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் மகாவிஷ்ணு. இதனால் அவர் பேரானந்தத்தை அடைகிறார். ஆனால், மகாலட்சுமியின் கண்களோ கருவிழிகளாலும் இமைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீர்க்கமாக விளங்குகின்றன. இப்படி மகாவிஷ்ணுவிற்கே பேரானந்தத்தை அளிக்கும் லட்சுமிகடாட்சமானது எனக்கும் எல்லா வளங்களையும் அருளட்டும்.

பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:


மகாவிஷ்ணுவின் மார்பில் கௌஸ்துப மாலை துலங்குகிறது. அதனை மிகுந்த வாஞ்சையுடனும் மதிப்புடனும் மகாலட்சுமி நோக்குகிறாள். உத்தம பத்தினியான அவளுடைய கருமை மிகுந்த விழிகள் நீல மணிபோல பிரகாசிக்கின்றன. அவளுடைய கடாட்சத்தாலேயே மகாவிஷ்ணுவும் எல்லா மேன்மைகளையும் பெற்றவராகிறார். அத்தகைய மகிமைமிக்க லட்சுமி கடாட்சம் எனக்கும் எல்லா மங்களங்களையும் அருள்வதாக.

காலாம்புதாளிலலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கனேவ
மாதுஸ்ஸமஸ்தஜகதாம் மஹனீய மூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்கவநந்தனாயா:


நீருண்டு, கருத்து, வானில் நிறைந்திருக்கும் மேகத்தினூடே மின்னல் கொடியாக மின்னுவதுபோல நாராயணனுடைய திருமார்பை ஸ்ரீதேவி ஆலிங்கனம் செய்கிறாள். பார்க்கவ மகரிஷியின் மகளான அவள் எல்லா உலகங்களுக்குத் தாயாகவும் விளங்குபவள். அவளுடைய பேரழகை யாரால் வர்ணிக்க முடியும்! அந்த சௌந்தர்ய தேவி எனக்கு மங்களங்களைக் கொடுக்கட்டும்.

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதுனி மன்மதேன
மய்யாபதேத்ததிஹ மந்தரம் ஈக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ச மகராலகன்யகாயா:


எந்தப் பார்வையின் பெருமையால் மங்களங்களுக்கு இருப்பிடமானவரும், மது என்ற அரக்கனை ஒழித்தவருமான மகாவிஷ்ணுவிடம் முதன் முதலாக மன்மதனுக்கு இடம் கிடைத்ததோ, அந்த சமுத்திர குமாரியான மகாலட்சுமியின் குளுமை மிக்க கடைக்கண் பார்வை என்மேல் கொஞ்சம் பட்டு எனக்கு எல்லா நலன்களையும் அருளட்டும்.

விஸ்வாமரேந்த்ரபத விப்ரமதானதக்ஷம்
ஆனந்தஹேதுரதிகம் முரவித்விஷோபி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணம் ஈக்ஷணார்த்தம்
இந்தீவரோதரஸஹோதரமிந்திராயா:
மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையில் சிறி


தளவாவது பெற்றவன், ஒரு சக்கரவர்த்தி போன்று, இந்திரன் போன்று அகண்ட ஐஸ்வர்யத்தோடு கூடியவனாகத் திகழ்வான். இந்தப் பார்வை, முரனை வென்ற திருமாலுக்கும் ஆனந்தப் பெருக்கை உண்டாக்கக்கூடியது. நீலோத்பல மலரின் உள் மென்மை போன்ற மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒரு க்ஷண நேரமாவது என் மேல் விழட்டும்.

இஷ்டா விஸிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே
த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதரதீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா:


அச்வமேதம் முதலிய யாகங்களினால்கூட சுத்தமாகாத மனதை உடையவர்களையும் தன் கருணைப் பார்வையால் தூய்மையாக்குபவள் மகாலட்சுமி. அந்தப் பார்வையால் அத்தகையவர்களும் சொர்க்கப் பதவி அடைவார்கள்! நன்கு விரிந்த தாமரை மலரின் நடுப்பாகம் போன்ற தண்மையான, மென்மையான அந்த கனிவுப் பார்வை, என் மனதைத் திருத்தி, சித்தியை அருளட்டும்.

தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மிந்நகிஞ்சன விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்மதர்மமபனீய சிராய தூரம்
நாராயணப்ரணயினீ நயனாம்புவாஹ:
கருணையாகிற அனுகூலக் காற்றுடன்


மகாலட்சுமியினுடைய கண்களாகிற நீருண்ட மேகம், கொடிய வறுமையால் துன்பப்படும் இந்த ஏழைக்கும் கருணை காட்டட்டும். மழைத் துளிக்காக
ஏங்கி நிற்கும் சாதகப் பறவை போல என்னிடமும் தோன்றும் பாவ கர்மமாகிய தாபத்தை என்னிடமிருந்து விலக்கி, மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை, பொருள் மழையைப் பொழியட்டும்.

கீர்தேவதேதி கருடத்வஜ ஸூந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவனைககுரோஸ்தருண்யை


சரஸ்வதி தேவி என்றும், கருட வாகனனாகிய மகாவிஷ்ணுவின் மனைவி என்றும் சாகம்பரியாகிற பூமிதேவி என்றும் பார்வதி என்றும் போற்றித் துதிக்கப்படுகிற மகாலட்சுமியே, ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று பெரும்பணிகளை விளையாட்டாக செய்து பிரபஞ்சத்தையே பரிபாலிக்கிறவளே, மூவுலகிற்கும் குருவான நாராயணனுடைய பத்தினியே, நமஸ்காரம். என் ஏழ்மையைத் தொலைத்து ஐஸ்வர்யம் பெருக அருள்வாயாக.

ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸூத்யை
ரத்யை நமோஸ்து ரமணீயகுணார்ணவாயை
ஸக்த்யை நமோஸ்து ஸதபத்ர நிகேதனாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தமவல்லபாயை


நல்ல கர்மாவின் பலத்தைக் கொடுக்கின்ற வேத ரூபிணியே நமஸ்காரம். அழகிய குணங்களுக்கு இருப்பிடமான ரதிதேவியே, நமஸ்காரம். தாமரையில் அமர்ந்த சக்தி ரூபிணியே, நமஸ்காரம். புருஷோத்தமனுடைய மனைவியான புஷ்டி தேவியே நமஸ்காரம்.

நமோஸ்து நாளீகநிபானனாயை
நமோஸ்து துக்தோததிஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருதஸோதராயை
நமோஸ்து நாராயணவல்லபாயை


தாமரை போன்று மலர்ந்து சிரிக்கும் முகம் கொண்ட தேவியே நமஸ்காரம். பாற்கடலில் பிறந்த தேவியே நமஸ்காரம். தாபத்தை நிவர்த்தி செய்யும் சந்திரன், மரணமிலாப் பெருவாழ்வளிக்கும் அமிர்தம் இவற்றோடு தோன்றிய தேவியே, நமஸ்காரம்.

ஸ்ரீமந்நாராயணனுக்கு மிகவும் பிரியமான தேவியே
நமஸ்காரம்.
நமோஸ்து ஹேமாம்புஜபீடிகாயை
நமோஸ்து பூமண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை


தங்கத் தாமரையை ஆசனமாகக் கொண்ட தேவியே நமஸ்காரம். பூமண்டலத்திற்குத் தலைவியே நமஸ்காரம். தேவர்களுக்குக் கருணை
காட்டும் தேவியே நமஸ்காரம். சார்ங்கபாணியான மகாவிஷ்ணுவின் இதய தேவியே நமஸ்காரம்.

நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தனாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை
பிருகு ரிஷியின் புத்திரியான தேவியே


நமஸ்காரம். மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் தேவியே நமஸ்காரம். தாமரையை இருப்பிடமாகக் கொண்ட லட்சுமியே நமஸ்காரம். தாமோதர
மூர்த்தியான மகாவிஷ்ணுவின் பிரியத்துக்குப் பாத்திரமான தேவியே நமஸ்காரம்.

நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபிரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை


ஜோதி மயமானவளே, தாமரை போன்ற கண்களை உடையவளே, தேவி, நமஸ்காரம். ஐஸ்வர்ய ஸ்வரூபிணியே, உலகங்களைப் படைத்தவளே, தேவி, நமஸ்காரம். தேவர் முதலின அனைவராலும் பூஜிக்கப்படும் தேவியே, நமஸ்காரம். நந்தகுமாரனான கோபாலனின் பிரிய நாயகியே நமஸ்காரம்.

ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தனானி
ஸாம்ராஜ்யதான விபவானி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தனானி துரிதாஹரணோத்யதானி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மான்யே


தாமரைபோன்ற கண்களை உடையவளே, எல்லோராலும் பூஜிக்கப்படுகின்றவளே, தாயே, நமஸ்காரம். உன்னை நமஸ்கரித்தால் என் எல்லாவித பாவங்களும் தொலைந்து நான் பரிசுத்தவானாகிறேன். உனக்கு நான் சமர்ப்பிக்கும் நமஸ்காரம், சகல சம்பத்துகளையும் கொடுக்கிறது; எல்லா இந்திரியங்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கிறது; மாபெரும் சாம்ராஜ்ய பொக்கிஷத்தை அருள்கிறது. என் நமஸ்காரங்கள் என்றென்றும் உனக்கே உரித்தாகும்.

யத்கடாக்ஷஸ முபாஸனாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத:
ஸந்தனோதி வசனாங்கமானஸை:
த்வாம் முராரி ஹ்ருதயேச்வரீம் பஜே


தேவி, உந்தன் கடைக்கண் கடாட்சம் உன்னை உபாசனை, செய்யும் அனைவருக்கும் எல்லா சம்பத்துகளையும் ஏராளமாக அள்ளிக் கொடுக்கும். முராரியான மகா விஷ்ணுவின் ஹ்ருதய நாயகியான உன்னை வாக்கு, காயம், மனம் எல்லாவற்றாலும் துதிக்கிறேன்.

ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவளதமாம் ஸுககந்தமால்ய ஸோபே
பகவதி ஹரிவல்லபே மனோக்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்


தாமரையை இருப்பிடமாக உடையவளே, தாமரையைக் கைகளில் ஏந்தியவளே, பிரகாசிக்கும் வெண்மை வஸ்திரம், சந்தனம், மாலை இவற்றால் ஒளிர்பவளே, மகிமை வாய்ந்தவளே, மகாவிஷ்ணுவின் ப்ரிய நாயகியே, மனதை ரமிக்கச்செய்பவளே, மூவுலகத்திற்கும் ஐஸ்வர்யத்தைக் கொடுப்பவளே, எனக்கும் கருணை செய்வாய் அம்மா!

திக்கஸ்திபி: கனககும்ப முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ
லோகாதிநாத க்ருஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம்


எல்லா திசைகளிலிருந்தும் தங்கக் குடங்களில் நிரம்பிய கங்கையின் பரிசுத்தமான நீரினால் திருமஞ்சனம் செய்யப்பட்டவளே, உலகங்களுக்கெல்லாம் தாயே, எல்லா உலகத்திற்கும் நாயகனான மகாவிஷ்ணுவின் பத்தினியே, பாற்கடலின் புத்திரியே, உன்னைக் காலைப் பொழுதில் நமஸ்கரிக்கிறேன்.

கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபூரதரங்கிதைரபாங்கை:
அவலோகய மாம கிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:
தாமரை போன்ற கண்களை உடைய மகா


விஷ்ணுவின் இதயத்துக்கு நெருக்கமானவளே, மகாலட்சுமியே, கருணை வெள்ளத்தில் அலைமோதும் உன் கடைக்கண் பார்வையால், வறுமை பிடித்தாட் கொண்டிருக்கும் என்னையும், உன் கருணைக்கு உண்மையான பாத்திரவானாக என்னை ஆக்குவாயாக.

ஸ்துவந்தி யே ஸ்துதிபி ரமீபி பிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவனமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகின:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:


மூன்று வேதங்களின் ஸ்வரூபிணியாகத் திகழ்பவளே,  மூவுலகிற்கும் தாயுமான மகாலட்மியே, இந்த ஸ்தோத்திரங்களினால் தினமும் உன்னை யார் துதிக்கிறார்களோ, அவர், இவ்வுலகில் எல்லா நற்குணங்களும்  நிறைந்தவர்களாகவும், மிகுந்த பாக்யசாலிகளாகவும், சான்றோர் கொண்டாடும் புத்திப் பலம் உள்ளவர்களாகவும் ஆகிறார்கள். உனக்கு தண்டனிட்ட நமஸ்காரம், தாயே!

No comments:

Post a Comment