Tuesday, October 22, 2013

பதவிக்கு ஏற்படும் பாதிப்பை விலக்கும் பரமேஸ்வரன்!

 அரங்கநாதபுரம் கஜாரண்யேஸ்வரர் கோயில்,

தனிச் சிறப்பு வாய்ந்தது. இறைவனுக்கு ஆனேசர், கரிவனநாதர், ஆனைக்காரப் பெருமான், கஜ  ஆரோகணேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. இறைவி, காமாட்சி. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் வஜ்ரதீர்த்தம், இந்திர கூபம். திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவில் முன் காலத்தில் சிவபெருமான் வெண் நாவல் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். மரத்தின் சருகுகள்  விழாதவாறு சிலந்தி ஒன்று சிவலிங்கத்திற்கு மேல் வலையைப் பின்னி வைத்தது. அதே சமயம், யானை ஒன்று துதிக்கையில் காவிரி நீர் கொண்டு  வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்தது. சிவலிங்கத்தின் மேல் சிலந்தி வலையை கண்ட யானை அதனை அறுத்தெறிந்தது.

இதுகண்டு வெகுண்ட  சிலந்தி இன்னொரு வலை பின்னியது. மறுபடி யானை அறுத்தெறிந்தது. இப்படி தினந்தோறும் நடந்தது. இதில் ஆத்திரமடைந்த சிலந்தி ஒருநாள்  யானை அபிஷேகம் செய்யும்போது துதிக்கைக்குள் புகுந்து கடித்தது. யானை துதிக்கையை தரையில் அடித்தது. இதில் யானையும் இறந்தது. சிலந் தியும் இறந்தது. அந்த சிலந்தியே சிவனருளாளரான சோழ மன்னர் சுபதேவர்-கமலாவதிக்கு மகனாக பிறந்த கோச்செங்கணான் (கோச்செங்க சோழன்). இவர் தன்  முற்பிறவி வாசனையால் திருவானைக்கா கோயிலை கட்டினார். மேலும், யானையால் தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, யானை ஏற முடியாதபடி  மாடக் கோயில்களாகக் கட்டினார்.

இது ‘யானை ஏறாத் திருப்பணி’ என்றே அழைக்கப்பட்டது. திருவானைக்காவிற்கு கிழக் கேயுள்ள அரங்கநாதபுரம்  கஜாரண்யேஸ்வரர் கோயில் இச்சோழனால் கட்டப்பட்ட முதல் மாடக்கோயில் ஆகும். 1750 ஆண்டுகள் பழமையானது. மாலிக்காபூர் படையெடுத்து வந்தபோது திருவரங்கம், திருவானைக்காவில் இருந்த மூர்த்திகளை காடாக (ஆரண்யம்) இருந்த இப்பகுதியில் மறைத்து  வைத்திருந்து பின்னர் எடுத்துச் சென்றமையால் அரங்கநாதபுரம் என்றும் கஜாரண்யம் என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருசமயம் இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை நேமத்தில் எழுந்த ருளியுள்ள சிவபெருமானை மெய்மறந்து வழிபட்டது. அதைத் தேடி வந்த இந்திரன் கோபம் கொண்டு யானை மீது  வஜ்ராயுதத்தை ஏவினான்.

அப்போது சிவபெருமான் செய்த ஊங்காரத்தால் வஜ்ராயுதம் கஜாரண்ய தலத்துள் வந்து விழுந்தது. விழுந்த இடத்தில் நீரு ற்று ஏற்பட்டது. அதுவே வஜ்ரதீர்த்த குளமாகியது. வஜ்ராயு தத்தை எடுக்க வந்த இந்திரன் அங்கு இந்திர கூபம் என்ற கிணற்றை வெட்டி அந்த தீர்த் தத்தால் கஜாரண்யேஸ்வரரை அபிஷேகம் செய்து வழிபட்டு பேறு பெற்றான். இத்தலத்தின் மகிமையை அறிந்த காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோயிலின் தட்சிணா மூர்த்தி சந்நதிக்கு எதிரில்  அமர்ந்து தியானம் செய்தார். அதன் நினை வாக அங்கு ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

பரிவார மூர்த்திகளாக வலம்புரி விநாயகர், வள்ளி-  தேவசேனா சமேத சுப்ரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இறைவன் கிழக்கு  நோக்கி அமைந்திருக்கிறார். எதிரில் நந்திதேவர். தெற்கு நோக்கியபடி காமாட்சியம்மன். மாடக்கோயிலை கஜேந்திரன் தாங்குவது போல் கட்டப்பட்டு ள்ளது சிறப்பு. இது, பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாகும். 25வது நட்சத்திரமான பூரட்டாதி 7ன் மகிமையை விட மிகச் சக்தி வாய்ந் தது. 2ம் எண்ணான மதிகாரகனான சந்திரனுக்கும், 5ம் எண் வித்யாகாரகனான புதனுக்கும் உரியது.

சந்திரனின் புதல்வரே புதன். சந்திரன் மனதை  ஆள்பவர். புதன் அறிவை ஆள்பவர். இத்தலத்தில் இறைவனைத் தொடர்ந்து ஏழு நாட்கள் ஏழு திரவியங்களுடன்
கூடிய சப்தாமிர்த காப்பு (பஞ்சாமிர்தம் + பாதாம் பருப்பு, முந்திரி) ஏழுவகை நிவேதனங்களால் வழிபடுவதால் ஏழேழு ஜென்மங்களாக தொடரும்  சாபங்களை அழித்து கடைத்தேற கஜாரண்யேஸ்வரர் அருள்பாலிகிறார். ஐராவதம் மற்றும் இந்திரன் வழிபடும் இத்தலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் சந்திரஹோரையில் இறைவனை வழிபடுவதால் பதவியில் ஏற்படும் ஆப த்துகள் நீங்கி பதவி உறுதியாகும் என்பது நிதர்சனமான உண்மை.

இசையில் அவரோகண (ஏழு) பீஜங்கள், தட்சிணாமூர்த்தியால் வில்வ தளங்களில்  வைத்து ஆஞ்சநேயருக்கு அளிக்கப் பெற்ற திருத்தலம் இது. ஸ்ரீசாகம்பரி தேவி இங்குள்ள திருக்குளத்தில் ஏழு அல்லிமலர்களை தோற்றுவித்து வேத  அல்லிமலர் குருபீடத்தை உலகிற்கே அளித்தாள். இதனால் ஏழேழு ஜென்மங்களும் கடைத்தேற இங்கு ஏழு தினங்கள் வில்வ மரத்தின் கீழ் தியானம்  மேற்கொள்ளலாம். ஏழு வண்ண ஆடைகளை தானம் அளித்தல் இன்னும் சிறப்பாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கல்லணை செல்லும் (அகரப்பேட்டை வழி) சாலையின் தென்புறம் இத்தலம் உள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 94439 70397.

No comments:

Post a Comment