Saturday, January 17, 2015

கால் மாறி ஆடிய படலம் / வலது காலைத் தூக்கி ஆடிய வரலாறு


ஓம்......
கால் மாறி ஆடிய படலம் / வலது காலைத் தூக்கி ஆடிய வரலாறு..
.
இந்த கதையின் சமயத்தில் மதுரையில் விக்கிரமபாண்டியனின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவன் மறைந்து விட்டதால், அவனது மகன் ராஜசேகரன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். அவனும் தன் முன்னோர் களைப் போல சிவபக்தியில் ஆழ்ந்து கிடந்தான். அவனுக்கு ஆயகலைகள் அறுபத்து நான்கையும் படிப்பதற்கு ஆசை. அதில் அறுபத்து மூன்றை முழுமையாகப் படித்து தேர்ந்து விட்டான். ஒரே ஒரு கலையான நாட்டியக்கலை மட்டும் படிக்கவில்லை. அதிலும் பரதக்கலையில் வல்லுவனாக வேண்டும் என்பது அவனது ஆசை. மற்ற கலைகளை முடித்தவனுக்கு இதைக் கற்றுக் கொள்வதில் என்ன தடை இருந்திருக்க முடியும் என நீங்கள் நினைக்கலாம். அவன் சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம், சன்னதியின் முன் உள்ள வெள்ளியம்பல நடராஜரைத் தரிசிப்பான். எம்பெருமானே! சகல கலைகளும் கற்றேன். பரதம் மட்டும் கற்கவில்லை. காரணம் அந்தக்கலைக்கு தலைவனாக நீ இருக்கிறாய். நீ ஆடும் இந்த மண்ணில், உனக்குச் சமமாக நான் ஆடலாமா? அது அபச்சாரம் இல்லையா? என்பான். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். எது வேண்டாம் என நினைக்கிறோமோ அது பலரது வாழ்வில் நடந்து விடுவதை கண் கூடாக இப்போதும் காணத்தானே செய்கிறோம்! அதனால் தானே தெய்வத்தின் பெயரை திட்டுவதற்காகவாவது பயன்படுத்துகிறோம். அடேய் சிவனே! ஏனடா இப்படி சோதிக்கிறாய்? என்று அவனிடம் மட்டும் தானே நம்மால் உரிமையுடன் கோபித்துக் கொள்ள முடிகிறது! அதுபோல, ராஜசேகர பாண்டியன் ஒன்று நினைக்க நடந்தது வேறொன்றாக இருந்தது. வெள்ளியம்பல கூத்தனான சுந்தேரஸ்வரர் அவன் வாழ்வில் சதிராட எண்ணினார். தனது விளையாடலைத் துவங்கி விட்டார்.
ஒருசமயம் சோழமன்னன் கரிகால் பெருவளத்தானின் அவைப்புலவர் மதுரைக்கு வந்தார். அவர் பாண்டியனின் அரண்மனைக்கு வந்ததும், ராஜசேகரன் அவரை வரவேற்று தனக்கு நிகரான ஆசனம் அளித்து கவுரவித்தான். இருவரும் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினர். அவர்களின் பேச்சு 64 கலைகளின் பக்கமாக திரும்பியது. பாண்டிய மாமன்னரே! எங்கள் சோழச்சக்கரவர்த்தி கரிகால் பெருவளத்தான் 64 கலைகளிலும் வல்லவர். அவரைப் போல் அத்தனை கலைகளையும் அறிந்தவர் உலகில் யாருமில்லை, என்று பெருமையாகச் சொன்னார். பாண்டியனும் அதை ஆமோதித்து, சகலகலாவல்லவர் ஒருவர் இருப்பது உலகுக்கு நன்மை தானே, என்றான். இப்போது, புலவர் தனது சேஷ்டையான பேச்சைத் துவக்கினார். அதிருக்கட்டும் மன்னா! தாங்கள் 63 கலைகளை மட்டும் கற்று, பரதக்கலையை மட்டும் கற்காதது குறித்து எங்கள் மன்னர் அடிக்கடி பேசுவார். அந்தக் கலை உங்களுக்கு வர மறுக்கிறதாம். பாண்டியனுக்கு நடனமாட தெரியவில்லை என்பார். நீங்கள் ஏன் அதை மட்டும் கற்கவில்லை? என்று பாண்டியனைக் குத்திக் காட்டுவதுபோல் குதர்க்கமாகப் பேசினார். ராஜசேகர பாண்டியன் இதற்காக கோபிக்கவில்லை. கரிகால் பெருவளத்தான் ஏவிய அம்பு இவன்! நமக்கும், அவனுக்கும் தான் பிரச்னை. மேலும், இவன் ஒரு புலவன். இவனிடம் கோபிக்கக்கூடாது, என்ற எண்ணத்தில், புலவரே! நடராஜப் பெருமானின் ஆட்டத்தை சற்றே கவனியுங்கள். அவர் ஆடுவதால் தான் இந்த உலகமே இயங்குகிறது. அப்படிப்பட்ட உயரிய ஆட்டத்தை சாதாரண மனிதனாகிய நான் கற்றுக் கொண்டால் சிவநிந்தனை செய்ததாக அர்த்தமாகும். அதனால் தான் நான் அதைக் கற்றுக்கொள்ளவில்லை, என்றான்.
மன்னனின் இந்தப் பதில் புலவரை வியப்பில் ஆழ்த்தியது. பாண்டியனிடம் தவறாகப் பேசிவிட்டோமே என வருந்தினார்.மன்னா! தங்கள் மனம் அறியாமல் தவறாகப் பேசிவிட்டேன். இருப்பினும், எம் சோழமன்னர் கரிகால்பெருவளத்தான் தங்களை இவ்வகையில் குறைத்துப் பேசுகிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள், என்றார் புலவர். இன்னா செய்தவர்க்கும் இனியது செய்தல் என்பது பெரிய பண்பு. ராஜசேகர பாண்டியன் தன்னைக் குறைத்துப் பேசிய புலவர் மீது கோபம் கொள்ளாமல் அவருக்கு விலையுயர்ந்த பரிசுகளை அளித்து கவுரவப்படுத்தி விடை கொடுத்தான். நெகிழ்ந்து போன புலவர் மன்னனையும், பாண்டிய நாட்டு மக்களின் மாண்பையும் புகழ்ந்து பேசி புறப்பட்டார். புலவர் சென்ற பிறகு ராஜசேகரனின் மனம் அலை பாய்ந்தது.எனக்கு நாட்டியக்கலையும் தெரிய வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கிறானா? என்னை ஆட வைத்து பார்க்க வேண்டுமென்பதில் அவனுக்கு ஆர்வம் போலும்! எதற்கும், சொக்கநாதப் பெருமான் சன்னதிக்குச் சென்று, அங்கே நடனமாடிக் கொண்டிருக்கும் வெள்ளியம்பல வாசனான நடராஜரையே கேட்டுவிடுவோம், என அங்கு சென்றான். நடன சபாபதியான அவரை வணங்கி, இறைவா! பிறர் என்னைத் தனித்து குறைத்து மதிப்பிட்டால் கவலைப்படமாட்டேன். இது பாண்டிய தேசத்தின் கலையுணர்வுக்கு வந்த இழுக்கு. நான் பரதம் படிக்க ஆர்வமாயிருக்கிறேன். உன்னுடைய அருட்கடாட்சம் வேண்டும், என்று கெஞ்சலாகச் சொன்னான். அப்போது, அவன் கண்களில் கண்ணீர் பெருகி விட்டது. அடியவரின் கண்ணீருக்கு உடனே பதிலளிக்கும் நடராஜப் பெருமான் அசரீரியாக ஒலித்தார்.
ராஜசேகர பாண்டியனே! என் அன்பு மகனே! தேசத்தின் புகழைக் காப்பாற்ற நீ உடனே பரதம் படி. உனக்கு என் நல்லாசிகள், என்று கேட்டது குரல். ராஜசேகர பாண்டியன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனடியாக பரதநாட்டியத்தில் தேர்ந்த ஒரு கலைஞர் அழைக்கப்பட்டார். அவருக்கு குருதட்சணை கொடுத்து, பயிற்சியை துவக்கினான் பாண்டியன். அப்பப்பா! பரதம் என்றால் சாதாரண கலையா! ஏழு ஸ்வரங்கள், ஏழு வகை தாளம், ராகம், பாவம், இருபது வகையான அங்கபேதங்கள் என மிகுந்த அக்கறையுடன் கற்றான் அவன். ஒவ்வொரு நாளும் வகுப்புக்குச் சென்று திரும்பியதும், பஞ்சணையில் அப்படியே சாய்ந்து விடுவான் மன்னன். அவனது கால்கள் கடுமையாக வலிக்கும். சில சமயங்களில் வலி தாங்காமல் புலம்புவான். அப்போது அவன் மனதில் மின்னல் கீற்றாய் ஒரு எண்ணம் எழுந்து மறைந்தது. ஆம்! சில நாட்கள் தான் நாட்டியம் கற்றிருக்கிறோம், கால்களில் வலி தெறிக்கிறது. ஆனால், எம்பெருமான் நிறுத்தாமல் ஆடுகிறான். அதிலும் இடது காலை தூக்கிக் கொண்டு எத்தனை யுகங்களாக நிற்கிறானே! அவனுடைய கால்கள் எந்தளவுக்கு வலிக்கும்? சற்று கால் மாறி ஆடினால், அவனுக்கு வலி குறையுமே! சரி... அந்த ஈசனிடமே செல்வோம். காலை மாற்றி ஆடச் சொல்வோம், என்ற எண்ணத்துடன் கோயிலுக்குள் சென்றான்.
சபாபதியே! எம்பிரானே! சில நாட்கள் ஆடிய எனக்கே இந்தக்கதி என்றால், உன் கால்கள் எந்தளவுக்கு வலிக்கும்? காலை மாற்றி ஆடு, என்றான். நடராஜரோ அவனது பேச்சைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ராஜசேகரன் இது விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தான். இதோ பார்! உடனே காலை மாற்று. இல்லாவிட்டால், உன் முன்னாலேயே வாளால் தலையைச் சீவிக்கொண்டு உன் திருப்பாதம் அடைவேன், என்று வாளை உருவினான். அப்போது அங்கே பேரொளி பிறந்தது. சிவபெருமான் ரிஷப வாகனத்தில் அவன் முன் காட்சி தந்தார். மகனே! உன் விருப்பம் போல் நடக்கும். இதோ என் காலை மாற்றுகிறேன், என்றார். அன்றுவரை இடதுகால் தூக்கி ஆடியவர் வலதுகாலை தூக்கி திருநடனம் புரிந்தார். பாண்டியன் அகம் மகிழ்ந்தான். கண்ணீர் ஆறாய் பெருகியது. எம்பிரானே! மற்ற தலங்களில் நீ எப்படி நின்றாலும், இந்த தலத்தில் வலதுகால் தூக்கியே ஆட வேண்டும். இந்த திருக்காட்சியை உலகம் உள்ளளவும் காண வேண்டும், என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அவ்வாறே அருளினார். இன்றுவரை மதுரையம் பதியில் உள்ள வெள்ளியம்பலத்தில் வலதுகால் தூக்கியே ஆடுகிறார். ராஜசேகரபாண்டியன் அதன் பிறகு சிவசிந்தனையிலேயே காலம் கழித்து இறைவனின் திருவடி எய்தினான்

No comments:

Post a Comment