Monday, January 19, 2015

கருணையின் மறுபெயர்தான் காமதேனு கோமாதாவை பாதுகாப்போம்


கருணையின் மறுபெயர்தான் காமதேனு கோமாதாவை பாதுகாப்போம்
அயோத்தியை ஆண்டு வந்த திலீபன் என்ற மன்னன், மகத நாட்டு இளவரசியை மணந்தான். பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கு மகப்பேறு இல்லாததால் மனவேதனை கொண்டனர். பல யாகங்களும் நடத்தி வந்தனர்.
திலீபனின் அரச குரு வசிஷ்டர், ஒருமுறை தம்பதியரை தனது ஆசிரமத்திற்கு அழைத்து உபசரித்தார். பின்னர் திலீபனுக்கும் இளவரசிக்கும் குழந்தை பாக்கியம் இல்லாததற்கான காரணத்தைக் கூறினார். ‘திலீபா! நீ ஒரு சமயம் தேவலோகம் சென்றிருந்தபோது, கற்பக விருட்சத்தின் கீழ் நின்றிருந்த காமதேனுவை அலட்சியம் செய்தாய்.
அதனால் இந்த நிலையை அடைந்திருக்கிறாய். காமதேனுவின் மனம் குளிரும்படி, நீ ஏதேனும் செய்தால் சாபம் நீங்கி உனக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்’ என்று வசிஷ்டர் கூறினார். மேலும் அதற்கான உபாயத்தையும் கூறியருளினார்.
‘திலீபா! காமதேனுவுக்கு நந்தினி என்ற ஒரு கன்று இருக்கிறது. அது என் ஆசிரமத்தில்தான் இருக்கிறது. அது இப்போது நதிக்கரையில் புல் மேய்ந்து கொண்டிருக்கிறது. நந்தினிக்கு தக்க உணவு உறைவிடம் தந்து, அதற்கு எந்த தீங்கும் வராமல் பாதுகாத்து வந்தால் தாய் பசுவாகிய காமதேனுவின் உள்ளம் குளிரும்.
உன் சாபமும் நீங்கும்’ என்றார். உடனே திலீபன் கற்றைத் தேடிப் புறப்பட்டுச் சென்றான். பாதுகாப்புக்காக வில்லையும், அம்பையும் உடன் எடுத்துச் சென்றான். நதிக்கரையோரம் புல் மேய்ந்து கொண்டிருந்த நந்தினியைக் கண்டதும் திலீபன் ஆவலுடன் அதை நெருங்கினான். நந்தினியை தன் அரண்மனைக்கு அழைத்து வர அவன் மனப்பூர்வமாக விரும்பினான்.
ஆனால் அவனைக் கண்டதுமே கன்று ஓடத் தொடங்கியது. திலீபனும், நந்தினியை தொடர்ந்து சென்றான். கன்று நிற்பதும், புல்லைத் தின்பதும், ஓடுவதுமாகவே இருந்தது. திலீபனும் சளைக்காமல் நந்தினியை பின்பற்றி ஓடினான். கன்று இமயமலைச் சாரலை அடைந்து ஒரு மரத்தடியில் நின்று இளைப்பாறியது.
அப்போது அதைப் பிடித்துவிட கூடிய வாய்ப்பு இருந்ததை திலீபன் உணர்ந்தான். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென்று புதருக்குள் இருந்து ஒரு சிங்கம் வெளிப்பிட்டு கன்றின் மீது பாயத் தயாரானது. அதிர்ச்சி அடைந்த திலீபன், வில்லின் அம்பை பொருத்தி சிங்கத்தை வீழ்த்த முயன்றான்.
அந்த நேரத்தில் சிங்கம் தனது வடிவத்தை நீக்கி, ஒரு அசுரனாக மாறியது. திலீபன் அதிர்ந்து போனான். அசுரன் சிரித்த சிரிப்பு விண்ணை முட்டும் அளவு அதிர்ந்தது. அசுரன் பேசத் தொடங்கினான். ‘ஏய்! திலீபா! என்னை யார் என்று நினைத்தாய்? சிவபெருமானின் அஷ்ட மூர்த்திகளில் ஒருவன் நான்.
என் பெயர் கும்பாசூரன்’ என்று உரக்க கத்தினான். திலீபனும் சளைக்காமல், ‘உனக்கு இங்கு என்ன வேலை?’ என்றான். ‘இந்த மரம் பார்வதி தேவிக்கு பிரியமானது. இதன் மீது அவன் கந்தக் கடவுளைவிடவும் அளவுகடந்த பாசம் வைத்துள்ளார். இந்த மரத்தைப் பாதுகாப்பது என் வேலை.
இந்த மரத்தில் முதுகை தேய்த்து பட்டையை உதிர்க்கும் மிருகம் எதுவானாலும், அதை நான் உண்பது வழக்கம். மரத்தின் நிழலில் நிற்பது, படுப்பது, புல் மேய்வது எதையும் நான் அனுமதிப்பதில்லை. அதற்கான தண்டனை, அந்த மிருகம் எனக்கு இரையாவதுதான்.
இந்த கன்றும் எனக்கு இரையாகப் போகிறது’ என்று அசுரன் கர்ஜித்தான். ஆனால் திலீபனோ, ‘கன்றைக் காப்பது என் கடமை, அது வசிஷ்ட மகரிஷியின் ஆணையும் கூட. உன்னுடன் போரிட்டாவது கன்றை நான் மீட்பேன்’ என்று கூறினான். ‘என்னுடன் போரிடுவது என்பது இயலாதது.
நான் சர்வ சக்தி படைத்த இறைவனின் அனுக் கிரகம் பெற்றவன். நீ சாதாரண மனிதன். உன்னால் என்னை வெல்ல முடியாது’ என்று கும்பாசூரன் கூறினான். அதைக் கேட்டு மனம் சேர்ந்த திலீபன், ‘கன்றைக் காக்க நான் என்ன செய்ய வேண்டும்?’ என்றான்.
‘நீயே வலிய வந்து எனக்கு இரையாக வேண்டும்’ என்று அசுரன் தெரிவித்தான். கன்றுக்காக தன் உயிரை இழக்க முன் வந்தான் திலீபன். அப்போது வானில் மின்னல் ஒளி தோன்றியது. ஒளியின் ஊடே காமதேனு தோன்றியது. ‘திலீபனே! நான்தான் காமதேனு.
எவரது நெஞ்சம் உயிர்களுக்காக இரங்குகிறதோ, அவர் மீது என் அருட்பார்வை படுகிறது. உள்ளத்தில் சுரக்கம் கருணையின் மறுபெயர்தான் காமதேனு. கன்றை காப்பாற்றும் பொருட்டு உயிரை விடத் துணிந்த உன் கருணையை மெச்சினேன்.
உனக்கு சத்துவ குணம் நிறைந்த ஆண் மகன் பிறப்பான்’ என்று கூறிரையானது. இறைவன், மனிதர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் தந்துள்ளார். அவற்றை இறைவனை வழிபடுவதற்கும், உலகில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் பயன்படுத்த வேண்டும்.
பிறர் மனம் புண்படும்படியாக பேசுவதோ, செயல்புரிவதோ இறைவனுக்கு ஒவ்வாத செயலாகும். அது நம்மையே அழித்து விடக்கூடியதும் ஆகும். அந்த அழிவில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டுமானால், தவறை உணர்ந்து நொந்து, உடலையும் உணர்வையும் வருத்தி நோன்பிருந்தால்தான் பயன்பெற முடியும்.

No comments:

Post a Comment