Saturday, January 10, 2015

அங்காளபரமேஸ்வரி அம்மன் உருவான சம்பவம்

அங்காளபரமேஸ்வரி அம்மன் உருவான சம்பவம்


சிவனை பார்க்க கைலாசமலைக்கு பிரம்மன் வருகிறார். தூரத்தில் பிரம்மனை பார்த்த சக்திதேவி, பிரம்மனின் ஐந்து தலையை பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கி கொண்டே வந்தார். முகத்தை அருகில் பார்த்த பிறகுதான் தெரிந்தது பிரம்மன் என்று.


“ஐந்து தலையை பார்த்த உடன் சிவன் என்று நினைத்துவிட்டீர்களா?. எனக்கும் ஐந்து தலை சிவனுக்கும் ஐந்து தலை.” என நகைத்தார் பிரம்மா. அம்பிகைக்கு கோபம் வந்தது. சிவ பெருமானிடம் முறையிட்டாள் அன்னை. “ஓ…ஐந்து தலை இருப்பதால்தான் அவருக்கு ஆணவமா?” என்ற பரமன் பிரம்மனின் ஒரு தலையை வெட்டி வீசினார்.
தன் தலைவனின் ஒரு தலை பறிபோக காரணம் அம்பிகைதான் என்று கருதிய கலையரசியான சரஸ்வதி, பராசக்தி மேல் கோபம் கொண்டு, “சக்தி… நீ அரண்மனையில் வாழ்ந்தாய். இனி நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாக கொண்டு வாழ்வாய்.” என்று சபித்தாள் கலைவாணி.

சரஸ்வதியின் சாபத்தால் பர்வத இராஜ புத்திரியாக திகழ்ந்த அன்னை பார்வதிதேவி பூலோகத்தில் தோன்றி, இருக்க இடம் இல்லாமல் எங்கு தங்குவது என்று தெரியாமல் அவதிப்பட்டாள். இப்படியே பல இடங்களுக்கு சென்று களைப்படைந்து நிற்கும் போது ஒர் இடத்தில் நறுமணம் வீசியது. அந்த திசையை நோக்கி நடந்தாள்.அந்த இடம் அழகான நந்தவனமாக இருந்தது. அவ்விடத்திலேயே அமர்ந்து தவம் செய்ய தொடங்கினாள். இந்த காட்சியை கண்ட அங்கு காவலுக்கு இருந்த மீனவ இனத்தை சார்ந்தவன்,
“ ஏய் பெண்ணே… இது இந்த நாட்டின் மலையரசனுக்கு உரிமையான இடம். இங்கு நீ தவம் செய்வது உனக்கு நல்லதல்ல. எங்கள் அரசர் தெய்வ நம்பிக்கை அற்றவர். நீ தவம் செய்யும் தகவல் அரசருக்கு தெரிந்தால் உன் உயிருக்கு? ஆபத்து நேரலாம். ஆகவே இங்கிருந்து போய் விடு.” என்று எச்சரித்தான்.

உடனே அன்னை புன்னகைத்தப்படி தன் உடலை புற்று மண்ணால் மூடினாள். அந்த காட்சியை பார்த்தவன் பிரமித்து போனான். இந்த பெண், அன்னை பராசக்தி என்பதை உணர்ந்தான். அம்பிகை மீது பக்தி உண்டானது. மக்களிடம் சொன்னான். நந்தவனத்தில் திடீர் புற்று உருவானதை அறிந்த மக்கள் அதிசயித்தனர். புற்றை பலர் வந்து பார்த்தார்கள். இந்த தகவல் அரசருக்கு தெரிந்து, “எனக்கு சொந்தமான தோட்டத்தில் புற்று இருக்கிறதா? இதை உடனே இடித்து தள்ளுங்கள்.” என்று உத்தரவிட்டான்.
புற்றை இடிப்பது பெறும் பாவம், அதை செய்யாதீர்கள் என்று எத்தனையோ பேர் கூறியும் கேட்கவி்லலை அரசர்.

பணியாளர்கள் புற்றை உடைத்தார்கள். அப்போது அருகில் இருந்த மீனவ இனத்தை சார்ந்த அந்த காவலன், அந்த புற்று மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து வைத்து கொண்டான். புற்றை உடைத்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து சென்று விட்டார்கள் அரசரின் பணியாளர்கள். அவர்கள் போன பிறகு தன் கையில் இருந்த புற்று மண்ணை அந்த இடத்தில் மறுபடியும் வைத்து பூஜை செய்தான் மீனவன். புற்று மறுபடியும் வேகமாக உருவானது.

இந்த செய்தியை கேள்விப்பட்ட அரசன், மறுபடியும் பணியாளர்களை அனுப்பினான். புற்றை உடைக்க புற்றின் அருகில் சென்றவுடன் அன்னைக்கு காவலாக வந்து நின்ற சிவபூதங்கள் அந்த பணியாளர்களை கொன்றார்கள். பிறகு அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களை காக்க பூலோகத்திலேயே தங்கிவிட்டாள். அங்காளபரமேஸ்வரி அம்மன் உருவான சம்பவம் இது. அங்காள பரமேஸ்வரியை வணங்கினால் செய்வினை பாதிப்பு, விரோதிகளால் உண்டான பிரச்சனைகள் விலகும்

No comments:

Post a Comment