ஸ்ரீவிஷ்ணு' பகவானை தமிழ் மொழியில் 'திருமால்' என்று அழைக்கிறோம். 'திரு'வாகிய மஹாலக்ஷ்மியைத் தன் திருமார்பிலே எப்போதும் தாங்கிக் கொண்டிருக்கும் 'ஸ்ரீநிவாஸன்' ஆகையால் 'திருமால்' என்பர்.
வேதப்ரதிபாத்யனான பரமாத்மாவை தமிழ் மொழியில் பாடிப் பரவுவதற்காக எழுந்தவையே ஆழ்வார்கள் எனப்படும் பன்னிருவர் அருளிய தமிழ்ப் பாசுரங்கள். அவற்றின் தொகுப்பு 'நாலாயிர திவ்ய ப்ரபந்தம்' எனப்படுகிறது.
ஆழ்வார்கள் பன்னிருவரில் 'தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஒருவர். இவர் அருளிய ப்ரபந்தங்கள் 'திருமால்' மற்றும் 'திருப்பள்ளியெழுச்சி' ஆகியவையாகும். இவற்றில் 'திருப்பள்ளியெழுச்சி' என்பது எம்பெருமானைத் துயிலுணர்த்தும் (விழித்தெழச் செய்யும்) நோக்கில் (ஸுப்ரபாதம்) எழுந்த பாசுரங்கள். மற்றதான 'திருமாலை' யென்பது எம்பெருமானுக்குப் பாசுரங்களால் சாத்தப்பட்ட பாமாலைகள் என்பதால் அப்பெயர் பெற்றது எனலாம்.
நாரணனின் ஸ்வரூபத்தை அழகிய, எளிய தமிழ்ப் பாசுரங்களில் எடுத்துச் சொல்லி, அடியவனின் எளிமை சிறுமை, ஆகியவை பற்றித் தெளிவாக விண்ணப்பித்து, 'இத்தகைய பொருளற்ற எளியோனான என் பேரில் கருணை காட்டி அது ஒன்று கொண்டே நீ - பெரியனான என்னை ரட்சிக்கக் கடவுளாய்” என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு எழுந்த பாசுரங்கள் 'திருமாலை' பாசுரங்கள் - 45 பாசுரங்களின் தொகுப்பே 'திருமாலை' என்னும் ப்ரபந்தமாகும். இவை ஒவ்வொன்றுமே ஒவ்வோர் அமுதத்துளிகள் எனினும், அவற்றினுள்ளும் சில, மிகவும் அர்த்த புஷ்டியோடும், மிகப்பிரபலமாகவும் உள்ளவை. அப்படி சில பாசுரங்களை, அவற்றின் பொருளோடு இப்போது அநுபவிக்க முனையலாம்.
பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே! (திருமாலை-2)
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே! (திருமாலை-2)
ஸ்ரீரங்கத்தில் பாம்பணை மேல் கண்துயிலும் ஸ்ரீரங்கநாதஸ்வாமியை நோக்கி ஆழ்வார் விண்ணப்பிக்கிறார்.
கற்பனையில் ஓர் அழகிய வர்ணஜாலம் செய்கிறாற்போல் உள்ளது; கரும்பச்சை நிறத்தில்நெடிய திருவுருவோடு சயனித்துக்கொண்டுள்ளான் ரங்கராஜன்; அவனுடைய திருப்பவளவாய் சிவந்த நிறமுள்ளது; கண்கள் செங்கமலம் போன்று இளஞ்சிவப்பாக உள்ளன (ஙிணீதீஹ் றிவீஸீளீ) இப்படி வண்ணக் கோலம் காட்டும் திருமேனியனான அந்தப் பரமன் எப்படிப்பட்டவன்?! அச்யுதன் தன்னை அண்டினவரை என்றும் நழுவ விடாதவன் (கைவிடாதது); தன் நிலையினின்று என்றும் வழுவாதவன். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், அவர்கள் தலைவன் இந்த்ரனுக்கும் மேம்பட்ட தேவாதிதேவன்; இப்படிப் பட்ட உயர்வை உடைய இவனே, ஆயர்பாடியில், 'அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து'க்கு ஒரு மணிவிளக்காய், குலக்கொழுந்தாய், எளிமை, நீர்மை ஆகியவற்றின் உருவமாய் வந்து அவதரித்தான். இந்த நீர்மை அன்றோ நம் போன்ற ஸாமான்ய மக்களுக்கு ஒரே பற்றுக்கோடு? ஆகவே எம்மை உஜ்ஜீவிக்கம் பண்ணக் கூடிய பெருமானே! உன் அருளே வேண்டுவது. இதையன்றி வேறெதையும் நாம் வேண்டுவதில்லை (அனன்ய கதித்வம்); எங்கள் சரணாகதியை நீ ஏற்று எங்களுக்குப் பெரும் அநுகூலம் பண்ணத் திருவுள்ளம் கொண்டால் போதும்; அது எமக்கு மீண்டும் பிறவாத ஒரு நித்ய ஸாம்ராஜ்யத்தை, ஆனந்தாநுபவத்தை, வைகுந்த வாழ்வைத் தரும்; அதுவே வேண்டும்; மற்ற பேறுகளான இந்திரலோக வாழ்வு போன்றவை சுவைதரும் என்பது வாஸ்தவமே; ஆனால் அது நிலையானதல்ல; அநித்யமானது; மீண்டும் இந்தப் பூமியில் பிறப்பைக் கொடுத்து விடவல்லது; ஆகவே, அந்தப் பொய்யான 'சுவை' வேண்டாம்; நிலைத்ததான உன் திருவடிகளில் பணி செய்து கிடக்கும் ஒரு பேறே வேண்டும். தன் ப்ரார்த்தனையை மிகத் தெளிவாகத் தெரியப்படுத்தி விட்டார் ஆழ்வார் இப்பாசுரத்தில்.
வேதநூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேனும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பிணி, பசி, மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவிவேண்டேன் அரங்கமாநக கருளானே! (திருமாலை-3)
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பிணி, பசி, மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவிவேண்டேன் அரங்கமாநக கருளானே! (திருமாலை-3)
பெரியதொரு வேதாந்தக் கருத்து இங்கே எளிய வார்த்தைகளில் கூறப்படுகிறது. இந்த ஸம்ஸாரத்தில், பல கட்டுப்பாடுகளுக்குட்பட்டு 'வாழ'ப்படும் வாழ்க்கை எத்தனை நிரர்த்தமானது (பொருளற்றது) என்பதைப் பேசுகிறது.
தெய்வம் (வேத, சாஸ்த்ரங்களைக் கொண்டு) மனிதனாய்ப் பிறந்தவனுக்கு வகுத்த ஆயுள் நூறு வருஷங்கள்; ஆனால் இது அதிகபக்ஷம் தானேயன்றி, குறைந்த பக்ஷம் அல்ல; ஆகவே, ஒருவன் நூறு வருஷங்கள்- வேதம் விதித்தவாறு - வாழ்ந்தான் என்றே கொண்டாலும், அந்த நூறு ஆண்டுகளில் பாதி (ஐம்பது வருஷங்கள்) உறக்கத்திலேயே கழிந்துபோகும் என்பது எளிதில் புரியக் கூடிய உண்மை. 'நின்றதில்' மீதி உள்ள ஐம்பதில், 'பாதி' யில், பதினைந்து ஆண்டுகள் சிசுப்பருவம், பாலகப் பருவம் ஆகியவற்றில் கழிந்துவிடும்; இந்தப் பதினைந்து ஆண்டுகளில் ஆத்மோஜ்ஜீவனத்துக்கான (ஆன்மா கடைத்தேறுதல்) முயற்சிகள் எடுக்கும் அளவுக்கு அவனுக்கு முதிர்ச்சி இராது; ஆக, அந்த ஆண்டுகளையும் கழித்து விடில், மீறி உள்ள 35 ஆண்டுகளில், நோய் நொடிகள் ஏற்படும்; மூப்பு - ஒவ்வொரு கணமும் தவிர்க்க முடியாது ஏற்படுவது - வந்து நலிகிறது; பல காரணங்களால் ஏற்படக் கூடிய பலதரப்பட்ட துன்பங்கள் ஏற்படுகின்றன; ஆக, இது காரணமாகவும் மிகப் பெரும் பகுதி கழிந்து விடுகிறது. இவ்வாறு, பூமியில் 'வாழும்' காலம் - ஏறத்தாழ -முழுவதும் இப்படி -அவனது கட்டுப்பாட்டில் இல்லாததும், ஆத்ம வளர்ச்சிக்கு எதிரிடையானதும், துன்பத்தையே தருவதாகவும் உள்ளது. அரங்கனே! இவ்வாறு துக்கமயமாக உள்ள மானிடப் பிறவி வேண்டாம்; மீண்டும் பிறவாத பெரும் பேற்றை அருள்வாய். ஆழ்வார் எவ்வாறு அழகிய ஆய்வு செய்து விட்டார்! (ஞிவீsஜீணீssவீஷீஸீணீtமீ ணீஸீணீறீஹ்sவீs)
குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத் துயிலுமாகண்டு
உடலெனக்குருகுமாலோ! என் செய்கேன் உலகத்தீரே!
(திருமாலை -19)
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத் துயிலுமாகண்டு
உடலெனக்குருகுமாலோ! என் செய்கேன் உலகத்தீரே!
(திருமாலை -19)
அரங்கன் ஸ்ரீரங்கக்ஷேத்திரத்திலே மேற்கு திசை நோக்கித் தலையை வைத்துக் கொண்டு, கீழைத் திசை நோக்கித் தன் திருவடிகளை நீட்டிக்கொண்டு, வலப்புறம் சற்றே சாய்ந்தவாறாய் அரவளைமேல் சயனித்திருக்கும் திருக்கோலத்தை ஆழ்வார் காண்கிறார். இந்தச் சேவையில், தன் பின்புறத்தை வடக்கு திசைக்குக் காட்டிக் கொண்டு, தன் பார்வையை திருக்களர் நோக்கினை, தென்திசையில் உள்ள இலங்கையை நோக்கிச் செலுத்துகிறான். இவ்வாறு ஆதிசேஷன்மீது ஸயனித்திருப்பவன் கடல் நிறக் கடவுள்- கறுத்தநீல நிறத்திருமேனியனான, ஸம்ஸாரத்தில் உள்ள இரட்டைகள் எல்லாவற்றையும் 'கடந்த'வன்- கடவுள். இதில் “அவன், தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத 'ஒருவன்' - 'ஸ ஏக:' என்று வேதம் காட்டும் 'ஒருவன்,' சரணாகத வத்ஸலன்; தன்னை 'ஒருக்காலே சரண் என்று' சரணாகதி பண்ணின விபீஷணனிடம் 'அஞ்சின நீ என்னை அடை' என்று அவனுக்கு அபயப்ரதானம் பண்ணியிருப்பதால், அவன் ஆளுகின்ற இலங்கையை நோக்கியே, ரக்ஷணார்த்தமாக திருக்கண் நோக்குவது” இவ்வாறு எல்லாம் சொல்லப்பட்டது; ஆகவே, இவன் எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன், எங்கும் பரவியிருப்பவன் என்பதால், ஸம்ஸாரத்தில் எல்லாவகைத் துன்புகளையும் ஓயாது அநுபவித்து வரும் நாளும் (ஆழ்வார்) ரக்ஷணம் வேண்டி அவனையே தொழுகிறேன். துன்பு தாளாமல் அழுது நின்ற நான், உன்னை ரக்ஷணத்துக்காக வேண்டி அதைப்பெற்று மகிழ்வதால், ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன்; கண்களில் நீர் மல்குகிறது; உடலோ உன் அளப்பரிய கருணையை உணர்ந்து உருகிப் பெருகுகிறது. அளப்பரிய இந்த ஆனந்தத்தைத் தாங்கும் சக்தி உளேனல்லேனே! என்ன செய்வேன்?!
இந்தப் பாசுரத்தால், ஆழ்வார் அநுபவித்த அந்த ஆனந்தம், அநுபூதி வெளிப்படுகிறது.
ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவரில்லை
பாரில் நின்பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
கராரொளி வண்ணனே! கண்ணனே! கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா! அரங்கமா நகருளானே! திருமாலை -29
பாரில் நின்பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
கராரொளி வண்ணனே! கண்ணனே! கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா! அரங்கமா நகருளானே! திருமாலை -29
உலகினர், மண், பொருள், உற்றம், சுற்றம், வீடு, மனை, வேலையாள் போன்றவற்றைப் பெற்றிருப்பதையே நல்ல 'வாழ்வு' என்கிறார்கள். இதன்படி பார்த்தால், நான் நல்ல 'வாழ்வு' பெறவில்லை. தத்துவத்தை உணர்ந்துவிட்டதால் இப்பிறவியில் உள்ள ஊரில். அடுத்தபிறவிய்ல பிறப்பது உறுதியில்லை. ஆகவே, 'இது என் ஊர்' என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை; இன்று உள்ள இந்த ஊரிலாவது, நான் வாழ ஒரு வீடு உண்டா எனில் அப்படி எதையும் நான்
எதுவும் சேர்க்கவில்லை; இப்படி உலகியல் பொருள் சேர்க்காதவனை உலகம் மதிக்காது என்பதால், நான் 'எனக்கு இவர்கள் உற்ற உறவினர்' என்று சொல்லிக் கொள்ள உற்றார் ஒருவருமில்லை; ஆகவே 'இவர் காப்பார்' என்று ஆறுதல் பெற எனக்கு யாரும் இல்லை; இப்படிப்பட்டவர்கள் அகில உலக நாதனான உன்னையாகிலும் பக்தி, சரணாகதி மூலமாகப் பற்றினேனா? எனில், அதுவுமில்லை; பற்றியிருந்தால், பரமபுருஷனான, பரமாத்மாவான, லோகபிதாவான நீ என்னைக் காப்பாய் என்று உறுதி ஏற்படும்; என் விஷயத்தில் அதுவும் இல்லையே; ஆனால் நீ யாரையும் கைவிடமாட்டாய். ஏனெனில் நீ பரம் ஜ்யோதி; எல்லார் மீதும் ஸமமாய் கருணை மழை பொழிபவள்; மிக மிக எளியவர்களான யாதவர்களோடும், ஸஜாதீயனாய்ப் பழகி, அவர்களையும் காத்த க்ருஷ்ண பரமாத்மா; தத்வம் எதுவும் அறியாத நான் உன்னை நோக்கி, இதோ, ஊழிவெள்ளத்தில் மூழ்கிக் கொண்டு, தத்தளிக்கிறவன் நிலையில் இருந்து கொண்டு கதறுகின்றேன்; இந்தக் கதறல் எல்லாம் உன்னை நோக்கியே எழுப்பப்பட்டது; ஏனெனில் உன்னையன்றி என்னைக் காக்க வல்லவர் வேறு யார் உள்ளனர்? யாருமில்லை; ஆகவே, என் பயத்தையும் துயரையும் போக்க, விரைந்தோடி வருவாய், அரங்க நகரப்பனே!
ஒவ்வொரு சேதனனும் அநுதினமும் மனதுணர்ந்து பரமனிடம் விண்ணப்பிக்க வேண்டிய பாசுரம்.
மனத்திலோர் தூய்மையில்லை வாயில்ஓர் இன்சொல்லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி வாளின் வாளா
புனத்துழாய் மாலையானே! பொன்னி சூழ் திருவரங்கா!
எனக்கினிக் கதியென் சொல்வாய்? என்னை யானுடைய கோவே! (திருமாலை 30)
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி வாளின் வாளா
புனத்துழாய் மாலையானே! பொன்னி சூழ் திருவரங்கா!
எனக்கினிக் கதியென் சொல்வாய்? என்னை யானுடைய கோவே! (திருமாலை 30)
அரங்க நகரப்பனே! இந்த உலக வாழ்வில் எதிர்மறைகள் என்னை எந்த அளவுக்குத் தாழ்த்தி விட்டன பாராய்! முக்கரங்களாலும் நான் என் தூய்மையை இழந்து விட்டேன். மனத்தில் எப்போதும் தீய எண்ணங்களே நிறைந்து தமஸ்ஸாகிற இருள் மண்டிக் கிடப்பதால், ஸத்வத்துக்கு (தூய்மைக்கு) இடமில்லை; வாக்கால் நன் செயல் புரிகிறேனோ? என்றால், அதுவும் இல்லை; இனிய சொற்களைப் பேசுவதில்லை; எப்போதும் சினம் மூள்கிறது; அதனால் ஏற்பட்ட விரோத பாவத்துடன், உரத்த குரலில், எல்லார் பேரிலும் வசைமாரி பொழிகின்றேன். இப்படி த்ரிகரணங்களினாலும் மாசுபட்டு நிற்கிற எனக்கு ஸர்வ வ்யாதி பேஷஜம் (எல்லா நோயையும் தீர்க்கும் அருமருந்து) ஆகிய நீயே தூய்மைப் படுத்தக் கூடிய தலைவன்; நீ தண்ணந்துழாய் மாலையணிந்தவன்; துழாய் மணமும், துளபம் பட்ட காற்றும் ஸகல தோஷ நிவ்ருத்தி தருவன; நீ வசிக்கும் இடமோ 'கங்கையிற் புனிதமாய' காவிரி, இரு புறமும் சூழ்ந்து உனக்குச் சாற்றப்பட்ட மாலை போன்று விளங்கக் கொண்டது; இந்தத் தூய துளஸியும், காவேரி தீர்த்தமும் என்னை - என் முக்கரணங்களையும் - சுத்தப்படுத்தவல்லவையே; இப்படி உன்னைத் திருவரங்கத்தில், முழுமையாகச் சரண் பற்றிவிட்டதால், 'நான் உனக்கே யேஸஷபூதன்' (அடிமை) என்று உணர்ந்து உன்னை 'சரணாகதி'யாய் அடைந்துவிட்ட இந்த ஜீவனுக்கு நீ ப்ரபு; ஸேஷி (யஜமானன்); 'என்னையாளுடையகோ' - உன் குடிமகனான என்னை மன்னனாக நீ காக்க வேண்டியது உன் கடமை; உன்னையன்றி இனி எனக்கு வேறு ஏது கதி உண்டு? என்று நீயே சொல்லு, யாருமில்லை என்பதுதான்.
இங்கு சரணாகதி தத்வங்களுடைய எல்லா அங்கங்களும் சொல்லப்படுகின்றன என்பர் பெரியோர்.
திருமருமார்ப! நின்னைச் சிந்தையுள் திகழாவைத்து
மருவிய மனத்தராகில் மாநிலத்து உயிர்களெல்லாம்
வெகுபரக்கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும்
அருவினைப் பயனதுய்யார் அரங்கமாநகருளானே! - (திருமாலை - 40)
மருவிய மனத்தராகில் மாநிலத்து உயிர்களெல்லாம்
வெகுபரக்கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும்
அருவினைப் பயனதுய்யார் அரங்கமாநகருளானே! - (திருமாலை - 40)
தன்னிடம் உள்ள தோஷங்களையெல்லாம் சொல்லி, 'இவ்வளவு தோஷங்கள் உள்ள என்னையும் உன் அடிமையாக ஏற்று நீ அருள் புரிவாயாக' என்று பேசிய ஆழ்வார், அவனை நினைத்து தியானத்தில் ஈடுபடுபவர் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று கூறுகிறார் இங்கே.
'ஸ்ரீவத்ஸம்' என்கிற திருமார்பில் எம்பெருமான் தரித்துள்ள, ஜீவாத்மாக்களின் அம்சமாக உள்ள க்ஷணப்பொழுதும் விலகாது நித்யவாசம் பண்ணுகிற ஜகன்மாதா ஸ்ரீலக்ஷ்மியின் அருகிலேயே உள்ளது. அதாவது, ஜீவாத்மாக்கள் எல்லாரையும், குற்றம் காணாது, தாய் மனப்பான்மையால் ரக்ஷிக்கிற அந்த லோகமாதாவின் அருகில் ஜீவாத்ம தத்வத்தின் உருவகமான ஸ்ரீவபத்ஸம் இருப்பது சாலப் பொருத்தமேயல்லவா?
இப்படிப்பட்ட 'திருமருமார்பனை' மனத்தினால் ஆழ்ந்து 'த்யானத்'தினால் உபாசித்தால், அப்படிப்பட்ட பக்தன் ஸம்ஸாரத்தில் ஈடுபட்டுள்ளது எந்த செய்கையாயினும், தொழிலாயினும், அவனது அந்தச் செயல்பாடுகள் எல்லாம் அவன் பண்ணும் 'துஷ்கர்மா'க்கள் (தீவினைகள்) என்ற வகையில் சேராது; அந்தக் கர்மாக்கள் அவனால் செய்யப்பட்டதாகாது (கர்த்ருத்வம்); அந்தக் கர்மாக்களால் ஏற்பட வேண்டிய (பாப) பலன்களும் அவனை அண்டாது; இதைக் காட்டும் வண்ணம், ஆழ்வார், “மிகப் பெரிய பாபமன ஜீவஹிம்ஸையைப் பண்ணுகிறவனாக - உயிர்வாழ் ஜந்துக்களையெல்லாம் கொன்று, தீயிற் சுட்டு உண்ணுகிறவனாக - இருந்தாலும், இப்படிப்பட்ட கார்யத்தைப் பண்ணினதால் ஏற்படக் கூடிய துக்கத்தைப் பெறமாட்டான்” என்கிறார். இத்தகைய பாபிக்கே, துஷ்கர்மம் ஒட்டாது எனில், தோஷங்களை உடைய - ஆனால் உன்னைச் சரணடைந்த - எனக்கு உன் அருள் கட்டாயம் கிடைக்கும். ஆகவே அருள்வாயப்பா! அரங்க நகரோனே!
அமரவோரங்கமாறும் வேதமோர் நான்கும் ஓதி
தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேனும்
நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோரளவில் - ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்கமா நகருளானே! (திருமாலை -43)
தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேனும்
நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோரளவில் - ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்கமா நகருளானே! (திருமாலை -43)
தேவர்கள் தலைவனே! வேதங்கள் நான்கையும் பழுதற ஓதி, வேதாங்கங்களான ஸ்ரீக்ஷா, வ்யாகரணம் போன்ற ஆறையும் நன்கு கற்றுத்தேறி, அவற்றில் கூறப்பட்டவற்றை நன்றாக அநுஷ்டித்து வருவோர் மறையறிந்த சான்றோர்; இவர்கள் ஞானிகள்; பகவான் கீதையில் உரைத்தவாறு, இத்தகைய ஞானிகள்- ப்ரஹ்ம தத்வம் உணர்ந்தவர்கள் - உனக்கு மிகவும் ப்ரியமானவர்கள்; இப்படிப்பட்ட ப்ராஹ்மணோத்தமர்களேயாயினும்- அவர்கள் பகவத்பாதர்களை (அவர்கள் கீழே சொன்னவாறான வேத, வேதாங்கங்களைக் கற்ற அறிவிலாதோரானாலும்) தூஷித்தால், அந்த க்ஷணத்திலேயே, அபர்களுடைய ப்ராஹ்மண்யம் (பிராமணத்தன்மை) போய், அவர்கள் புலையர்களை விட இழிந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
பாகவதோத்தமர்களது மஹிமை அளவிடவே முடியாதது; அது பரமனின் மஹிமையை விட பேதங்களால், வேதாங்கங்களால் காட்டப்படும் ப்ரஹ்மமான நாராயணனது மஹிமையை விட உயர்ந்தது என்று ப்ரமாணங்கள் எல்லாம் ஒரு சேரப் புகழ்கின்றன. பூர்வர்கள் எல்லாரும் ஒரே குரலாக இதையே போதிக்கிறார்கள். இதுதான் இந்தப் பாசுரத்தின் திரண்ட பொருள்.
இக்கட்டுரையில் சில பாசுரங்களை மட்டுமே, இந்தத் 'திருமாலை' ப்ரபந்தத்திலிருந்து அநுபவிக்க முடிந்தது. இதிலிருந்தே ஸ்ரீமானான நாராயணனது ஸ்வரூபத்தைப்பற்றி எவ்வளவு தெளிவாக, எளிய தமிழில், ஆழ்பொருளை விவரிக்கிறது இந்த ப்ரபந்தம் என்பது வாசகர்களுக்குப் புரியும்.
முழுதாய் 45 பாசுரங்களையும், ஆழ்ந்து விரிவாய் பொருளுணர்ந்து பயின்றால், 'திருமால்' பெருமையை முழுதாய்ப் புரிந்து கொள்ள முடியும் என்பதில் ஐயமேதும் இல்லையல்லவா?
இது கொண்டே, இந்த ப்ரபந்தத்தின் உயர்வைத் தெரியப்படுத்தும் முகமாக 'திருமாலை யறியாதார் திருமாலை யறியாதாரே' என்றார்கள் பெரியோர். இதன் பொருள். 'திருமாலை என்றும் இந்தப் பிரபந்தத்தை முழுதுமாய் ஆழமாக, பொருளுணர்ந்து கற்காதவர்கள், திருமாலை - ஸ்ரீமானான நாராயணன் (அவனது ஸ்வரூபத்தை) முழுவதுமாக அறியாதாரே யாவர்.
'திருமாலை'யைக் கற்போம்: திருமாலை அறிவோம்.
No comments:
Post a Comment