Sunday, January 11, 2015

முருகனும் சங்கு சக்கரத்துடன் காட்சி அளிக்கிறார்

1. சங்கு சக்கரத்துடன் திருமால் தான் காட்சி அளிப்பார். ஆனால் மால் மருகனான முருகனும் சங்கு சக்கரத்துடன் காட்சி அளிக்கிறார், கும்பகோணம் அருகே உள்ள அழகாபுத்தூர் திருத்தலத்தில்.
2. குன்றக்குடி. முருகனின் சிறப்பு பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் போன்ற மகான்கள் வழிபட்ட திருத்தலம். மருது பாண்டிய சகோதரர்களுள் ஒருவரான பெரியமருதுவிற்கு ஏற்பட்ட ‘ராஜ பிளவை’ நோய் நீங்கியது இந்தப் பெருமானி அருட்பார்வையால் தான். இதன் மற்றொரு சிறப்பு மயில் போன்று அமைந்திருக்கும் இம்மலை தான். அதனால் இதற்கு ‘மயூரபுரி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கி.மு. நூற்றாண்டைச் சேர்ந்த மிகப் பழமையான குடவரைக் கோயில் ஒன்று இம்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இதன் மற்றொரு சிறப்பாகும். மற்றுமொரு விசேஷம் இத்தலத்தில் உள்ள நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே திக்கில் பார்த்தவாறு அதாவது இறைவனாகிய ஷண்முகநாதனைப் பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. இவைகளை தரிசிப்பதால் நவக்கிரஹ தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
குன்றக்குடி
மற்றுமொரு விசேஷம் என்னவென்றால் இங்கு முருகன் தனியாக ஒரு மயிலிலும், வள்ளி, தெய்வானை தனித்தனியாக இரு மயில்கள் மீதும் அமர்ந்து காட்சி அளிக்கின்றனர். தேவ சாபம் பெற்ற மயிலின் சாபத்தை நீக்கி அருள் புரிந்த தலம் இது என்றும் கூறப்படுகிறது.
3. முருகனை ஆறுமுகங்களூடனும், பன்னிரு கைகளுடனும் பார்த்திருக்கிறோம். சில தலங்களில் ஒரு முகம் உடையவனாக சுப்ரமண்யராக, தண்டாயுதபாணியாகக் காட்சி தருவதும் உண்டு. ஆனால் திருக்குறுங்குடி என்ற தலத்தில் முருகன் எட்டுக் கைகள் உடையவனாகவும், முக்கண்ணனாகவும் காட்சி அளிக்கிறார். அதே முருகன் நான்கு முகங்கள் உடையவனாக திண்டுக்கல் ஆலயத்திலும், சின்னாளப்பட்டி திருத்தலத்திலும் காட்சி அளிக்கிறான்.
4. கர்நாடகாவில் உள்ளது குகே சுப்ரமண்யா ஆலயம். ஆதி சங்கரர் வந்து வழிபட்ட இத்திருத்தலத்த்தில் முருகன் தலைக்குமேலே ஐந்து தலை நாகம் குடைபிடிக்க சுப்ரமண்யராகக் காட்சி அளிக்கிறான்.
வடிவேல் முருகன்
5. காஞ்சிபுரத்தில் உள்ளது குமரக் கோட்டம். இங்கு தான் கச்சியப்ப சிவாசாரியாரால் கந்த புராணம் அரங்கேற்றப்பட்டது. பழம் பெருமை வாய்ந்த இத்திருலத்தை தனது பயணத்தின் போது ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தரிசனம் செய்யாமல் செல்ல முற்பட, முருகனே ஒரு இளைஞன் உருவில் வந்து வழிகாட்டி தரிசனம் செய்ய வைத்தார். அத்தகைய சிறப்பு மிக்க இம்முருகனுக்கு தினம்தோறும் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியின் போது எண்ணெய்க்காப்பு செய்விக்கப்படுகிறது.
6. திருத்தணிகை. முருகன் தன் சினம் தணிந்து அமர்ந்ததால் இத்தலத்து முருகப்பெருமானுக்கு தணிகை முருகன் என்பது பெயராயிற்று. முருகனின் எல்லாத்தலங்களிலும் கொண்டாடப்படும் ‘சூரசம்ஹார விழா’ இத்தலத்தில் கொண்டாடப்படுவதில்லை. காரணம், இவன் சூரனை அழித்து சாந்த சொருபீயாக தணிகை வேலனாக அமர்ந்தவன் என்பதால்.
7. சிக்கல் முருகனுக்கு கந்த ஷஷ்டியின் வேல் வாங்கும் நிகழ்ச்சியின் போது வியர்வை பெருகும். எவ்வளவு துடைத்தாலும் நிற்காது பெருகிக் கொண்டே இருக்கும். தேவர்களின் துயரத்தை, சிக்கலைத் தீர்க்க முருகன் திருவுளம் கொண்டதால் இத்தலத்துக்கு சிக்கல் என்று பெயர். முருகன் இங்கு சிங்கார வேலனாக, அழகனாகக் காட்சி அளிக்கிறான்.
8. முருகன் எல்லா தலங்களிலும் மயில் மீது அமர்ந்தவாறே காட்சி அளிப்பார். ஆனால் படவேட்டிற்கு அருகே உள்ள குமரன் குன்றத்தில் முருகன் மயில் மீது நின்றவாறு காட்சி அளிக்கிறார்.

No comments:

Post a Comment