Sunday, February 8, 2015

மர்ம குகைகளும் ராஜநாகமும்



மர்ம குகைகளும் ராஜநாகமும்


சித்தர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் வாழ்ந்த மலைக் குகைகளில், அவர்கள் தவம் செய்து இறைவனை அடைந்த நிலையும் அவர்களுக்கு துணையாகவும், காவல் தெய்வமாகவும் ஒரு ராஜநாகம் அவர்களோடு பவுர்ணமி நாட்களில் தவம் இருந்த வரலாறு வேலூர் மலையில் நடந்துள்ளது.

இன்றும் அந்த ராஜநாகம் தவம் செய்து வருகிறது என்பதற்கு வேலூர் மலையையும், அதில் உள்ள நூற்றுக்கணக்கான குகைகளையும் உதாரணமாக கூறலாம். 

கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த மலையில் ஒரே நேரத்தில் 100 விலங்குகள் தங்கும் விலங்கு உறங்கும் பாறை, ஆயிரம் அகோரிகள் குடிகொண்டு தவம் செய்யும் அகோரி குகை, படுத்து தவழ்ந்து செல்லும் தவகுகை, இப்படி பல குகைகள் உள்ளன.

அதோடு அடர்ந்த காட்டுப்பகுதியாக அக்காலத்தில் இருந்துள்ளது. சூரிய கதிர்கள் பூமியை தொடாத சூரியன் புகா காடு என்றும், அனைத்து மிருகங்களும் வாழ்ந்த ஒரு வனமாக இந்த மலை இருந்துள்ளது.

மன்னர்கள் படையெடுப்பில் காடுகளில் பதுங்கிய வீரர்கள் மலைகுகைகளில் வாழ்ந்த அகோரிகளை விரட்டி அதில் தங்கி போர் வியூகங்களை வகுத்துள்ளனர். அதோடு அடர்ந்த காடுகளை வெட்டி அழித்து குடில்கள் அமைத்துள்ளனர். மேலும் பெரிய பாறைகளை உடைத்து கோட்டையும் கட்டியுள்ளனர். இதனால் அடர்ந்த காடு அழிக்கப்பட்டு பாறைகளும் உடைக்கப்பட்டு பல குகைகள் அழிக்கப்பட்டுவிட்டன.

வேலூர் கோட்டை, விரிஞ்சிபுரம் கோவில் இன்னும் பிற மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அனைத்து கோவில்களுக்கும் இங்கிருந்துதான் பாறைகள் உடைக்கப்பட்டு கற்கள் கொண்டு செல்லப்பட்டது. மலைமீது கட்டப்பட்ட அழகான ராணிக்கோட்டை பாறைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டாலும், தேக்கு, சந்தனமரங்கள் கொண்டு அழகு சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராணி அந்தபுரத்தில் நின்று இயற்கையை ரசிக்கும்போது தென்றல் காற்றில் சந்தன வாசனையில் இயற்கை அழகை ரசித்ததாக வரலாறு கூறுகிறது.

ராணியை காப்பாற்ற மன்னர்கள் வீரர்களை மட்டும் நம்பாமல், ராணி கோட்டையின் நுழைவு வாயிலில் ஆள் விழுங்கும் விஷ மூலிகையை வளர்த்து வந்துள்ளனர். இந்த விஷ செடி ஆட்களின் வாசனை பட்டவுடன் அவர்கள் இருக்கும் பகுதி நோக்கி நகர்ந்து அவர்களை மூடி கொண்டு ரத்தம் உறிஞ்சி சாகடித்து விடுமாம்.

ஆப்பிரிக்கா காடுகளில் மட்டுமே இருக்கும் இந்த விஷ கொடி அக் காலத்தில் வேலூர் மலையில் மன்னர்களால் வளர்க்கப்பட்டுள்ளது. தற்போதும் இந்த ஆள் விழுங்கும் மூலிகை விஷ கொடி ராணிக்கோட்டை நுழைவு வாயிலில் உள்ளது. இதை அறியாத பலர் அந்த கொடியால் ஈர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அதோடு ராணிக்கோட்டையில் மரங்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள், வாசல் கதவுகள் சன்னல்கள் தற்போது கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டன. அக்காலத்தில் அகோரிகள் நிர்வாணத்துடன் தவம் கொண்டதால் இவர்களுக்கு துணையாக ராஜநாகம் ஒன்று பவுர்ணமி நாட்களில் இவர்களோடு படம் எடுத்து தவம் கொண்டுள்ளது. அந்த நாட்களில் மலையை சுற்றிலும் மல்லிகை பூ வாசம் வீசுவதுடன் அகோரிகள் எலுமிச்சம்பழம் மேல் கற்பூரம் வைத்து ராஜநாகத்தை வணங்குவார்களாம். அப்போது எலுமிச்சை பழம் விபூதியாக மாறிவிடுமாம். அந்த விபூதியை நெற்றியில் பூசி கொள்வதுடன் உடல் எங்கும் பூசி கொண்டால் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாவதாக கூறப்படுகிறது.

அதோடு காட்டில் அரியவகை மூலிகைகளை ராஜநாகம் துணைகொண்டு கண்டுபிடித்ததாகவும், அதற்கு சித்தர்கள் சிறப்பு யாகங்கள் நடத்தி ராஜநாகத்தை வழிபட்டதாக கூறப்படுகிறது. இன்றும் அகோரிகள் தவம் செய்த குகைகளில் நிர்வாண சாமியார்கள் தவம் செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் அவர்களுக்கு துணையாக அந்த ராஜநாகம் தவம் செய்கிறது. சித்தர்கள் நடமாட்டம் இருந்தாலும் அவர்கள் மனிதன் கண்களுக்கு தெரிவதில்லை. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களில் உள்ள மர்ம குகைகளில் இன்றும் மணியோசை கேட்பதுடன், சாம்பிராணி, விபூதி ஊதுவத்தி மல்லிகை பூ வாசனைகள் மாறி, மாறி, வீசுவதாகவும், வாசனை வீசும் குகைகளில் சித்தர்கள் வாழ்வதாகவும் நம்பப்படுகிறது.

மலையடிவாரத்தில் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சித்தர்களால் கட்டப்பட்ட ஆலயம். இந்த ஆலயத்தில் அகத்தியர் தவம் இருந்து வழிபட்டதோடு சித்த மருத்துவம் குறித்தும் அதன் பயன்பாட்டை குறித்தும் தனது சீடர்களுக்கு எடுத்து கூறியதோடு அதனால் நீங்கும் நோய்கள் குறித்தும் விளக்கி உள்ளார். அகத்தியர் அருளிய மூலிகைகளை மக்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக வழங்கி வந்துள்ளனர் அவரது சீடர்கள்.

மருத்துவமணைகள் இல்லாத நாட்களில் இவர்கள் கொடுத்த மூலிகையை அப்போது எல்லா நோய் களையும் தீர்த்துள்ளது. இந்த காசி விஸ்வநாதர் ஆலயத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான அகத்திய சீடர்களின் ஜீவசமாதிகள் உள்ளன. அதோடு அகத்தியர் தவம் செய்த குகையும் உள்ளது. அகத்திய முனிவர், அத்திரிமுனிவர், ஜனகாதி முனிவர் போன்ற முனிவர்கள் தவம் செய்த குகைகள் உள்ளன. இந்த குகைகள் அனைத்தும் செடி, கொடிகளில் மூடப்பட்டு இருந்தாலும், இதன் அருகில் செல்லம்போது இப்போதும் தெய்வீக மனம் வீசுவதாக கூறுகின்றனர்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மலைமேல் உள்ள கருமாரி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள புற்றுக்கு பால் ஊற்ற பவுர்ணமி தோறும் சென்று வந்த ஒரு பெண்ணை, அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் தவறான எண்ணத்துடன் பின் தொடர்ந்து வந்துள்ளார். ஒரு நாள் அதே பெண் பவுர்ணமி அன்று சாமி தரிசனம் செய்து புற்றுக்கு பால் உற்றி வரும் போது அந்த வாலிபர் வழிமடக்கி தகராறு செய்துள்ளார். அவரிடம் இருந்து விடுபட்டு ராஜநாகத்தை நினைத்து காப்பாற்று என கூச்சல் போட்டுள்ளார் அந்தப் பெண். பின்னர், பின் தொடர்ந்து வந்த வாலிபர் அந்த பெண்ணின் கண்களில் தெரியவில்லையாம். இரண்டு நாட்கள் கழித்து அந்த வாலிபர் நாகம் கடித்து இறந்து கிடந்ததை அவ்வழியே சென்றவர்கள பார்த்து கூறியுள்ளனர்

. இந்த அதிசயத்தை இன்னும் அப்பகுதி மக்கள் வியப்போடு கூறுகின்றனர். சித்தர்களுக்கு மட்டும் காவல் தெய்வமாக இருக்கும் ராஜநாகம் நம்பி வருபவர்களுக்கும் காப்பாற்றும் தெய்வமாக வேலூர் மலையில் இருந்து வருகிறது.

No comments:

Post a Comment