Friday, June 13, 2014

குழந்தை பாக்கியம் அருளும் வெயிலுகந்த அம்மன்


குழந்தை பாக்கியம் அருளும் வெயிலுகந்த அம்மன்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி ரோட்டில் சன்னதிபஸ் நிறுத்தம் அருகே பிரசித்தி பெற்ற வெயிலுகந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. புராண வலாற்று சிறப்பு கொண்ட இந்த கோவிலானது ஒரு காலத்தில் தென் கால் கண்மாய் கரையில் இருந்ததாக செவிவழி செய்தி கூறுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் ஆடி, ஆனி, ஆவணி மற்றும் சித்திரை மாதங்களில் அம்மனை சூரியபகவான் தரிசனம் செய்யகூடிய அற்புத காட்சியை காணலாம். அதாவது கோவிலின் கருவறையில் வெயிலுகந்த அம்மன் சிரசு,முகத்தில் சூரிய (வெயில்) ஒளிக்கதிர்கள் நேரடியாக விழும். 

இந்த அற்புத காட்சியை தரிசனம் செய்ய அந்த 4 மாதத்திலும் கோவிலுக்கு பக்தர்கள் படை எடுப்பார்கள்.மாசி மாதத்தில் 10 நாட்கள் அம்மனுக்கு விழா எடுக்கப்பட்டு வருகிறது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நலனுக்காகவும் திருப்பரங்குன்றம் நகரில் உள்ள ஒவ்வொரு தெருவாக பொதுமக்கள் ஒன்று கூடி முளைப்பாரி எடுத்து அம்மனை வழிபடுவார்கள். 

இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக ஆவணி மாதத்தில் நடந்து வருகிறது. இதே போல ஹார்விப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராம மக்களும் திரளாக கூடி பொங்க லிட்டு அம்மனை வழிபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய வரம் தந்து வெயிலுகந்த அம்மன் அருள் பாலித்து வருகிறார். 

அம்மனை நேரடியாக வழிபட்டால் தீராத வயிற்று வலி நீங்கும். நீண்ட கால தடை நீங்கி திருமணம் கை கூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் சகல சக்தி வல்லமை கொண்ட வெயிலுகந்த அம்மனின் தீர்த்தம் அருந்தினால் அம்மை குணமாகும். 

தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபடுகிறார்கள். நீண்டகால திருமண தடையால் அவதிப்பட்டவர்கள் தங்களுக்கு திருமணம் கை கூடியதும் அம்மனுக்கு பட்டு சேலை மற்றும் தங்கபொட்டு சாத்தி வழிபடுகிறார்கள். 

குழந்தை பாக்கியம் வேண்டியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு பக்தர்களும் தங்களது வேண்டுதலை அம்மனிடம் முறையிடுகிறார்கள். அது அம்மனின் சத்தியால் நிறைவேறி வருகிறது. ஆகவே இங்கு நாள்தோறும் திருவிழா போல பக்தர்கள் கூடி தரிசனம் செய்வதை காணலாம்.

No comments:

Post a Comment