*சத்திய வாகீஸ்வரர் கோவில், களக்காடு*
களக்காடு திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதனருகே 6 கிமீ தொலைவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. சத்தியவாகீசுவரர் கோயில் பழமையான சிவன் கோவில்.
இறைவர் திருப்பெயர் : சத்தியவாகீஸ்வரர், பொய்யாமொழியார்.
இறைவியார் திருப்பெயர் : கோமதியம்பாள், ஆவுடைநாயகி.
தல மரம் : புன்னை.
தீர்த்தம் : பச்சையாறு, சத்திய தீர்த்தம்.
வழிபட்டோர் : தேவர்கள், இராமன், சீதை, இலக்குவனன்.
'களக்காடு' களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி "களக்காடு" என்று பெயர் பெற்றது. இவ்வூர் பண்டை நாளில் 'திருக்களந்தை' என்று வழங்கப் பெற்றது. இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் "சோரகாடவி" என்று அழைக்கப்படுகிறது. சீதையின் பிரிவால் வருந்திய இராமனும், இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட, அப்போது இறைவன் அவர்களுக்கு "சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்" என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதையை மீட்டு வந்த இராமன், இத்தலத்திற்கு சீதை, இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு. ஒருமுறை, காசிப முனிவருக்கு பிள்ளைகளாகப் பிறந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. தேவர்கள் சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு வேண்டி நின்றனர். இறைவனார் தேவர்களிடம் பொதிகைமலையின் தென்புறத்தில் தாம் எழுந்தருளியிருக்கும் களக்குடி சென்று தவஞ்செய்யுமாறு கூறினார். தேவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் தேவர்கள் அசுரர்களுடன் போர் புரிய, சிவபெருமான் தமது கணங்களுடன் தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களுக்கு வெற்றியை நல்கினார். இதன் காரணத்தினாலேயே தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமானுக்கு "சத்தியவாகீசர், பொய்யாமொழியார்" என்றும், இப்பதிக்கு "சத்திய நகரும்" என்றும், இங்குள்ள தீர்த்தம் "சத்திய தீர்த்தம்" என்றும் பெயர் வழங்கலாயிற்று என்றும் தலவரலாறு சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment