Tuesday, May 25, 2021

திருமால் அவதாரங்கள்

""திருமால் அவதாரங்களில் மிகக் குறுகிய கால அவதாரம் #நரசிம்ம #அவதாரம்."

24 நிமிடங்கள்! கடிகை நேரமே நிகழ்ந்த மிகவும் உக்கிரமான அவதாரம்.

இந்த குறுகிய கடிகை நேரத்தில் நரசிம்மருக்கு "உக்கிரம்" எங்கேயிருந்து வந்தது?

பிரம்மாவுக்கோ, ஆராயாமல் கொடுத்த குற்ற பயம்!

 ரிஷிகளுக்கோ, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தங்கள் கர்ம யோகைத்தைக் கைவிட்ட குற்ற பயம்!

தேவர்களுக்கோ, தங்கள் சுயநலம் பற்றிய குற்ற பயம்!

அவரவர் செய்த குற்றங்களுக்கு அவரவர் மனசாட்சியே குத்தியதால், எம்பெருமான் "உக்கிரமாய்" தெரிகிறார்!

ஆனால் கண்ணாடிக்கு ஏது உக்கிரம்?

நீ எதுவோ, அதுவாகவே கண்ணாடியும் தெரிகிறது! கண்ணாடனும் தெரிகிறான்!

எல்லாரும் சூழ்ந்து கொண்டு குட்டிப் பிரகலாதனை மறைக்கிறார்களே அதனால் அல்லவோ நரசிம்மர் இதயம் உலுக்கி அங்கும் இங்கும் தேடுகிறார்? இதுவா "உக்கிரம்"? சொல்லப் போனால் நரசிம்மருக்கு அசதியும் வருத்தமும் தான் அப்போது வந்ததாம்!

நரசிம்மருக்கு ஏன் வருத்தம் வந்தது?

அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே
- பெரியாழ்வார்

பந்தனை =அசதி, வருத்தம்! எதுக்கு பகவானுக்குப் போயி வருத்தம்?
குழந்தைக்குத் தந்தை இன்றிப் போனதே என்று வருத்தம்! அந்தத் தந்தை தன் சுய பிரதாபத்துக்குக் குழந்தையைப் பல வழிகளில் கொல்லத் துணிந்தான்! அன்றோ தந்தையின் பாசம் இல்லாமல் போனது! இன்றோ தந்தையே இல்லாமல் போனது! அதான் பந்தனை = வருத்தம்! அந்த வருத்தம் தீரப் பல்லாண்டு பாடுவோம் என்கிறார் பெரியாழ்வார்!

ஒரு ஜென்மத் தந்தைக்குப் பதிலாய் ஒவ்வொரு ஜென்மத் தந்தையாய் தானே இருக்க முடிவு செய்து விட்டார் பெருமாள்!

இப்படி சுயநலமில்ல "உக்கிரம்" கண்டு, பெருமாளின் செந்தாமரை இதயத்தில் விற்றிருக்கும் ஸ்ரீ லட்சுமி அன்னை உணர்ந்தாள்! வியந்தாள்! இறைவனையும் பக்தனையும் சேர்த்து வைக்கிறாள்! பிரகலாதனுக்கு, இறைவனை, அலைமகளான மகாலக்ஷ்மியே ஆச்சார்யனாய் இருந்து பகவானைக் காட்டி வைக்கிறாள்!

லக்ஷ்மீ நாத சமாரம்பாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம்
என்பதல்லவோ குருபரம்பரை சுலோகம்! அன்னை தானே ஆதி குரு! அதான் கூட்டத்தில் இருந்து குழந்தையை விலக்கி, அவனை முன்னே செல்விக்கிறாள் செல்வி!

"உன்னைத் தான்-ப்பா திரும்பிப் பார்த்து, திரும்பிப் பார்த்து தேடுறாரு! அதை உக்கிரம் என்று தப்பாக நினைச்சிக்கிட்டு இருக்காங்க இவங்க எல்லாரும்! நீ எதுக்கும் கவலைப்படாமல் முன்னே போ"

என்று ஆற்றுப்படை செய்து வைக்கிறாள் அன்னை! பிரகலாதனும் இறைவனுக்கு அருகில் சென்று, அணைப்பைப் பெற்று, பக்த சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ஆகி விட்டான்!

"ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் திருவடிகளே சரணம் "

No comments:

Post a Comment