Monday, March 7, 2016

சுகப் பிரசவம் ஆக வழிபட வேண்டிய ஆலயம்

சுகப் பிரசவம் ஆக வழிபட வேண்டிய ஆலயம்




தன்னையே நம்பித் துதித்த ஒரு பெண்ணுக்கு, அவளது பேறு காலத்தில் தாயாக உருவெடுத்து பிரசவம் பார்த்தார் இறைவன்.

அப்படித் தாயும் ஆன இறைவனே தாயுமானவர். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் தாயுமானவரின் புராணக் கதை என்ன?

பூம்புகாரில் வணிகர் குலத்தில் பிறந்த ரத்தின குப்தன் என்பவனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லை. அப்பேறு வாய்க்க இறைவனை வழிபட்டு வந்தான். இறைவன் அருளால் ஓர் அழகிய புதல்வியைப் பெற்றான். அந்தக் குழந்தைக்கு  ரத்னாவதி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.

ரத்தினாவதி மணப் பருவம் எய்தினாள். அவளுக்கு நல்ல வரன் பார்க்கத் தொடங்கினான் ரத்தின குப்தன். தனகுப்தன் என்ற வணிகன் திருசிராமலையில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தன் மகளை மணம் செய்வித்து ரத்தினகுப்தன் ஏராளமான சீர் வரிசைகளுடன் அவளை திருசிராமலைக்கு அனுப்பி வைத்தான்.

தனகுப்தனுடன் திருசிராமலை வந்த ரத்தினாவதி தன் கணவனுடன் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்தி வந்தாள். திருசிராமலையில் அமர்ந்து அருள்பாலிக்கும் செவ்வந்தி நாதரை நாள்தோறும் வழிபட்டு வந்த  ரத்தினாவதி,  தாயாகும் பேறு அடைந்தாள்.

பேறு காலம் நெருங்கியது. இத்தகவலை பூம்புகாரிலிருக்கும் தன் தாய்க்கு தெரியப்படுத்தி அவளை உடனே புறப்பட்டு வரும்படி சொல்லி அனுப்பினாள் ரத்தினாவதி. தாயும் பூம்புகாரிலிருந்து புறப்பட்டாள். மகளுக்கு வேண்டிய மருந்துகள் எண்ணெய் போன்ற பொருட்களுடன் பூம்புகாரிலிருந்து திருசிராமலைக்கு பயணமானாள் அந்தத் தாய்.

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அந்த அன்னையால் திருசிராமலைக்கு வர இயலவில்லை. மகள் ரத்தினாவதியோ தன் தாயின் வரவை நோக்கி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள். தாய் இன்று வருவாள், நாளை வருவாள் என மகள் காத்திருக்க, காவிரியின் வெள்ளமோ தாயின் வருகையைத் தாமதப்படுத்தியது.

மகளோ ஏக்கம் கொண்டாள். தாயைக் காணவில்லையே எனக் கவலைக் கொண்டாள். தன் கவலையை தான் வணங்கும் செவ்வந்தி நாதரிடம் கண்ணீருடன் முறையிட்டாள்.

இறைவன் தனது பக்தையின் கண்ணீரைக் கண்டார். கவலையையும், வேதனையையும் கண்டார். அவர் மனம் கரைந்தது. உடனே ரத்தினாவதியின் தாய்வேடம் பூண்டார். செவ்வந்தி நாதர் ரத்தினாவதியின் வீட்டை அடைந்தார். தாயைக்கண்ட மகளின் மனமெல்லாம் பூரிப்பு. ஆனந்தம், அவளது கவலை எல்லாம் பறந்தோடியது. தாயாக வந்த இறைவன் ரத்தினாவதியுடன் தங்கினார்.

பிரசவத்துக்கான உரிய நேரம் வந்தது. மகளுக்கு தாய் மருத்துவம் பார்த்தாள். மகள் ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மகளோடு சில நாட்கள் தங்கிய தாய் மகளையும், சேயையும் கண்போல் பராமரித்தார்.

இடையில், காவிரியில் வெள்ளம் வடிந்தது. உண்மையான தாய் ஆற்றைக் கடந்து தன் மகள் வீட்டிற்கு வந்தாள். அவளைக் கண்ட ரத்தினாவதி திகைத்தாள்.

இரண்டு தாய்களா? இதில் உண்மையான தாய் யார்? அவளது குழப்பம் நீங்குவதற்குள் இறைவன் மறைந்தார். வானில் இறைவி மட்டுவார் குழலம்மையுடன் இடப வாகனத்தில் தோன்றி அனைவருக்கும் காட்சியளித்தார்.

அதுமுதல் திரிசிராமலை செவ்வந்தி நாதர் தாயுமானவர் என்ற திருப்பெயரோடு அழைக்கப்படலானார். இறைவனை மனமுருக வேண்டி வழிபட்ட ரத்தினாவதியும் தல அடியார்களுள் ஒருவராக இத்தலத்தில் விளங்குகிறாள்.

இதனை விளக்கும் வகையில், செட்டிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த லீலை திருச்சி தாயுமானவர் ஆலய சித்திரைப் பெருவிழாவில் 5ம் நாள் விழாவாக  நடைபெறுகிறது.

இங்கே, குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து, பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்ற அடிப்படையில், வாழையை கருவறையில் வைத்து பூஜித்து, பின்பு அதை பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

சுகப்பிரசவ வழிபாடு: மட்டுவார்குழலி அம்பாள் தனி சந்நிதியில் இருக்கிறாள். கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து, இந்த அம்பிகைக்கு 21 கொழுக்கட்டை, 21 அப்பம் படைத்து, ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையை கட்டி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

சுகப்பிரசவ சுலோகம்:
கர்ப்பிணிகள் தாயுமானவர், அம்பிகையை வேண்டி, இந்த சுலோகத்தை தினமும் 3 முறை சொல்லி வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

ஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத
மன்னாத ஸும்ப சசிசூட ஹர திரிசூலின
சம்போ ஸுகப்ரசவ க்ருத் பவ மே தயாளோ
ஸ்ரீமாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே

சுகபிரசவம் ஆக விரும்பும் பெண்கள் தாயுமானவரை வணங்கினால் தாங்கள் விரும்பியபடி சுகப்பிரசவம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Ganesan Pondicherry





No comments:

Post a Comment