Wednesday, March 30, 2016

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. அன்றைய நாளில் நிகழும் சில அதிசய நிகழ்வுகளைக் காண்போமா?

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. அன்றைய நாளில் நிகழும் சில அதிசய நிகழ்வுகளைக் காண்போமா?


குலுங்கும் மலை, திருக்கூடாச்சலம் என்று புராணப் பெயர் பெற்ற திரிகூடமலையே பின்னாளில் திருக் குற்றாலமென விளங்குகிறது. ஆதிகாலத் தில் இது வைணவத் தலமாக இருந்தது. மாமுனிவர் அகத்தியர் இங்கிருந்த பெருமாளுக்கு மூலிகைச்சாறு கொண்டு அபிஷேகம் செய்து, "குறுகுக... குறுகுக... குறுகுக...' என்று பெருமாள் தலையில் கைவைத்து அழுத்தி சிவலிங்கமாக மாற்றினார் என்பர். அகத்தியரின் விரல் சிவலிங்கத்தில் பதிந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அகத்தியர் அழுத்தியதாலும், அருகிலுள்ள நீர்வீழ்ச்சியின் ஓசையாலும் குற்றாலநாதருக்கு தலைவலி ஏற்பட்டதாக ஐதீகம். அது நீங்க, அரிய வகை மூலிகைகள் கொண்டு தைலம் தயாரித்து காப்பிட்டு அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அதை இன்றும் தரிசிக்கலாம். கருட பார்வையில் இத்தலம் சங்கு வடிவில் காட்சி தரும். அதனால் சங்கக் கோவில் என வானோர் கொண்டாடுகிறார்கள்.

இவ்வாலயத்தின் தலமரம் குறும்பலா. இதன் ஒரு பகுதியை இன்றும் கோவிலில் காணலாம். சக்தி பீடங்களில் ஒன்றாக வும் இது போற்றப்படுகிறது. பராசக்தி யோகத்திலிருப்பதால், இதை யோகபீடம் என்பர். பஞ்ச சபைகளில் இது சித்திரசபை. இச்சபையில் சித்திர வடிவில் நடராஜரின் நடனக் கோலத்தை தரிசிக்கலாம். இங்குள்ள சித்திர சபைக்கு நவநாயகர்கள் அனுதினமும் எழுந்தருளி ஆராதனை செய்வதாக ஐதீகம். குபேரனுக்குப் பிடித்தமான வட வருவி, சித்திராநதி, மதுகங்கை என்ற தீர்த்தங்களுடன் பிரதான அருவியும், ஐந்தருவிகளும் கொண்ட திருத்தலம்.


திருநெல்வேலி மாவட்டம், தென்காசி குற்றால நீர்வீழ்ச்சிக்கு அருகில், மலையடி வாரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகுற்றாலநாதர் ஆலயம். வனதேவதையான செண்பகா தேவியின் ஆலயம் மலையடிவாரத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மலைமேல் உள்ளது. சித்திரை மாதப் பௌர்ணமியன்று செண்பகாதேவிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்நாளில் இரவு வேளையில் மலைமேல் சந்தன (மஞ்சள் நிறத்தில்) மழை பெய்யுமென்று தலபுராணம் கூறுகிறது. இதனை அவ்வூர்ப் பெரியவர்களும் உண்மையென்று வலியுறுத்துகிறார்கள். இக்கோவிலுக்கு மேலேயுள்ள மலைமீது, மதுகங்கை என்ற தேனருவியில் கங்கையானவள் சிவலிங்கத்திற்கு தேனாபிஷேகம் செய்து வழிபடுவதால், தேன்துளிகள் சந்தன (மஞ்சள்) வண்ண மழையாய்ப் பெய்கிறது என்பது ஐதீகம். சந்தன மழை பெய்ததற்கு அடையாளமாக இரவுவேளையில் சந்தனமணம் வீசுமாம். சிலசமயத்தில் சிறுசிறு துளிகள் சாரல்போல் விழுவதும் உண்டாம். அடுத்தநாள் ஏறிச் சென்றால் மழைத்துளிகள் விழுந்த இடங்களைக் காணலாம் என்கிறார்கள். பாறையின்மேல் விழுந்த மழை நீர் மறைந்து போனாலும், அந்த அடையாளங்கள் மணல் பகுதியுள்ள சில இடங்களில் சந்தன நிறத்தில் காட்சி தருவதைக் கண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த மணலை சேகரித்துவந்து பூஜித்து நெற்றியில் இட்டுக்கொள்வார்களாம். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறுமென்று கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டம் திருவல்லத்திலிருந்து கிழக்கே மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ளது கஞ்சன் மலை. இது திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற திருத்தலம். இங்கு சுயம்புலிங்கமான ஸ்ரீவில்வநாதீஸ்வரருக்கு மலைமேல் உள்ள அருவியிலிருந்துதான் அபிஷேக தீர்த்தம் கொண்டுவருவார்கள். ஒருமுறை கஞ்சன் என்ற அரக்கன் இதைத் தடுத்தான். அதனால் பக்தர்கள் சிவபெருமானை வேண்ட, ஈசன் நந்தியை அனுப்பினார். நந்திக்கும் கஞ்சனுக்கும் கடும்போர் நடந்தது. கோபம்கொண்ட நந்தி கஞ்சனை துண்டுதுண்டாகப் பிய்த்தெறிந்தார். கஞ்சன் சிவபக்தனாக கடுந் தவமிருந்து வரங்கள் பெற்றவன். அந்த அகந்தையில் தவறாகச் செயல்பட்டதால் வீழ்ச்சி யடைந்தான்.

இத்திருத்தலத்தில் எல்லா பௌர்ணமியிலும் அபிஷேக ஆராதனைகள், அன்னதானம் நடைபெறும். இதில் சித்திரைப் பௌர்ணமியன்று இரவு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதும், இரவு பதினோரு மணிக்கு மேல் பன்னிரண்டு மணிக்குள் வடதிசையில் ஒரு ஜோதி தென்படும் என்கிறார்கள். முதலில் மூன்றடி உயரத்தில் தென்படும் இந்த ஜோதி கொஞ்ச கொஞ்சமாக வளர்ந்து பதினெட்டு அடி உயரம் வரை விரிந்து மறைந்துவிடும் அதி சயத்தை இன்றும் காணலாம் என்கிறார்கள் இப்பகுதிவாசிகள்.

சேலம் மாவட்டத்தில் கஞ்சன்மலை மிகவும் புகழ்பெற்றது. இந்த மலையடி வாரத்தில் சித்தேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. மலைமீதும் ஒரு சிவன் கோவில் உள்ளது. இந்த மலையில் சித்தர்கள் பலர் வசிப்பதாக நம்பப்படுகிறது. அந்த சித்தர் பெருமக்கள் சித்திரைப் பௌர்ணமியன்று மலைக்கோவில் அருகிலுள்ள நீரூற்றிலும், சித்தேஸ்வரர் கோவிலுக்கு அருகிலுள்ள தீர்த்தங்களிலும் நீராடி, வான்வழியாக கஞ்ச மலையை வலம்வருவார்களாம். நட்சத்திர ஒளிபோல இது தென்படும் என்கிறார்கள்.

இரவு பதினொரு மணியிலிருந்து விடியற் காலை நான்கு மணி வரை இந்த நட்சத்திர ஒளி மெதுவாக நகர்ந்துகொண்டே வருமாம். இதை தரிசிப்பதற்காக பக்தர்கள் கூட்டம் அன்று நிறைந்து காணப்படும். மேலும் சித்தர்கள் அமானுஷ்யமாக யார் கண்ணிலும் படாமல் அங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதால், பௌர்ணமிக்கு அடுத்த நாள் பக்தர்கள் அந்தத் தீர்த்தக் கட்டங்களில் நீராடி ஸ்ரீசித்தேஸ்வரரை வழிபடுகிறார்கள். சித்தேஸ்வரர் கோவிலைச் சுற்றி பத்து தீர்த்தங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசித்தேஸ்வரர் கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தியானமலை உள்ளது. அந்த மலைக்கு ஒற்றையடிப் பாதையில்தான் சிரமத்துடன் செல்ல வேண்டும். இந்த தியான மலையின் மேற்பரப்பில் ஒரு பெரிய பாறை உள்ளது. சித்திரைப் பௌர்ணமியன்று இரவு அந்தப் பாறைமீதமர்ந்து, விடியற்காலை வரை சித்தர் ஒருவர் தவம் செய்வதாக நம்பப்படுகிறது. பௌர்ணமிக்கு அடுத்த நாள் சூரியன் உதித்ததும் பக்தர்கள் அங்குசெல்கிறார்கள். சித்தர் அமர்ந்திருந்த பாறையிலிருந்து ஒருவித ரீங்கார ஒலி காலை 6.30 மணி வரை கேட்குமாம். அந்த வேளையில் அந்தப் பாறைக்கு மலர்களை சமர்ப்பித்து தொட்டு வழிபடுகிறார்கள். இதனால் சித்தரின் ஆசீர்வாதம் கிட்டுவதுடன் உடல்நலம் வளம்பெறுவ தாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பாறைக்கு எதிரில் அருள்மிகு சந்தனமகாதேவன் என்ற பெயரில் ஒரு சிறிய கோவில் உள்ளது. தலமரமாக சந்தன மரம் உள்ளது.

சித்திரைப் பௌர்ணமியன்று மூலிகைச் செடிகள் நிறைந்த பகுதிகளில், முழுநிலவு வெளிச்சத்தில் பூமியிலிருந்து ஒரு வகை உப்பு பூரித்துக் கிளம்பும். இந்த உப்பு நிலவொளியில் மினுமினுவென்று ஒளிரும்.

இதை பூமிநாதம் என்று சித்தர்கள் அழைப்பார்கள். அந்த உப்பு சித்த மருந்துகளுக்கு அதிகமான சக்தியை ஊட்டும் திறன் கொண்டது. இந்த உப்பு சித்திரைப் பௌர்ணமியன்று வெளிப்படுவதை சித்தர் பெருமக்கள் கண்டுபிடித்ததால், இந்த நாள் ஆதியில் சித்தர் பௌர்ணமி என்றே பெயர் பெற்றிருந்தது. மாறாத இளமையும், மரணமில்லாத வாழ்வையும், நரை, திரை, மூப்பற்ற நலமிக்க உடலையும் பேணிக்காக்கும் சக்தி கொண்டதாம் அந்த உப்பு.

இப்படி பல மகிமைகள் நிறைந்த சித்திரைப் பௌர்ணமியன்று விரதம் மேற்கொண்டு, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால், பேறுகள் பல பெற்று வளமுடனும் ஆரோக்கியத் துடனும் வாழலாம் என்பது பெரியோர் வாக்கு!

No comments:

Post a Comment