Tuesday, March 17, 2015

பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்!

பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! gnanayohi.yohi
***************************************************************************************

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார். அதன்பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
பைரவர் வழிபாடு ஏன்?
பைரவர் வழிபாடு கைமேற் பலன்
இது தமிழகத்தில் வழங்கி வரும் பைரவர் வழிபாடு குறித்த ஆன்மீக மொழியாகும். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் அதனைத் தீர்த்துவிடத்தான் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். அதனால் தான் பைரவர் வழிபாட்டின் பலனைக் குறிக்க இந்தப் பழமொழி வழங்கப்பட்டது. நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள். அதுவே அவர்களின் நல்ல பார்வையால் சிலர் எதிர்பாராத நன்மைகளையும், புகழையும் அடைகிறார்கள். நன்மைகள் கிடைத்தால் சரி, ஆனால், வரும் துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூசை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைரவர் பூசை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. நமது ஜாதகத்தை தகுந்த சோதிடர்களிடத்தில் காண்பித்து நிலவும் கிரக நிலைகளை ஆராய்ந்து, எந்தக் கிரகத்தால் தோஷம் உள்ளதோ, அல்லது எந்தக் கிரகம் பலவீனமாக உள்ளதோ, அது பலமடைய எந்தக் கிரக திசாபுத்தி நடப்பில் உள்ளதோ அதற்குரிய பைரவரை வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும். நவக்கிரகங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ வழிபாடுகள் பரிகாரங்களாக சோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.நீங்கள் நல்ல பயனை அடைய, கிரகங்களின் பிராணனாக உள்ள பைரவரின் காயத்ரீயையும், அந்த பைரவரின் உபசக்தியின் காயத்ரீயையும் சேர்த்து துதித்து வந்தால் உங்கள் துன்பங்கள் யாவும் ஓடி ஒளியும். இன்பங்கள் எல்லாம் தேடி வரும்.
நவக்கிரக பைரவர்களும் உபசக்திகளும்
நவக்கிரகங்கள் - பிராண பைரவர் - பைரவரின் உபசக்தி
1. சூரியன் - சுவர்ணாகர்ஷணபைரவர் - பைரவி
2. சந்திரன் - கபால பைரவர் - இந்திராணி
3. செவ்வாய் - சண்ட பைரவர் - கௌமாரி
4. புதன் - உன்மத்த பைரவர் - வராஹி
5. குரு - அசிதாங்க பைரவர் - பிராமஹி
6. சுக்கிரன் - ருரு பைரவர் - மகேஸ்வரி
7. சனி - குரோதன பைரவர் - வைஷ்ணவி
8. ராகு - சம்ஹார பைரவர் - சண்டிகை
9. கேது - பீஷண பைரவர் - சாமுண்டி
பைரவரின் சிறப்பு வடிவங்கள்: பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சியளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன. உடற்பற்றை நீக்கியபடியால் பைரவர் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கின்றார். பைரவர் காவல் தெய்வமாகையால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாயாவது பைரவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடப்புறம் நேராகவும் நிற்கின்றது. நகரத்தார் கோயில்களில் காணப்படும் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. அஷ்ட பைரவ வடிவங்களில் இந்த நாய் வாகனம் வேறு வாகனங்களாகக் காட்சியளிக்கிறது.
பைரவர் - பைரவரின் சக்தி - வாகனம்
1. அசிதாங்க பைரவர் - பிராமி - அன்னம்
2. ருரு பைரவர் - மகேஸ்வரி - ரிஷபம்
3. சண்ட பைரவர் - கௌமாரி - மயில்
4. குரோதன பைரவர் - வைஷ்ணவி - கருடன்
5. உன்மத்த பைரவர் - வராகி - குதிரை
6. கபால பைரவர் - இந்திராணி - யானை
7. பீஷண பைரவர் - சாமுண்டி - சிம்மம் (மனித பிரேதமும் உண்டு)
8. சம்ஹார பைரவர் - சண்டிகை (இலக்குமியுடன் சேர்த்து சப்த மாதர்கள்) - நாய்
இவ்வாறு விதவிதமான வாகனங்களில் காணப்படும் பைரவர் ஒரு சில ஆலயங்களில் எவ்வித வாகனமும் இன்றி தனியராய் காட்சியளிக்கிறார். குறிப்பாக திருவான்மியூர், பேரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் உள்ள பைரவ வடிவங்களில் நாய் வாகனம் காணப்படவில்லை. எண்ணிலாக் கரங்களும், எண்ணிலாத் தலைகளும், எண்ணிலா கால்களும் கொண்ட காட்சிக்கு மிக மிக அரிதான வஜ்ர பைரவரின் திருவடிவம் ஒன்று புதுச்சேரி பிரஞ்சிந்திய பண்பாட்டுக் கழகத்தில் காணப்படுகிறது. மூன்று கால்களைக் கொண்ட அபூர்வ பைரவர் சிருங்கேரியில் காணப்படுகிறார். சூரக்குடியில் பைரவர் கதாயுதத்துடனும், திருவாரூரில் பைரவர் கையில் கட்டுவாங்கத்தையும் ஏந்தி அபூர்வ பைரவராகக் காட்சியளிக்கிறார். திருப்பத்தூருக்கு அருகில் பெரிச்சி கோயிலில் உள்ள பைரவத் திருவடிவம் எட்டுத் திருக்கரங்கள் கொண்டதாய் ஒரு கரத்தில் அறுபட்ட நிலையில் தலையொன்றை முடிக்கற்றையுடன் பிடித்தவண்ணம் காணப்படுகிறது. இன்னொரு வகையில் பிணத்தைக் குத்தி ஏந்திய நிலையில் கங்களாத்தண்டு உள்ளது. இவரருகே உள்ள நாய் இரண்டாம் இடக்கையில் தொங்கும் தலையின் தசைப்பகுதியை சவைத்துக் கொண்டிருக்கிறது.
பைரவர் வகைகள்: சிற்ப நூல்களும் சிவாகமங்களும் பைரவ மூர்த்தத்தை விவரிக்கும்போது அறுபத்து நான்கு பைரவர்களை அறிமுகப்படுத்துகின்றன. இன்னும் சில சிற்ப நூல்களில் இடை நூற்றியெட்டு வடிவங்களாகவும் குறிக்கப்படுகின்றன. இந்த எல்லா வடிவங்களிலும் சிறப்பான எட்டு வடிவங்கள் அஷ்ட பைரவர் என்று அழைக்கப்படுகின்றன.பொதுவாக பைரவர் நீல மேனி கொண்டவராய் சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய், பாம்புகள் பொருந்திய திருவரையும் மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், பாசம், உடுக்கை, மழு முதலிய தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் அஷ்ட பைரவர் வடிவங்களாகக் கூறப்படும் பொழுது அவரின் வண்ணம், ஆயுதம், வாகனம் இவைகள் மாறுபட்டுக் காணப்படும்.
அறுபத்து நான்குவித பைரவ மூர்த்திகள்: ஒரே பைரவர் எட்டு வகை பணிகளை எண் திசைகளிலும் ஏற்கும்போது அவர் அஷ்ட பைரவர்களாகத் தோற்றம் தருகின்றனர் எனவும், அவரே அறுபத்து நான்கு காலங்களிலும் அறுபத்து நான்கு பணிகளை ஏற்றுச் செயல்படும்போது அறுபத்து நான்கு வடிவங்களாகத் தோற்றமளிக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.
1. நீலகண்ட பைரவர் 2. விசாலாக்ஷ பைரவர்
3. மார்த்தாண்ட பைரவர் 4. முண்டனப்பிரபு பைரவர்
5. ஸ்வஸ்சந்த பைரவர் 6. அதிசந்துஷ்ட பைரவர்
7. கேர பைரவர் 8. ஸம்ஹார பைரவர்
9. விஸ்வரூப பைரவர் 10. நானாரூப பைரவர்
11. பரம பைரவர் 12. தண்டகர்ண பைரவர்
13. ஸ்தாபாத்ர பைரவர் 14. சீரீட பைரவர்
15. உன்மத்த பைரவர் 16. மேகநாத பைரவர்
17. மனோவேக பைரவர் 18. ÷க்ஷத்ர பாலக பைரவர்
19. விருபாக்ஷ பைரவர் 20. கராள பைரவர்
21. நிர்பய பைரவர் 22. ஆகர்ஷண பைரவர்
23. ப்ரேக்ஷத பைரவர் 24. லோகபால பைரவர்
25. கதாதர பைரவர் 26. வஞ்ரஹஸ்த பைரவர்
27. மகாகால பைரவர் 28. பிரகண்ட பைரவர்
29. ப்ரளய பைரவர் 30. அந்தக பைரவர்
31. பூமிகர்ப்ப பைரவர் 32. பீஷ்ண பைரவர்
33. ஸம்ஹார பைரவர் 34. குலபால பைரவர்
35. ருண்டமாலா பைரவர் 36. ரத்தாங்க பைரவர்
37. பிங்களேஷ்ண பைரவர் 38. அப்ரரூப பைரவர்
39. தாரபாலன பைரவர் 40. ப்ரஜா பாலன பைரவர்
41. குல பைரவர் 42. மந்திர நாயக பைரவர்
43. ருத்ர பைரவர் 44. பிதாமஹ பைரவர்
45. விஷ்ணு பைரவர் 46. வடுகநாத பைரவர்
47. கபால பைரவர் 48. பூதவேதாள பைரவர்
49. த்ரிநேத்ர பைரவர் 50. திரிபுராந்தக பைரவர்
51. வரத பைரவர் 52. பர்வத வாகன பைரவர்
53. சசிவாகன பைரவர் 54. கபால பூஷண பைரவர்
55. ஸர்வவேத பைரவர் 56. ஈசான பைரவர்
57. ஸர்வபூத பைரவர் 58. ஸர்வபூத பைரவர்
59. கோரநாத பைரவர் 60. பயங்க பைரவர்
61. புத்திமுக்தி பயப்த பைரவர் 62. காலாக்னி பைரவர்
63. மகாரௌத்ர பைரவர் 64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்
கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர்.
பைரவர் உற்பத்தி: சிவபெருமான் பஞ்சகுமாரர்களில் (பைரவர், கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார்) பைரவரும் ஒருவர் என்று கூறப்பட்டாலும் சிவபெருமான் துக்கம் அல்லது துக்கத்திற்குக் காரணமான பாபத்தைப் போக்குவதால் இவரும் பைரவன் என்றே அழைக்கப்படுகிறார். அவரது சக்தியான காளியும் பைரவி என்ற பெயரில் ஈசானத் திக்கில் இருந்து கொண்டு காவல் காக்கின்றான். பைரவரை வலிமைமிக்க ஞானமூர்த்தியாக உற்பத்தி செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அவரிடம் சிவபெருமான் அளித்தார். அவர் உயிர்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாவலாக இருப்பதுடன் எட்டு திசைகளிலும் அஷ்ட பைரவராக நின்று அவற்றையும் பாதுகாத்து வருகின்றார். அசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாகப் பைரவரைத் தோற்றுவித்து அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்று பைரவர் உற்பத்தியைப் புராணங்கள் கூறுகின்றன. பைரவருக்கு ÷க்ஷத்திரபாலக மூர்த்தி என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. ÷க்ஷத்திரம் என்றால் பூமி. பாலகர் என்றால் காப்பர். ÷க்ஷத்திராமாகிய உலகிற்கு ஊழிக்காலத்தில் நேர்ந்த துயரத்தை நீக்கிக் காத்தருளினமையால் சிவனுக்கு ÷க்ஷத்திரபாலக மூர்த்தி என்னும் பெயர் விளங்குவதாயிற்று என்று புராண வரலாறு கூறுகிறது.
பெண்கள் பலவீனமானவர்களாதலால், எந்தப் பெண்ணாலும் அசுரனான தன்னைக் கொல்ல முடியாது என்று கருதி தானாகாசுரன் என்னும் அசுரன் வரம் பெற்றிருந்தான். சாகா வரம் பெற்றதனால் தானாகாசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். அதனால் பிரம்மா முதலிய தேவர்கள் அசுரனின் கொடுமையிலிருந்து விடுபட சிவபெருமானை வேண்டினர். தவர்களின் துன்பத்தைக்கண்ட சிவபெருமானும் தனது அம்சமான காளியைத் தோற்றுவித்து தானாகாசுரனை அழிக்கக் கட்டளையிட்டார். சிவனின் கட்டளைப்படியே தானாகாசுரனைக் காளி அழித்ததுடன், அந்தக் கோபத்தீயுடனே உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளுடைய கோபத்தீயினால் உலக உயிர்களெல்லாம் வருந்தின. காளியின் கோபத்தீயைப் பருகுவதற்கு மாயையாய் பாலகன் உருக்கொண்டு இடுகாட்டில் குழந்தையாய்க் கிடந்து அழுதார். பசியால் அழும் குழந்தையைக் கண்ட காளி அதனைத் தூக்கி மார்புடன் அணைத்துப் பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த குழந்தை பாலுடன் அவளுடைய கோபத்தீயையும் சேர்த்துப் பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்தது. உலகமும் காளியின் அழிவிலிருந்து காக்கப்பட்டது. குழந்தையாய் அவதரித்து காளியின் கோபத்தைத் தணித்த குழந்தைதான் ÷க்ஷத்திரபாலர். இந்த ÷க்ஷத்திரபாலர் சிவனுடைய மூர்த்தங்களில் ஒன்று என்றும் நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அவரே பைரவரின் திருவடிவம் என்று இலிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
அஷ்ட பைரவர் உற்பத்தி: இரணியாட்சன் மகனாகிய அந்தகாசுரன் சிவபெருமானை எண்ணிப் பஞ்சாக்கினி வளர்த்து கடுந்தவம் செய்தான். அவனுடைய தவத்திற்கு இரங்கிய சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்தார். அசுரனும் தன்னை யாராலும் வெல்ல முடியாத பேராற்றலும், பெரும் போக நுகர்ச்சியும் தந்தருள வேண்டுமென வேண்டினான். சிவபெருமானும் அவன் கோரிய வரங்களைத் தந்தருளினார். சிவனிடம் வரம்பெற்ற அந்தகாசுரன் தேவர்களை அடக்கி, அவர்களுடைய தேவியர்களின் கற்பைச் சூறையாடத் தொடங்கினான். மேலும் தோல்வியுற்ற தேவர்களை பெண் வேடத்துடன் பணிபுரியும்படிச் செய்து அவமானப்படுத்தினான். அப்படியும் அவனது ஆணவம் குறையவில்லை. அந்தகாசுரனின் கொடுமையை தாங்க இயலாத தேவர்கள் பெண் வேடத்துடனேயே சிவபெருமானைச் சரணடைந்து தங்கள் இன்னல்களைக் கூறினர். அவர்களது துயரத்தைக் கண்ட சிவபெருமான் மகா பைரவரை உற்பத்தி செய்து அந்தகாசுரனின் ஆண்மையை அழித்து, தேவர்களின் துன்பத்தைப் போக்கும்படிக் கட்டளையிட்டார். மகாபைரவர் அதிஉக்கிரத்துடன் அவன்மீது போர் தொடுத்தார். அவருடைய கோபாக்கினியிலிருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றினர். அந்த எட்டு பைரவர்களுக்கும் தேவர்கள் அஷ்ட மாதர்களை அளித்து இன்பம் பெறச் செய்ததுடன் எட்டு வாகனங்களையும் அளித்தனர்.
அந்தகாசுரனை மகாபைரவர் வென்று அவனைத் தனது சூலாயுதத்தில் குத்தித் தூக்கியவாறு மூன்று உலகங்களிலும் திரிந்தார். அவனுடைய உடலிலிருந்து வழிந்த குருதியைக் குடித்தார். அவன் அஞ்சிச் சோர்ந்து இரஞ்சியதால் அவனை சூலத்திலிருந்து விடுவித்தார். முண்டகன் முதலிய அனேக அசுரர்கள் தோன்றிய போதெல்லாம் சிவபெருமான் அனேக பைரவர்களை உற்பத்தி செய்து அவர்களை அழித்து வருகின்றார். அவர்களின் சம்ஹாரப் பணி முடிந்தபிறகு ஈசான பாகத்திலுள்ள பைரவர் பதம் என்னும் இடத்தில் தங்கி சிவனை வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஸ்தலத்தையும் பைரவர் காப்பது போல ஈசான திக்கிலிருந்து காளி காத்து வருகிறார். பைரவருக்கும், பைரவிக்கும் ஈசான திசை உரியதாகும். திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள கால பைரவர் ஆலயமுக மண்டபத்தில் எட்டு பைரவர்களின் சுதைச் சிற்பங்களை தரிசிக்கலாம். சீர்காழி சட்டநாதர் ஆலய தெற்கு பிராகார வலம்புரி மண்டபத்தில் அஷ்ட பைரவர் உள்ளார்கள். அஷ்ட பைரவர்களும் வழிபட்ட எட்டு லிங்கங்கள் கொண்ட கோயில் காஞ்சிபுரம் அருகிலுள்ள பிள்ளையார் பாளையத்தில் உள்ளது. விழுப்புரம் பாண்டிச்சேரி சாலையில் உள்ள வடுவூர் சிவன் கோயிலில் எட்டு வடிவங்களில் பைரவர்களைக் காணலாம்.
பிரமன் தலையைக் கொய்தது (காசி காண்டத்தில்): சிவபெருமானுக்கு இருப்பது போலவே, ஒரு காலத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதனால் சிவபெருமானுக்குத் தான் எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்று பிரம்மா கர்வம் கொண்டிருந்தார். இந்த ஐந்து முகத்துடன் அடிக்கடி கயிலையம்பதிக்கு வந்து போய்க் கொண்டிருக்க, சில சமயங்களில் கயிலைக்கு வருவது சிவனா அல்லது பிரம்மாவா என பார்வதி தேவி குழப்பமடைந்தார். சிவபெருமான் என நினைத்து பார்வதி தேவி பரபரப்புடன் வணங்குகையில், பிரம்மா ஆணவத்துடன் சிரித்துக் கொண்டே செல்வது குறித்து பார்வதி தேவி சிவபெருமானிடம் முறையிட்டார். பிரம்மாவின் செருக்கை சிவபெருமான் அறிந்தவராதலால் அவர் தானே திருந்தட்டும் என்று பொறுமை காத்தார். அவ்வாறிக்கையில் மேரு மலையில் திருமாலிடம் பிரம்மா தன்னை சிவபெருமான் என கருதி பார்வதி தேவி எழுந்து மரியாதையுடன் வணங்கியதைத் தெரிவித்து கேலி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு குழுமியிருந்த தேவர்களும், முனிவர்களும் அவர்களைச் சூழ்ந்து பரப்பிரம்மன் என்பது யார்? என்று கேட்டனர். அதற்கு பிரம்மா, ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவியே என்னைக் கண்டு எழுந்து வணங்குகிறார்கள் என்றால் பரப்பிரம்மம் நானாகத்தான் இருக்க முடியும் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? மேலும் பரப்பிரம்மனை என்பதில் என் பெயர் பிரம்மா இருப்பது நானே பரப்பிரம்மன் என்பதைப் புலப்படுத்தவில்லையா? என்றார்.
பிரம்மனின் பதில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் திகைப்பைத் தந்தது. சிவபெருமானைப் பரம்பொருள் என்று கூறுவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக பிரம்மா தன்னையே பரப்பிரம்மம் என்று குறித்துக் கொண்டது அவர்களுக்கு ஆச்சரியமளித்தது. சரி திருமால் என்ன சொல்கிறார் என்று திருமாலின் பக்கம் திரும்பினர். உன்னைப் பெற்றெடுத்தவள் நான். அப்படி இருக்கும்போது நீ எப்படி பரம்பொருள் ஆக முடியும். பிறப்பு இறப்பு அற்றவர்தானே பரம்பொருள். நீ என்னிடமிருந்து பிறந்ததால் நீ பரம்பொருளாக இருக்க முடியாது. பிறப்பு இறப்பற்ற நானே பரம்பொருள் என்று திருமால் தெரிவித்தார். சிவனே பரம்பொருள் என்பதை உணர்த்த வேண்டி தாங்கள் கேட்ட கேள்விக்கு, சிவனே பரம்பொருள் என்று அவர்களிருவரும் கூறுவார்கள் என்று எதிர்பார்த்தால், இருவருமே பரம்பொருள் என்று ஒருவரை ஒருவர் வாதிட்டுக் கொள்வது முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் கவலையைத் தந்தது. அதனால் வேதத்திடமும் பிரணவத்திடமும் அவர்கள் முறையிட்டனர். வேதமும், பிரணவமும் பிரம்மா, திருமால் ஆகிய இருவரிடமும், எல்லா உலகங்களுக்கும் சிவபெருமானே பரம்பொருளாயிருக்க நீங்கள் இருவரும் இப்படி பொருத்தம் இல்லாமல் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்களே என்று கூறின. அப்படியும் அவர்கள் இருவரும் தம் வாதத்தை கைவிடத் தயாராக இல்லை. இவர்களிருவரும் இப்படி சண்டையிடுவதைக் கண்ட சிவபெருமான் அவர்களின் நடுவிலே ஜோதி வடிவில் காட்சியளித்தார். அவர்களோ அதனை ஏதோ ஓர் சுடர் என்று அலட்சியம் செய்தனர். ஆயினும் சிவபெருமான் பார்வதியுடன் அந்தச் சுடரிலே காட்சியளித்தார். அதனைக் கண்ட திருமால் ஐயம் தீர்ந்தவராய் சிவபெருமானே பரப்பிரம்மா என்பதை உணர்ந்தவராய் அவரைப் பணிந்து வணங்கினார். ஆனால் பிரம்மாவோ, என்னைப்போலவே ஐந்து தலைகள் கொண்டிருக்கும் சிவபெருமான் என்னைவிட எந்தவிதத்தில் உயர்ந்தவர். ஆகவே நான்தான் பரம்பொருள் என்று மார்தட்டினார். ஆணவத்தின் காரணமாகத் தன்னை இகழ்ந்த பிரம்மாவுக்குத் தகுந்த புத்தி புகட்டிட பைரவக் கடவுளை அந்த இடத்திலே தோன்றச் செய்தார். தன்னுடைய நடுச்சிரத்தின் மூலம் சிவபெருமானை இகழ்ந்து பேசிய பிரம்மனின் நடுச்சிரம் பைரவரின் நக நுனியால் கிள்ளி எடுக்கப்பட்டது.
தலை அறுபட்ட பிறகுதான் பிரம்மாவுக்குப் புத்தி வந்தது. அகந்தையால் தான் பேசிய பேச்சினை மன்னிக்குமாறு சிவனிடம் கோரினான். தன்னுடைய ஆணவத்தை அடக்கியதற்குச் சான்றாக தன்னுடைய ஐந்தாவது தலை அவருடைய கையிலேயே இருக்கட்டும் என்று பிரம்மா கேட்டுக் கொண்டார். ஐந்து முகங்களைக் கொண்டிருந்த பிரம்மா இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே அன்று முதல் நான்முகன் என்று அழைக்கப்பட்டார். பிரம்மனின் தலை பைரவரால் கிள்ளி எறியப்பட்டதால் அவருக்குப் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது. பிரம்மனின் தலை பைரவரின் கையில் ஒட்டிக்கொள்கிறது. பிரம்மனின் கபாலம் சுமந்த கையினராய் பைரவர் உலகம் முழுவதும் அலைந்து திரிந்து நர்மதா நதிக்கரைக்கு வருகின்றார். பின்னர் அங்குள்ள முனிவர்களை வணங்கி, தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் விலகும் வழியைக் கேட்க, அவர்களும் நீங்கள் காசிக்குச் சென்றால் உங்கள் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று கூறுகின்றனர். முனிவர்களின் அறிவுரைப்படியே பைரவர் காசிக்குச் செல்கின்றார். காசியின் எல்லையை மிதித்த உடனேயே பைரவரின் கையில் உள்ள பிரம்ம கபாலம் தெரித்து விழுகின்றது. அங்கே அவரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அதுவரை கபால பைரவர் (கையில் பிரம்மனின் தலையைத் தாங்கியிருந்தமை யால்) என்றழைக்கப்பட்டவர் அதன்பிறகு காலபைரவராகி காசியிலேயே நிரந்தரமாகத் தங்கி பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.
காசியில் கால பைரவர் அதிகாரம்: இராவணனை வதம் செய்ததால் ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்துடன் முடிசூட்டு விழா செய்வது நல்லதல்ல என்று ராமன் கருதினார். அதற்குப் பரிகாரமாக காசியிலிருந்து உருவான சுயம்புலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று முனிவர்கள் யோசனை கூறவே ராமன் தன் அருகில் நின்று கொண்டிருந்த அனுமனிடம், நீ உடனே காசிக்குப் புறப்பட்டுச் சென்று ஒரு சுயம்புலிங்கத்தைப் கொண்டு வா! என்று கூறினார். அனுமனும் ராமபிரானின் கட்டளைப்படியே காசியை நோக்கிப் புறப்பட்டார். ஆந்திர மாநிலம் சித்தூர் என்னும் மாவட்டத்தில் உள்ள இராமகிரி என்னும் இத்தலம் இராமாயண காலத்தில் திருக்காரிக்கரை என்று வழங்கப்பட்டது. இதனை காளிதேவி சமேத காலபைரவர் ஆட்சி செய்கிறார். ராமனுக்காக சுயம்புலிங்கம் எடுக்க அனுமன் காசிக்குச் செல்லும் விபரத்தைத் தன் ஞானக்கண்ணால் உணர்ந்த காலபைரவர் அனுமன் கையால் முதலில் கொண்டு வரப்படும் அந்த காசிலிங்கம் தன்னுடைய இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக சில முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். முதலில் சூரிய பகவானிடம் சென்று அனுமன் காசியிலிருந்து இந்தப் பக்கமாகத் திரும்பி வரும்பொழுது அவரது முழு சக்தியுடன் நன்கு பிரகாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிறகு கங்காதேவியை அணுகி, தாயே ! அனுமன் காசியிலிருந்து திரும்பிவரும் போது காசி முதல் இந்தத் தலம் வரையில் அனுமனின் கண்களில் படாமல் ஒளிந்திருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதற்குக் கங்கையும் உடன்பட்டாள். அடுத்து வாயு பகவானிடம் சென்று வாயுதேவா! அனுமன் காசியிலிருந்து திரும்பும்போது காசியிலிருந்து திருக்காரிக்கரை வரை தாங்கள் பலமான காற்றை வீசி நல்லது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வாயு தேவனும் பைரவர் கோரிக்கைக்குச் சம்மதித்தார். இறுதியாகத் தன் இருப்பிடம் திரும்பி திருக்காரிக்கரை மக்களின் கனவில் தோன்றி நாளை சூரியோதயம் முதல் மதியம் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.
கால பைரவரின் இத்திட்டங்களை அறியாத அனுமன் காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராடி காசி விசுவநாதரைத் தரிசித்து அங்கிருக்கும் சுயம்பு லிங்கங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு வான்மார்க்கமாக இராமேசுவரம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் கால பைரவருக்குக் கொடுத்த வாக்கின்படி வானத்தில் சூரியன் உதயமாகி கடுமையான வெப்பத்தைச் சிந்தினான். வாயுவோ தன் பங்கிற்கு தென் திசையிலிருந்து வட திசையை நோக்கி ஊழிக்காற்று போல வீசத் தொடங்கினான். கங்காதேவியும் ஆஞ்சநேயரின் கண்களில் படாதவண்ணம் ஒளிந்து கொண்டாள். வெய்யிலின் கடுமை, காற்றின் எதிர்வேகம், சிவலிங்கத்தின் பாரம் இவைகளைத் தாங்காமல் மிகவும் களைப்படைந்த அனுமன் குடிக்கத் தண்ணீர் தேடி அலைந்தார

No comments:

Post a Comment