Wednesday, December 10, 2014

காரைக்கால் அம்மையார் புராணம்

ஓம் நமசிவாய 

காரைக்கால் அம்மையார் புராணம் 


"பேயார்க்கும் அடியேன்"

பிறந்த தலம் - காரைக்கால்
முக்தி தலம் - திருவாலங்காடு
திருநட்சத்திரம் -பங்குனி சுவா
தி


தந்தை தாய் இல்லாத பிறப்பிலியாகிய இறைவன் எம் அம்மை என்று சொல்லிய பெருமைக்கு உரியவர்

காரைக்காலிலே வணிகர் தலைவராய் தனதத்தர் என்பவர் இருந்தார் . அவருக்கு பெண்மகவு பிறந்தது அக்குலம் தழைக்க வந்த அம்மகவுக்கு புனிதவதி என்று பெயரிட்டனர் தளிர்நடை பயிலும் நாள் தொட்டு பரமன் மேல் ஆராக்காதல் கொண்டு விளையாடும் போதும் சிவநாமம் மொழிவார் திருத்தொண்டர்களை கண்டால் அன்போடு தொழுவார் இப்படி வளர்ந்து மங்கைபருவம் அடைந்தார்

நாகையில் வணிகர் குலத்தில் நிதிபதி என்பவர் தனது புதல்வர் பரமதத்தனுக்கு அம்மையாரை மணம் பேசி முடித்தனர் எல்லாவகை சீரோடும் சிறப்போடும் திருமணம் இனிதே நடந்தேறியது
தனதத்தர் தனது சம்பந்தியின் அனுமதியோடு தன் மகளுக்கு தன் மாளிகை அருகிலேயே தனிக்குடித்தனம் வைத்தார் பரமதத்தன்

வாணிபம் செய்து தன் திருமனைவியாருடன் இனிது வாழ்ந்தார் அப்படி வாழுங் காலத்தில் வாணிபஞ்செய்யுமிடத்தில் இருந்தபோது அவரை காண வந்தவர்கள் இரண்டு இனிய மாங்கனிகளை தந்தார்கள் அவர் அவற்றை பணியாட்கள் மூலம் இல்லத்துக்கு கொடுத்தனுப்பினார் அம்மையாரும் அக்கனி களை வாங்கி வைத்தார் அவ்வமயம் ஒரு திருத்தொண்டர் அங்கு வந்தார் இறைஅடியவ ரைக் கண்டதும் அவருக்கு அமுதளிக்கும் பொருட்டு இருந்தார் அதற்கு சிறிது கால தாமதமாகும் என்று கணவர் அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை படைத்தார் மூப்பும் பசியும் மிக்க அடியவர் உண்டு களித்து அம்மையாரை வாழ்த்திச் சென்றார்

பரமதத்தரும் உணவருந்தும் பொருட்டு உச்சி
வேளையில் வந்தார் அவருக்கு அம்மையார் அன்னத்தோடு பருப்பு நெய் மற்றும் மாங்கனி படைத்தார் அக்கனி உண்ட பரமதத்தர் அதன் சுவையில் விரும்பி இன்னொரு கனியை எடுத்து வருமாறு அம்மையாரிடம் கூறினார்
இதை கேட்டதும் அம்மையார் இன்னொரு கனியை அடியவருக்கு அளித்து விட்டோம் கணவர் கேட்கிறார் என்ன செய்வது என்று மனம் தளர்ந்தார் கலங்கினார் சிவபெருமானை நினைந்து தேவ தேவா உன்னடியார்க்கு ஒரு கனியைப் படைத்து விட்டேன் கணவர் இவ்வாறு மறு கனியை
கேட்பார் என்று எண்ணவில்லை என் செய்வேன் கருணைக்கடலே அடியார் அல்லல் போக்கும் அருட்கடலே என்று தம்மை மறந்து அவரை நினைந்துருகினார் இறைவன் திருக்கருணையினால் அவர் திருக்கரத்தில் அதிமதுரக் கனி ஒன்று வந்தது அதைக் கணவனுக்கு தந்தார் அவர் அதை உண்டு அமுதினும் இனிய சுவையை கண்டு
அம்மையாரிடம் நான் அனுப்பிய கனி இது அன்று. மூன்றுஉலகத்திலும் இப்படிப்பட்ட கனி கிடைப்பது அரிது இது எப்படி உனக்கு கிடைத்தது ? என்று கேட்டார்

அம்மையார் திருவருளை வெளிப்படுத்து வதும் தவறு பொய் உரைப்பதும் தவறு என்று முன்னிலும் கலங்கினார் முடிவில் உண்மையை உரைப்பது என்று நடந்ததை கூறியருளினார் திருவருளை தெளியாத பரமதத்தன் அம்மையாரை நோக்கி சிவபிரான் அருளால் வந்தது உண்மையா யின் இன்னும் ஒரு கனி தருவித்து கொடு
என்றார் . அம்மையார் அரனாரை சிந்தித்து இன்னொரு கனி தாரும் இல்லையேல் எனது மொழி பொய்மையாகும் அருட்கடலே எனை ஆட்கொள்ளும் என்று வேண்டினார்
மணிகண்டர் திருவருளால் மாங்கனி வந்தது அதை கணவன் கையில்தந்தார் அவர் வாங்கியதும் அக்கனி மறைந்தது

இச்செயல் கண்ட பரமதத்தன் நடுநடுங்கி அம்மையாரை தெய்வம் என்று எண்ணி தன் சிறுமையை நினைந்து வருந்தினான்
தெய்வமாகிய அவர் தனக்கு தொண்டு செய்வதா என்று கருதி பிரிந்து வாழ்வதே தக்கது என்று முடிவெடுத்தான் கடல் கடந்து வாணிபம் செய்வதாகக் கூறி புறப்பட்டார் தான் தெய்வமாக எண்ணி மனதால் வழிபடும்
அம்மையாருக்கு மன வணக்கஞ் செலுத்தி கலமேறி புறப்பட்டான்

அயல்நாட்டில் வாணிபத்தில் பெறும் பொருள் ஈட்டி தாய்நாடு வந்து காரைக்கால் வராமல் பாண்டிநாடு சென்று தங்கி பண்டங்களை விற்று பெரும் தனவந்தனான் அவ்வூர் வணிகன் தன் மகளை மணம் செய்து வித்தான் பரமதத்தன் தனது புது மனைவி யுடன் வாழ்ந்தாலும் காரைக்காலில் உள்ள அம்மையாரிடம் அச்சம் கொண்டே இருந்தார் குபேரன் போல் அளவற்ற நிதி குவிந்தது இளைய மனைவி கருவுற்று பெண் மகவைப் பெற்றாள் அக்குழந்தைக்கு புனிதவதி என்று அம்மையாரின் திருநாமம் சூட்டினார்

அங்கே காரைக்காலில் அம்மையாரின் உறவினர்கள் பரமதத்தன் பாண்டி நாட்டில் இருப்பதை அறிந்து அம்மையாரை அழைத்து கொண்டு கணவனுடன் சேர்க்கும் பொருட்டு சென்று ஒரு சோலையில் தங்கி அம்மையா ருடன் வந்திருப்பதை ஒருவரிடம் சொல்லி அனுப்பினார்கள் அச்செய்தி கேட்ட பரமதத்தன் தமது இளைய மனைவியை அழைத்துக் கொண்டு விரைந்து வந்தார் கணவனை கண்டு இளம் பெண்மான் போல் நின்ற அம்மையின் அடியில் பணிந்து உமது திருவருளால் வாழ்வேன் இக்குழந்தைக்கு உமது திருநாமம் சூட்டியுள்ளேன் அருள் செய்யும் என்றான்

அது கண்ட அம்மையார் ஒதுங்கினார் சுற்றத்தினர் பரமதத்த இது என்ன புதுமை மனைவியை வணங்குகிறாய் உன் செயலின் உட்பொருள் யாது என்று வினவினார்கள்
பரமதத்தன் ஐயன்மீர் இவர் மானுடமல்லர் இவர் நற்தெய்வமாகும் இதை நான் முன்னமே அறிவேன் அதனால் தான் என் மகளுக்கு இத்தெய்வத்தின் பெயரை சூட்டியுள்ளேன் ஆதலால் அடி பணிந்தேன்
நீவிரும் அடிபணியுங்கள் என்றான் சுற்றத்தினர் அதுகேட்டு அதிசயித்தனர்
அது கேட்ட அம்மையார் கொன்றை அணிந்த இறைவன் கழல் போற்றி ஒன்றிய சிந்தையுடன் உரைக்கின்றார் கணவனுக்காக சுமந்த இந்த அழகு தசைப்பொதியை கழித்து உன்பால் உள்ளவர்கள் போற்றும் பேய் வடிவம் எனக்கு அருளும் என்று இறைவனைத் துதித்தார் அப்போது அம்பலவாணர் திருவருளால் என்பு வடிவாகி விண்ணும் மண்ணும் போற்றும் பேயுருக் கொண்டார் மலர்மழை பொழிந்தது வான துந்துபி ஒலி உலகமுழுதும் நிறைந்தது சுற்றத்தினர் இந்த அற்புதம் கண்டு தொழுது அஞ்சி ஓடி விட்டார்கள் அம்மையார் ஒருங்கிணைந்த மெய்ஞான உணர்வுடன் உமாபதியை அற்புத திருவந்தாதி என்ற திருநூல் பாடித் துதித்தார் பொற் பதம் போற்றும் நற்கணங்களில் நானும்
ஒன்றானேன் என்று மகிழ்ந்தார் பின்னர் இரட்டை மணிமாலை என்ற பிரபந்தம் பாடியருளினார்

சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கயிலையை சென்று நேரில் தரிசிக்க நினைத்தார் அம்மையாரின் பேயுருக் கண்டு வியந்து கண்டவர்கள் அஞ்சி ஓடுகின்றார்கள் அவ்வுரு கண்டவர்கள் தாங்கள் நினைத்ததை கூறுகின்றார்கள் அதை கேட்ட அம்மையார் அண்டர் நாயகர் என்னை அறிவார் அறியாத இம்மாக்களுக்கு நான் எவ்வுரு கொண்டிருந் தாலென்ன என்றார் மனவேகத்தினும் மிக விரைவாக கயிலை அருகில் சென்றார் பரமன் இருக்கும் மலையை பாதத்தினால் மிதிக்க அஞ்சி தலையால் நடந்து சென்றடைந்தார் . அம்பிகை அது கண்டு அதிசயித்து தேவதேவரே தலையினால் என்பு வடிவுடன் வரும் இவ்வுருவின் அன்பு தான் என்னே என்று வினவினார்

உமையே வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை. பெருமை மிக்க இவ்வடிவத்தை நம்பால் வேண்டிப்பெற்றனள் என்று கூறி அருகில் வந்த அம்மையாரை நோக்கி பிறப்பில்லாத புண்ணியர் "அம்மையே " என்று இந்த உலகம் உய்ய அழைத்தருளினார்

அங்கணன் அம்மா என்று அழைத்ததும் அம்மையார் அப்பா என்று பங்கய பாதமலரின் மேல் பணிந்தார் அவரை நோக்கி இறைவர் " நம்பால் வேண்டுவது யாது? என்று அருள் புரிந்தார் அம்மையார் அடிபணிந்து கேட்கின்றார் அறவாழி அந்தணரே உம்மிடம் ஒருபோதும் நீங்காத இன்ப அன்பு வேண்டும் , பிறவாமை வேண்டும் ஒருக்கால் பிறப்புண்டேல் உம்மை ஒருபோதும் மறவாமை வேண்டும் என்று வேண்டினார் இறைவர் அவ்வரங்களை அளித்து தென் திசையில் தொண்டை வளநாட்டிலே பழையனூர் அருகில் திருவாலங்காட்டில் நமது திருநடனத்தினைக் கண்டு கொண்டிரு என்று கருணை புரிந்தார்

கயிலையில் பெருமானிடம் விடை பெற்று திருவாலங்காடு அருகில் வந்து கால் வைக்க அஞ்சி தலையால் நடந்து சென்று பெருமானின் ஊர்த்துவ தாண்டவக்காட்சியை கண்டு இன்புற்று மூத்த திருப்பதிகங்கள் இரண்டு பாடியருளினார் இறைவன் திரு நடனம் என்றும் காணும் பேற்றை நடராஜர் அருகில் அம்மையாரை நாம் காணலாம்

அம்மையப்பர் இல்லாதவரும் உலகுக்கே அம்மையப்பராகவும் உள்ள அரனார் அம்மையே என்று அழைக்க பெற்று அவருடைய திருநடனத் திருவடியின் கீழ் என்றும் இருக்க பெற்ற அம்மையாருடைய
பெருமையை அளக்க அகில உலகத்திலும் ஆளில்லை இதை சேக்கிழார் பெருமான்

மடுத்தபுனல் வேணியினார் அம்மையென மதுரமொழி
கொடுத்தருளப் பொற்றாரைக் குலவியதாண் டவத்திலவர்
எடுத்தருளுஞ் சேவடிக்கீழ் என்றுமிருக் கின்றாரை
அடுத்தபெருஞ் சீர்பரவல் ஆரளவா யினதம்மா


என்று கூறுகின்றார்
பெருமையை அம்மையார் விரும்பவில்லை
பெருமை தானே வந்து தான் சிறப்படையும் பொருட்டு அம்மையாரை சார்ந்தது என்ற அழகு உள்ளத்தை உருக்ககூடியது

அம்மை அடிமலர் வாழ்க
அம்மையாரின் அவர் பெற்ற அந்த நற்பேறு நமக்கும் கிட்டும் பொருட்டு அரனார் பாதம் பணிவோம்


போற்றி ஓம் நமசிவாய



திருச்சிற்றம்பலம்

http://aanmeegamarivom.blogspot.in/

No comments:

Post a Comment