Thursday, December 11, 2014

விநாயகி...



விநாயகி...

பிள்ளையாரின் பெண்பால் தான் இந்த விநாயகி! கணேசினி, வைநாயகி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுபவன், மன்னிக்கவும், அழைக்கப்படுபவள்!
சாக்த மரபில், எல்லாத் தெய்வங்களையுமே பெண்வடிவில் பார்க்கும் வழக்கமுண்டு. அதைக் குறித்த தெய்வத்தின் சக்தி என்பார்கள். சிவனின் மகேசுவரி, திருமாலின் வைணவி, குமரனின் கௌமாரி, வராகரின் வராகி.. இப்படி நீள்கிறது இந்தப் பட்டியல். இவ்வழக்கமே, எழுகன்னியர்...
(சத்தமாதர்) வழிபாட்டுக்கும் வழிவகுத்தது.
இத்தகைய பெண்வடிவ வழிபாட்டு முறையில், விநாயகனின் வடிவம் தான் “விநாயகி”!
பிள்ளையார் வழிபாடு, புத்த மற்றும் சமண சமயங்களிலும் வழக்கிலிருந்திருக்கிறது. அவற்றையே பிள்ளையார் வழிபாட்டின் மூல சமயங்கள் என்று சொல்வோரும் உண்டு. அதற்கேற்றாற் போல், சில சமண நூல்கள், தாம் வழிபடும் யோகினிகளில் ஒருத்தியாக “விநாயகி”யைச் சொல்கின்றன. சைன பிரபாசூரி என்பவரின், “விதிப்பிரபா” எனும் நூல் (பொ.பி 13ஆம் நூற்றாண்டு) இவளை விதந்து புகிழ்கிறது
“தர்ம கோச சமக்கிரக” எனும் புத்த நூல், அவளை “கணபதி கிருதயா ” என்கின்றது.
வடமொழிக் காந்த புராணத்தில், அம்பிகையைச் சூழ்ந்துள்ள அறுபத்துநான்கு யோகினிகளில் ஒருத்தியாக விநாயகி கூறப்படுகிறாள்.
சில்ப ரத்தினா என்ற சிற்பநூலில் (பொ.பி 16ஆம் நூற்றாண்டு) “சக்தி கணபதி” என்ற பெயரில், யானைத்தலை கொண்ட பெண் வடிவில் அவள் சித்தரிக்கப்படுகிறாள்.
விநாயகி பற்றி, மிக அரிதாகவே புராணக்குறிப்புகள் கிட்டுகின்றன. இது, பிற்காலத்திலேயே, பிள்ளையார் பெண் வடிவில் பிரபலமாகியிருக்கிறார் என்பதற்கு ஒரு சான்றாகும்.
எனினும், வடநாட்டில் கிடைக்கும் சில விநாயகி சிற்பங்களும், தமிழ் நாட்டில், சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், சிதம்பரம், செந்தூர், திருக்குறுங்குடி, பவானி போன்ற தலங்களில், சிற்ப வடிவில் சிரித்துக்கொண்டிருக்கும் விநாயகி வடிவங்களும், ஒருகாலத்தில், அவள் வழிபாடு மிகப்புகழ் பெற்றதாக இருந்திருக்கவேண்டும் என்பதற்கு கட்டியம் கூறி நிற்கின்றன
சீனாவில், கூட ஒரு கணேசினி சிற்பம் கிடைத்திருக்கிறதாம்!
எது எப்படியிருந்தால் என்ன, ஒருநாமம் ஓருருவம் இல்லாதானுக்கு ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டும் நாம், இறைவனின் புதுப்புது வடிவங்களில் வியப்பும், புதுமையும் காண்பது வழக்கமான ஒன்றுதான்! இறைவனை விரும்பிய விரும்பிய வடிவங்களில் வழிபடத்தான் நம் நெறியில் பூரண எழுவரல் (சுதந்திரம்) வழங்கப்பட்டுள்ளதே!
முக்கியமான ஒன்று! என்னதான் புதுப்புது தெய்வங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அல்லது பண்டு தொட்டு நிலவிவந்த ஒரு தெய்வ வழக்கம் ஒரு பகுதியில் அருகிச்சென்றாலும், அது சைவ அல்லது வைணவ சமயப் பொதுநீரோட்டத்தில் தன்னைக் முற்றாகக் கரைத்து அழிந்துபோய், தனது சுவடுகளை மட்டும் விட்டுச்செல்வதை, காலம்காலமாக நம் வழிபாட்டுநெறியில் காணமுடிகிறது.
விநாயகிகளும், திருமாலின் அவதாரமாக மாற்றப்பட்ட புத்தர்களும், இன்றும் பல தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் காணக்கிடைக்கும் கேட்டை (மூதேவி)களும் இதைத்தான் நமக்கு சொல்லாமல் சொல்லி, புன்னகைத்துக்கொண்டிருக்கின்றனர்.
நன்றி: நக்கீரன் இதழ்.

No comments:

Post a Comment