சிவராத்திரி விரதம் இருக்கும் முறை:- 7.3.2016 திங்கட்கிழமை
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று காலை நீராடி, இறைவனை நினைத்து, விரதம் நன்முறையில் நிறைவேறப் பிரார்த்திக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, இறைச்சிந்தனையில் இருக்க வேண்டும். மாலையில் வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வில்வத்தால் பூஜை செய்ய வேண்டும். இரவு நான்கு காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். சிவராத்திரி இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையே லிங்கோற்பவ நேரம் எனப்படுகிறது. ஆகவே நான்கு காலங்களிலும் பூஜை செய்ய முடியாதவர்கள், லிங்கோற்பவ காலத்திலாவது பூஜை செய்ய வேண்டும். இயலாதவர்கள், கோவிலில் நடைபெறும் நான்கு கால வழிபாடுகளிலும் பங்கு கொள்ளலாம்.
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ருத்ராபிஷேகம், என்பது சிவனாருக்கு செய்யப்படும் அபிஷேகம். மந்திரபூர்வமாகச் செய்யப்படும் இது மிகச் சிறப்பு வாய்ந்தது. ருத்ராபிஷேகத்தைப் பற்றிய விவரங்கள் அறிய இங்கு சொடுக்கவும். இதை இல்லத்தில் செய்ய இயலாவிட்டால், ஆலயங்களில் செய்யலாம். சிவராத்திரி அன்று ருத்ராபிஷேகம் செய்வது மிகச் சிறப்பு.
மறு நாள் காலை பாரணை செய்து விரத நிறைவு செய்ய வேண்டும். இல்லத்தில் பூஜை செய்திருந்தால், புனர் பூஜை செய்து, சிவனாரை உத்யாபனம் செய்ய வேண்டும்.
சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்:
யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மற்ற விரதங்கள் அனைத்தும் கடைபிடித்தவருக்கு மட்டுமே நன்மை தரும். ஆனால் சிவராத்திரி விரதம், கடைபிடித்தவருக்கு மட்டுமின்றி அவரது தலைமுறைக்கே ஈடு இணையற்ற புண்ணியத்தைத் தரும்.
ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால் அவர் சிவசாயுஜ்ய நிலையை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.
அர்ஜூனன் சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்தே பாசுபதாஸ்திரம் பெற்றான். கண்ணப்ப நாயனார் தம் கண்களை சிவனாரின் திருமேனியில் அப்பி, தம் அசையாத பக்தியால் முக்தி பெற்ற தினமும் சிவராத்திரியே. சிவராத்திரி விரத மகிமையாலேயே, அம்பிகை இறைவனின் உடலில் சரிபாதியைப் பெற்றார். சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக, காலனை உதைத்து, காலகண்டேசுவரர் என்ற திருநாமம் பெற்றதும் சிவராத்திரி தினத்தன்றே.
அவனருள் பெறாது முத்தி அடைந்தனர் இல்லை அல்லால்
அவனருள் இன்றி வாழும் அமரரும் யாரு மில்லை
அவனருள் எய்தின் எய்தா அரும்பொருள் இல்லை ஆணை
அவனல திறைவன் இல்லை அவனைநீ யடைதி என்றான். (கந்த புராணம்)
சிவராத்திரி தினத்தன்று, எம்பெருமானைப் பூஜித்து, சிவனருளால்,
வெற்றி பெறுவோம்!!!!
No comments:
Post a Comment