Friday, February 26, 2016

இந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்?



இந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்?
ஏன் இத்தனை தெய்வங்கள்?

இந்த கேள்வியை ஆராயும்முன் முதலில் நமக்கு ஏன் இத்தனை குணங்கள் என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு மூளை ஒரு உடல் மட்டுமே கொண்ட நமக்கு எத்தனை குணங்கள். நாமே ஒருவருக்கு நல்லவராகவும் ஒருவருக்கு கெட்டவராகவும் தெரிகிறோம். ஏன்? நமக்குள்ளே எத்தனை உணர்வுகள் ஏன்? பாசம், கோபம், அமைதி, காதல் மற்றும் காமம் என்று பல ரூபங்களை எடுக்கிறோமே ஏன்? வீட்டில் உள்ளவர்களிடம் பாசத்துடன் பழகும் நாம் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் பழகும் போது பயத்துடன் பழகுகிறோம் ஏன்? அலுவலக மேலதிகாரியிடம் ஏன் பாசத்தை பொழிவதில்லை? இப்படி நாம் ஒருவரே வெவ்வேறான நபராக நம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் போது இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த சக்தியான கடவுளுக்கு பல உருவங்கள் ஏன் இருக்கக் கூடாது? இது ஒரு வாதமே என்று எடுத்துக்கொண்டாலும் இந்த பல உருவ வழிபாட்டில் உள்ள மனோவியல் ரீதியான உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்து தர்மத்தில் பல தெய்வங்கள் இருப்பது வேறு எந்த மதங்களிலும் இல்லாத ஒரு சிறப்பாகவே கருத வேண்டும். ஏனெனில் கடவுளை வணங்குவதற்கு நமக்கு விருப்பமான எந்த ரூபத்தையும் நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ள இந்த ஒரு தர்மத்தில் மட்டுமே சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சுதந்திரம் வேறெந்த மதத்திலும் கொடுக்கப்படவில்லை என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும்.

இப்போது மேற்குறிப்பிட்ட கேள்விக்கான புரிதலுக்கு வருவோம். பொதுவக ஒவ்வொரு மனிதரும் அவரவர் குணங்களுக்கு ஏற்பவே நண்பர்களையே தேர்ந்தெடுப்பார்கள். அப்படியிருக்க தாங்கள் வணங்கும் கடவுளும் தங்களுக்கு பிடித்த மாதிரியான குணாதிசய‌ங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவது மிகவும் இயல்பானதே! அது போலவே பல கடவுளர்களின் குணங்களும் அதற்கேற்ற கதைகளும் மக்கள் வாழிடத்திற்கு ஏற்றார்போல அவ்வப்பொழுது உருவாக்கப்படுவதும் உண்டு. தம்மை வழிநடத்தும் கடவுள் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒவ்வொருவரின் கற்பனையே அவன் விரும்பும் கடவுளாகவும் மாறுகிறது. அமைதியான, அன்பான‌ அதே நேரம் வீரமுள்ள கடவுளை வழிபட வேண்டுவோர் இராமரை வணங்குவதும் , எந்த துன்பத்திலுருந்தும் தம்மைக்காக்கும் சூத்திரதாரி வேண்டுவோர் கிருஷ்னரையும் வணங்குவர். பயந்த சுபாவம் கொண்டவர்கள் பயங்கர ஆயுதங்கள் கொண்ட‌ கடவுளை காக்கும் தெய்வங்களாக வணங்குவதைக் காணலாம்.

அதிக கோபம் சமூக அக்கிரமங்களை கொடூரமாக அழிப்பதே சரி என்று மனோவியல் ரீதியாக எண்ணுபவர்கள் பத்திரகாளி போன்ற ரத்த மயமான தெய்வங்களைத் தேர்ந்தெடுக்கலாம். கடவுளை தாயாக பாவிக்க நினைப்பவர்கள் மீனாட்சி , காமட்சி , மாரியம்மன் என்ற பெண் தெய்வங்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மேலும் சிலர் இயற்கையின் மீதும் வினோத படைப்புக்கள் மீதும் ஈர்க்கப்பட்டால் அவர்கள் மனித உருவும் விலங்கு உருவும் கொண்ட வித்தியாசமான தெய்வங்களான பிள்ளையார், அனுமார் போன்ற கடவுளை தேர்ந்தெடுப்பர்.

மொத்தத்தில் பக்தி செலுத்தவும் தியானிக்கவும் ஒரு உருவம் தேவை. ஒரே உருவத்தின் மீது எல்லோருக்கும் ஈர்ப்பு ஏற்படுவது நடைமுறைக்கு ஒத்து வராது. எனவே தியானிப்பதற்கும் பக்தியை மனதில் இருத்தி , மனதை ஒரு நிலைப்படுத்தி நிரந்தரமான அமைதியை அடைந்து நல்வழிப்பட மனிதர்களுக்கு பல்வெறு உருவங்கள் கொண்ட தெய்வ வழிபாடு சிறப்பாக உதவுகிறது.

இந்த பல உருவ வழிபாட்டை இன்னொரு நிலையிலும் பார்க்க வேண்டும். ஒரு மார்கத்திற்கு ஒரே ஒரு உருவம் தான் கடவுள் என்று மொத்த பேரும் அந்த உருவத்தை வணங்கி பிரார்த்தனை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பிரார்த்தனை நிரைவேறாமல் போனால், அந்த உருவத்தின் மீதான நம்பிக்கை குறையும் அதே நேரத்தில் அந்த உருவத்தை மையப்படுத்தும் மார்க்கத்தின் மீதும் நம்பிக்கை போய்விடும். ஆனால் இந்து தர்மத்தில் ஒரு உருவ தெய்வத்தின் மீது நம்பிக்கை போனால் கூட அவன் இன்னொரு உருவ வழிபாட்டை தேர்ந்தெடுத்துக் கொள்வான். அவனது நம்பிக்கை உருவத்தின் மீது தான் இல்லாமல் போகுமே ஒழிய அவன் பின்பற்றும் தர்மத்தின் மீது நம்பிக்கை போகாது. இதுவே இந்து தர்மத்தின் சூட்சுமம். அதாவது ஒரு மனிதன் எந்த உருவத்தின் வாயிலாக‌ வழிபட்டாலும் தத்துவமார்க்கமான தர்மத்தை கடைபிடிக்கும் வாழ்க்கைக்குள் வந்து விட வேண்டும் என்பதேயன்றி உருவ வழிபாடு மட்டும் முக்கிய நோக்கமல்ல.

ஆதலால் மீண்டும் சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்

No comments:

Post a Comment