தஞ்சை: திருவையாறில் வடகயிலாயம் என்று அழைக்கப்படும் பஞ்சநதீஸ்வரர் கோயிலில் புராண கால சோழர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.தஞ்சை மாவட்டம் திருவையாறில் வடகயிலாயம் என்று அழைக்கப்படும் உலோகமாதேவீஸ்வரத்தில் உள்ள பஞ்சநதீஸ்வரர் கோயில் முதலாம் ராஜராஜனின் மனைவியின் பெயரால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் உள்ள கருவறை மற்றும் முகமண்டபத்தின் வெளியில் இரு புறங்களிலும் உள்ள சுவர்களில் காணும் தோரணங்களில் சிற்றுருவ புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றை வரலாற்று ஆர்வலர்கள் பொந்தியாகுளம் பள்ளி தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராஜன், மன்னை ராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் கண்ணதாசன், புரவலர் ஜெயராமன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இக்கோயிலில் கோஷ்டத்தின்மேல் உள்ள தோரணத்தில் பிச்சாடனர், காலசம்ஹாரர், லிங்கத்தை வழிபடும் அரசன் என பல சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் திரை செலுத்துவதற்காக சிற்றரசர் ஒருவர் திரைப்பொருளுடன் யானை மீது அமர்ந்து யானைகள் மற்றும் குதிரைகளுடன் காட்சி தருகின்றார். இச்சிற்பத்தை அடுத்த தோரண சிற்பத்தில் காளைமாடு தலையை மேலே உயர்த்திய நிலையில் உள்ளது. அதன்மீது கிரீட மகுடத்துடன் ஒருவர் அக்காளையின் திமில் மீது ஒரு கையை ஊன்றியும், ஒரு காலை மடக்கி அமர்ந்த நிலையிலும் வடிக்கப்பட்டுள்ளது.
இது சூரிய குல தோன்றலான இச்சவாகுவின் மகனும், சோழர் குலத்தின் முன்னோனும் ஆகிய ககுத்தனின் உருவ சிற்பமாகும். இவரைப்பற்றி விஷ்ணு புராணத்திலும், திருவாலங்காட்டு செப்பேடுகளிலும் குறிக்கப்பட்டுள்ளதுடன் கலிக்கங்கத்துப் பரணி, கம்பராமாயணம், குலோத்துங்க சோழனுலா, ராஜராஜனுலா போன்றவற்றில் அசுரர்களுடன் சண்டை செய்வதற்கு இந்திரனை எருதாக்கி (காளை) அதன் திமில் மீது அமர்ந்து சண்டை செய்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இம்மன்னனை பற்றி சாரலா செப்பேட்டிலும், கன்னியாகுமரி கல்வெட்டிலும் குறிப்புகள் உள்ளன. தம் கணவனின் சூரிய குளத்தின் பெருமைகளை நிலை நாட்டும் வகையில் இச்சிற்பத்தை உலோகமாதேவியார் இக்கோயிலில் அமைத்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
http://aanmeegamarivom.blogspot.in/
No comments:
Post a Comment