பூசலார்_நாயனார்.
சிவனாருக்கு_மனதில்_கோயிலமைத்தவர்🙏
தொண்டை நாட்டில் (பல்லவர்களின் நாட்டில்)
திருநின்றவூரிலே அந்தணர் குலத்தில் ஐப்பசி மாதம், அனுஷ நட்சத்திரத்தில் தோன்றியவர் பூசலார் . இவர் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்தலே பிறவிப்பயன் என்று பொருள்தேடி சிவனடியவர்களுக்கு அளித்து வந்தார். சிவபெருமானுக்குத் திருக்கோயில் ஒன்று எழுப்ப மிகவும் விரும்பினார் பூசலார் நாயனார்.. அதற்குத் தன்னிடம் பொருள் இல்லாததால், தன் மனத்திலேயே சிவபெருமானுத் திருக்கோயில் அமைக்க எண்ணினார்! பூசலார் நாயனார்.
எனவே மனத்திலேயே சிறிதுசிறிதாகப் பெரும்பொருள் சேர்த்தார் நாயனார். திருப்பணிக்கு வேண்டிய கல் மரம் முதலிய சாதனங்களையும், பணிசெய்தற்குரிய தச்சர் முதலிய பணியாளர்களையும் மனத்தில் தேடிக்கொண்டார் பூசலார்.
நல்ல நாள் பார்த்துத் திருக்கோயிற் பணியைத் தம் மனத்துள்ளே தொடங்கி இரவும் துயிலாமல் அடிப்படை முதல் உபானம் முதலிய வரிசைகளை அமைத்து உரிய அளவுப்படி விமானமும் சிகரமும் அமைத்து அதன்மேல் தூபியும் அமைத்தார். ஓர் ஆலயம் அமைய என்னென்ன திருப்பணிகள் நடைபெறுமோ, அத்தனைச் செயல்களும் நடைபெறுவதாக, மனத்தினுள்ளேயே வரிசைக்கிரமமாக நினைத்துக் கொண்டார் பூசலார் நாயனார். சுதைவேலை முடித்து அக்கோயிலினுள்ளே கிணறு திருக்குளம், மதில் முதலான எல்லாம் முறைப்படி மனத்திற்குள்ளேயே அமைத்தார் பூசலார் நாயனார். இவ்வாறு தம்மனத்தில் உருவாகிய திருக்கோயிலுள் சிவபெருமானை எழுந்தருளச் செய்வதற்கேற்ற நல்லநாளும் வேளையும் நிச்சயித்தார்! பூசலார் நாயனார்.
பூசலாரின் திருப்பணி இவ்வாறு மனதினுள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், காஞ்சி நகரத்து மன்னன் காடவர்கோன், இறைவனுக்குத் திருக்கற்றளி(கற்கோயில்) தன் பெரிய பொருள் முழுவதையும் செலவழித்து மிகப் பெரிய ஆலயம் ஒன்று சிவபெருமானுக்கு உருவாக்கியிருந்தார். அத்திருக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளுவிப்பதற்குப் பூசலார் நாயனார், தன் உள்ளத்தில் குறித்த அந்த நாளையே மன்னனும் குறித்தார். மன்னனுக்கு அதுவரைப் பூசலாரைப் பற்றி தெரியாது.
பூசலாரது அன்பின் திறத்தை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங் கொண்ட கருணைக்கடலான சிவபெருமானும், அந்நாளின் முதல் நாள் நள்ளிரவில் காடவர் கோமான் முன் கனவில் எழுந்தருளி, திருநின்றவூரில் வாழும் பூசலார் என்ற அன்பனின் அன்பில் யான் கட்டுண்டேன். அவன் நீண்டகால மாக நினைந்து, நினைத்து. உருவாக்கிய நன்மை மிக்க ஆலயத்துள் நாளை நான் புகப் போகிறேன்! நீ இங்கு என்னப் பிரதிஷ்டை செய்ய நினைத்த தினத்தை நாளை வைத்து கொள்ளாது, மற்றொரு நாளில் செய்வாயாக! என்று பணித்தருளி மறைந்தருளினார்! எம்பெருமான்.
பல்லவர்கோனும் திகைத்து, கண்விழித்தெழுந்தான். இறைவன் மனமகிழும் வண்ணம் பெரியதிருக்கோயிலை அமைத்த பெருந்தகையாரைச் சென்று காணவிரும்பித் திருநின்றவூரை அடைந்தான்! பல்லவ மன்னன். அங்குள்ளவர்களை நோக்கி, ‘பூசலார் அமைத்த கோயில் எங்கே உள்ளது?’ என்று கேட்டார்! மன்னர்.. அதுகேட்ட திருநின்றவூர் மக்கள், ‘பூசலார் இவ்வூரிற் கோயில் எதுவும் கட்டவில்லையே? என்றனர். மன்னன் அவ்வூர் மறையவர்களை அழைத்து ‘பூசலார் யார்’ எனக்கேட்டறிந்து, வேதியராகிய அவர் இருக்குமிடத்திற்குத் தானே சென்று அவரை வணங்கி, ஐயா! தாங்கள் அமைத்த திருக்கோயில் யாது? அக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்று இறைவன் எனக்குத் தெரிவித்தருளினார்; அதனாலேயே தங்களைக் கண்டுப் பணிதற்கு வந்தேன்’ என்றார்! பல்லவ மன்னன்.
அரசன் கூறியதைக் கேட்டு மருண்ட பூசலாரோ, சிவபெருமான், என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி அருள்செய்தார் என்றால், தானமைத்தக் பெருமை எத்தகையது? என்று தமக்குள்ளேயே சிந்தித்துத் தான் மனத்தால் முயன்று செய்த திருக்கோயிலின் அமைப்பினை மன்னனுக்கு விளங்க எடுத்துரைத்தார்! பூசலார் நாயனார். அரசனும் அதிசயித்துப் பூசலாரின் முன் சிரம் தாழ்ந்து வணங்கித் தனது நகருக்குச் சென்றான்.
பூசலார் நாயனார் தாம் கட்டிய மனக்கோயிலிலே குறித்த நற்பொழுதில் சிவபெருமானைப் பிரதிஷ்டைச் செய்து, பூஜைகளை எல்லாம் பெருஞ்சிறப்புடன் மனத்துள்ளேயே செய்து வந்தார். பூசலாரின் பக்தியின் சிறப்பை அறிந்து அனைவரும் அவரை வாழ்த்தவும், ஒரு நன்னாளில் சிவபெருமான் திருவடியை அடைந்தார்! பூசலார் நாயனார். நாடாளும் மன்னன் கட்டிய கோயிலைவிட எளியவரான பூசலார், பக்தியினால் தன் மனத்திற்குள்ளேயே கட்டிய ஆலயத்தில் குடிகொள்ள இறைவனே ஓடோடி வந்தான்! என்றால் தூய பக்தியின் சிறப்பு எதுவென நாம் அனைவரும் உணரலாம். 🙏
#ஓம்நமசிவாய 🙏
No comments:
Post a Comment