#மகாதேவ_அஷ்டமி(14.11.2014)
இந்த விரதத்திற்கு வைக்கம் அஷ்டமி என்றும், மகாதேவ அஷ்டமி என்றும் பெயர் உண்டு. கார்த்திகை மாதம் தேய்பிறையில் வருகின்ற அஷ்டமியே காலாஷ்டமி எனப்படும். இது காலபைரவரின் அவதார தினமாகும். பிரம்மாவுக்கும் முதலில் 5 தலைகளே இருந்தன. சிவனது முடியைக் காணா விட்டாலும், கண்டேன் என்று தவறாக கூறியதால் அவரது ஐந்து முகத்தில் ஒன்றை எடுப்பதற்காக தோன்றியவரே கால பைரவர். அவரே காசிக்கு வருவோரின் பாவத்தை கண்டிக்கும் பொறுப்பை உடையவர்.
பிரம்மனின் தலையை எடுத்த தோஷம் நீங்க பைரவர் தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது காசிக்கு வந்ததும் அவரது பாவம் நீங்கிற்று. உண்மையை மறைத்த பிரம்மாவை தண்டித்தது போல எல்லா மனிதரின் பாவங்களையும் நீக்குவதற்காக பைரவர் காசியிலேயே தங்கிவிடுகிறார். நமது பாவங்கள் போய்விடுவதால் மீண்டும் எமன் நம்மை அண்டாமல் சிவனடியில் நம்மை பைரவர் சேர்த்து விடுகிறார். சிவபெருமானுடைய 5 முகங்களில் இருந்து தோன்றிய 25 மூர்த்திகளில் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் பைரவர்.
எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது.
படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார். அதன்பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார்.
இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக நம்முள்ளேயே வேரூன்றி விரிந்து பரந்திருக்கும் அகங்காரம் எனும் விஷ விருட்சத்தைக் கிள்ளி எறியும்படி - தலை வணங்கி வேண்டிக் கொள்வோம்.
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
No comments:
Post a Comment