Wednesday, October 9, 2013

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

1. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.

2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.

3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.

4. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.

5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.

6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.

7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.

8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.

10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.

11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.

12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.

13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.

14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.

15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.

16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.

17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.

18. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.

19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.

20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.

21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்

22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.

23. கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.

24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.

25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.

26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது

ஏழாம் படை வீடு என்று சிலாகிக்கப்படும் கதிர்காமம்



ஏழாம் படை வீடு என்று சிலாகிக்கப்படும் கதிர்காமம்

மற்ற ஆலயங்களில் இருப்பது போல், கதிர்காமத்தில் முருகனுக்குக் கருவறைச் சிலை கிடையாது! வேல் வழிபாடும் கிடையாது! பின்னால் ஒரு எந்திரமும், முன்னால் ஒரு துணித் திரையும் தான் கருவறை! அந்தத் திரையில் உள்ள வள்ளி-முருகன்-தேவயானையே மூலவர்!

கருவறையில் உள்ள அறுகோண எந்திரம், கதிர்காமத் தேவரின் அரு-உருவமாகக் கருதப்படுகிறது! அதைப் பெளத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் மூவருமே வழிபடுகிறார்கள்!



Pondicherry

Tuesday, October 8, 2013

திருப்பதிக்கு சென்றது ஆண்டாள் சூடிய மாலை!


திருப்பதிக்கு சென்றது ஆண்டாள் சூடிய மாலை! ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் கருடசேவையன்று, பெருமாளுக்கு சார்த்துவதற்கு, ஆண்டாள் சூடி களைந்த மாலை, நேற்று, ஸ்ரீவில்லித்தூரிலிருந்து சென்றது. திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயிக்கு, ஆண்டாள் சூடிய மாலை, தினமும் சார்த்தப்படுகிறது. இதேபோல், ஆண்டுதோறும், மதுரை சித்திரை திருவிழாவில், வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கும், ஸ்ரீரங்கத்தில், சித்திரை ரேவதி தேரோட்டத்தின் போது, ரங்கநாதருக்கும், ஆண்டாள் சூடிய மாலை சார்த்தப்படுகிறது. மேலும், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாளன்று, காலையில் நடக்கும் கருட சேவையிலும், ஆண்டாள் சூடி களைந்த மாலை பெருமாளுக்கு சார்த்தப்படும். இந்த ஆண்டு பிரம்மோற்சவத்திற்கு, மாலை அனுப்பும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. காலையில் ஆண்டாளுக்கு பெரிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியன சார்த்தப்பட்டு, சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தன. பின், மாடவீதி, கந்தாடை வீதி வழியாக, ஆண்டாள் சூடிய மாலையையும், கிளியையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அவற்றை, கோயில் ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் ஊழியர்கள், திருப்பதிக்கு கொண்டு சென்றனர்.

நவராத்திரி ஐந்தாம் நாள் 09.10.2013


லஷ்மியே வைஷ்ணவியாக அலங்கரிக்க வேண்டும். வழிபட்டால் செல்வ வளம் பெருகும். அம்மனின் அவாதாரம்/அவங்காரம்- வைஷ்ணவி பூ-விருட்சிபூ பழம்- மாதுளை இலை - விபூதிப்பச்சை கோலம் - பறவைக்கோலம் ராகம்- பந்துவராளி நைய்வோத்தியம்- பொங்கல், வடகம், மொச்சைப்பயிறு மகாலட்சுமி ஸ்தோத்திரம்

Monday, October 7, 2013

durga songs


நவராத்திரி நான்காம் நாள் 8.10.2013 வழிபாடு!




நவராத்திரி நான்காம் நாள் 8.10.2013 வழிபாடு!
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும். மதுரை மீனாட்சியம்மன் நாரைக்கு முக்தி கொடுத்த அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். சத்தியன் என்னும் தவமுனிவர் ஒருவர் இருந்தார். அவர் தினமும் அச்சோதீர்த்தம் என்னும் குளத்தில் நீராடி, சிவனை தியானத்து வந்தார். அங்கொரு நாரை ஒன்று வசித்து வந்தது. சத்திய முனிவரும், மற்ற தவசீலர்களும் மதுரையின் பெருமையை பேசிக் கொண்டிருந்தனர். அதைக்கேட்ட நாரைக்கும் சிவபக்தி உண்டானது. மதுரை கோயிலுக்கு வந்து பொற்றாமரைக்குளத்தில் நீராடி சிவனை வழிபட்டது. பதினாறாம் நாள் நாரைக்கு காட்சியளித்த சிவன், நாரைக்கு முக்தியளித்தார். இக்கோலத்தை தரிசித்தால் சிவனருளால் பிறவாத நிலை உண்டாகும்.
பாட வேண்டிய பாடல்:
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்
நின்குறையே அன்றி யார் குறை காண் இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎம் சடைமேல் வைத்த தாமரையே
ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்தோத்திரம்
தனது நான்கு கைகளிலும் அபயவரத முத்திரைகளுடன் தாமரை மலர்களை ஏந்தியிருக்கிறாள். இரண்டு யானைகளும் வழிபட்டு நிற்கின்றன. அறம், பொருள், இன்பம், வீடு, இந்த நான்கையும் தனது கைகளாக் கொண்டு ஸ்ரீ மஹாலட்சுமி தேவி காட்சி தருகின்றாள்.
தியான சுலோகம்:-
சதுர்புஜாம் மஹாலக்ஷ்மீம்
கஜயுக்ம சுபூஜிதாம்
பத்ம பத்ராப நயனாம்
வராபய கரோஜ்வலாம்
ஊர்த்வ த்வயகரே சாப்ஜம்
தததீம் சுக்ல வஸ்த்ர காம்
பத்வாசநே சுகாஸீநாம்
பஜே அஹம் சர்வ மங்களாம்.

பலன்கள்:-
மேற்கூறிய சுலோகத்தை தினமும் 108 முறை கூறி ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் எல்லாவித ஐஸ்வர்யங்களையும் பெறலாம், அத்துடன், இவளை உண்மையுடன் வழிபட்டவர்களின் வாழ்க்கை என்றும் ஆனந்தமாயிருக்கும் என்பது உறுதி. பொதுவாக, அஷ்டலட்சுமி வழிபாடு செய்ய விரும்புகிறவர்கள் ஏதோ ஒரு நாள் பண்டிகையாக நினைக்காமல், தனது வாழ்வின் அன்றாடக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் மஹாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைக்கும். வீட்டில் வழிபடுவதோடு நிறுத்திவிடாமல், நேரம் கிடைக்கும் போது அல்லது வசதிப்படும் போது ஸ்ரீ மஹாலட்சுமி எழுந்தருளியிருக்கிற புண்ய தலங்களுக்கும் அடிக்கடி புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும்

நவராத்திரி பாடல் (மூன்று தேவியருக்கும் தனித்தனியாக)

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி
கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்
தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.

நவராத்திரி பாடல்

அம்பாள்
காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
காசி விசாலாட்சி கருணாம்பிகையே!
தருணம் இதுவே தயை புரிவாயம்மா!
பொன் பொருள் எல்லாம்
வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!
ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்
என் அன்னை நீயே அம்மா!
மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!
மங்கலத் தாயே நீ வருவாயே!
என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!
எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!
பயிர்களில் உள்ள பசுமையில்
கண்டேன் பரமேஸ்வரி உனையே!
சரண் உனை அடைந்தேன்
சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!
அரண் எனக் காப்பாய்
அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!

லட்சுமி

செல்வத் திருமகளே! மோகனவல்லியே!
எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!
எண் கரங்களில் சங்கு சக்கரம்
வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!
வரத முத்திரை காட்டியே
பொருள் வழங்கும் அன்னையே!
சிரத்தினில் மணி மகுடம்
தாங்கிடும் சிந்தாமணியே!
பல வரம் வழங்கிடும் ரமாமணியே!
வரதராஜ சிகாமணியே!
தாயே! தனலட்சுமியே!
சகல வளமும் தந்திடுவாய்

சரஸ்வதி

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்.
 

 

மூன்று தேவியருக்கான நவராத்திரி நாமாவளி!2

நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.


துர்க்கா தேவி

ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

லெட்சுமி ஸ்ரீதேவி

ஓம் மகாலக்ஷ?ம்யை நம
ஓம் வரலெக்ஷ?ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம

சரஸ்வதி தேவி

ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம
 



நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.
மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.
அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

மூன்று தேவியருக்கான நவராத்திரி ஸ்லோகம்

மூன்று தேவியருக்கான நவராத்திரி ஸ்லோகம்
கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!
பொருள்:இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக
நவராத்திரி 3 நாள வாராகி அம்மன்

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாக விளங்குபவள் ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரி. உலகத்திற்கே தாயாக விளங்குபவள். அந்த தாயின் அங்குசத்திலிருந்து தோன்றியவள் வாராகி. ஸ்ரீலலிதாவின் மெய்க் காப்பாளினியாகவும் நால்வகை படைத் தளபதியாகவும் ஸ்ரீபுரத்தை ரட்சிப்பவளாகவும் விளங்குகிறாள்.
பன்றியின் முகம், பெண் உடல், 8 கரங்கள் கொண்டவள். சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை- அவளுடைய முக்கிய ஆயுதங்கள். சிம்மம், வாகனம். போருக்கு எல்லாவித ஆயுதங்களுடனும் வாகனங்களுடனும் சூழப் புறப்படுகிறாள்.
பில்லி, சூனியம், ஏவல், பேய், பிசாசு போன்ற தீய சக்திகளில் இருந்தும், பகைவர்களிடமிருந்தும் நம்மைக் காப்பவள் வாராஹி ஆவாள். வாராஹியை வழிபட்டால் துஷ்ட சக்திகள் விலகும். திருமணத் தடை நீங்கும். செவ்வாய் தோஷம் மற்றும் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும். சிவப்பு மலர்மாலையும் மஞ்சள் புடவையும் அணிவித்தால் நினைத்த காரியம் கைகூடும்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு அருகே அமைந்துள்ளது வாராகி அம்மன் ஆலயம். 51 சக்தி பீடங்களில், எட்டாவது பீடமாக விளங்குகிறது. அம்மனின் உடற்கூறுகளில் கீழ் பற்கள் விழுந்த இடமாக இவ்வாலயம் கருதப்படுகிறது.
இங்கு அன்னை வாராகி என்ற பெயரிலும், இறைவன் மஹாருத்ரர் என்ற பெயரிலும் எழுந்தருள்கின்றனர். நேபாளத்தில் இந்த அன்னையை, பராகி என்று அழைக்கின்றனர். ஆலயத்தின் உள்பிராகாரத்தில் உள்ள பாதாள குகையில் எழுந்தருளியுள்ள அம்மன், தனது எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், தண்டை, கலப்பைஆகியவற்றைத் தாங்கி அபயம், வரதம் காட்டி அருள்புரிகிறார்.
இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, நள்ளிரவில்தான் அன்னையைக் காண முடியும். அதாவது, தினமும் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. 12 மணி முதல் சூரிய உதயம் வரை கோயில் நடை திறந்திருக்கும். விடியற்காலை 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள் அதாவது சூரிய உதயத்துக்கு முன்பு கோயிலின் நடை சாத்தி விடுவது வழக்கம்.
தற்போது வாராகி தேவி அருள்புரியும் இந்தக் கருவறையில் முன்னோரு காலத்தில் மந்திரகாளியம்மன் வீற்றிருந்தாள். அந்த ஊரில் இருந்த ஒரு மந்திரவாதி, அவனது தபோ வலிமையைக் கொண்டு காளியம்மனை மந்திரத்தால் கட்டுப்படுத்தி சக்தியை ஒடுக்கி வைத்திருந்தான். தேவர்களையும், மக்களையும் வதைத்து, பல இன்னல்களை செய்து வந்தான்.
ஒருநாள் அவ்வூரில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அன்னை, விஷ்ணுவின் அவதாரமான வராக அவதாரம் எடுத்து, கடல் வழியே இந்த ஆலயத்தை வந்தடைந்தாள். மந்திரவாதியை வதம் செய்து, காளியம்மனை மந்திரக் கட்டுக்குள் இருந்து காப்பாற்றினாள். மந்திர காளியம்மன் நன்றி தெரிவித்ததோடு இங்கேயே தங்கும்படி கேட்டுக்கொண்டதால், மக்களைக் காத்தருள வாராகி அம்மனாக எழுந்தருளினாள்.
மற்றொரு புராணத்தில்... அந்தகாசுரன் மற்றும் ரத்தபீக்ஷôசுரன் என்னும் அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். அசுரர்களின் கொடுமையைத் தாங்க முடியாமல் தேவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட ஈசன் அசுரர்களை அழிப்பதற்காக, விஷ்ணுவின் அம்சமான வராக அவதாரத்தில் அன்னையை உருவாக்கினார். அன்னையும் அசுரர்களை வதம் செய்து தேவர்களைக் காத்தாராம்.
இத்தகைய பெருமை வாய்ந்த வாராகி அம்மனை பில்லி, சூன்யம் போன்ற மாந்திரீக சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் வணங்கினால் அனைத்து தொல்லைகளும் நீங்கப்பெற்று சுகம் பெறுவர்.
அம்பிகைக்கு உரிய நான்கு நவராத்திரிகளுள், வாராகி நவராத்திரியும் ஓன்று. ஆடி அமாவாசைக்கு முன் வரும் ஓன்பது நாட்களில் இது கொண்டாடப்படும். வாராகி பன்றி முகம் கொண்டவள் இவளை வழிபட உகந்த நாட்கள் அஷ்டமி, பௌர்ணமி நள்ளிரவு, கார்த்திகை வளர்மிறை பஞ்சமி போன்ற நாட்கள் வாராகி தேவியானவள் லலிதாம்பிகையின் சேனைத் தலைவி.
நம்முடைய அனைத்து துன்பங்களையும் நம்மிடமிருந்து அகற்றி வாராகி அம்மன் நம்மைக் காப்பாள். வாராகி தேவி பூண்டு, வெங்காயம் கண்டிப்பாகச் சேர்த்து தயாரித்து படைத்து வணங்க வேண்டும். தன்னை பக்தியுடன் வணங்குவோரின் பயத்தைப் போக்கி நன்கு வாழ வைப்பாள். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி வாராகி அம்சமானவள்.
வாராகி நமக்குச் செய்யும் நன்மைகள் அனைத்தையும் வணங்குபவர்களுக்கு இவளும் செய்வாள். வாராகி நவராத்திரி 9 நாட்களும் அவள் முன் நெய் விளக்கேற்றி, பூச்சூட்டி,பொட்டிட்டு, தூபம் காட்டி நைவேத்யம் செய்து அம்மனின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.
பஞ்சமி, தண்டநாதா சங்கேதா, சமயேஸ்வரி, சமயங்கேதா, போத்திரிணி, வாராகி, ஷிவா, வார்த்தாளி, வாராகமுகி, மகாசோபனா, ஆஞ்ஞா சக்ரேஸ்வரி, அரிக்னி என்ற இத் திருநாமங்களை ஜபித்தபடி அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படிச் செய்து வாராகியை வணங்கினால் நினைப்பது நடக்கும்

Sunday, October 6, 2013

நவராத்திரி என்றால் என்ன?

நவராத்திரி என்றால் என்ன?


 மகிஷன் என்ற அசுரனைக் கொன்ற பராசக்தியை, சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்ற வடிவங்களில் வழிபட வேண்டும். விதவிதமான அலங்காரங்களைச் செய்ய வேண்டும். கொலு வைக்க வேண்டும். சுண்டல் சாப்பிட வேண்டும். இத்துடன் முடிந்து போனது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நவராத்திரி தத்துவம் மிகவும் உயர்வானது.

நவராத்திரி, சிவராத்திரி, ஏகாதசி என இறைவனை இரவு நேரத்தில் வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. காரணம், இரவில் இறை தியானம் செய்வது மிகவும் மகிமையுள்ளது.

மனித மனம் ஆணவம் என்ற இருளால் சூழப் பட்டிருக்கிறது. இந்த இருளை அகற்றி, அவன் தன்னை யாரென உணர வேண்டும். நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே போகப் போகிறோம், இப்போது நம்மைச் சுற்றியுள்ள அம்மா, அப்பா, மனைவி, மக்கள், கணவன் இவர்களெல்லாம் யார்? இவர்கள் ஒரு காலத்தில் நம்மோடு இருந்தனர். இவர்களில் சிலர் இப்போது நம்முடன் இல்லை. அவர்கள் எங்கே போய் விட்டனர். நாம் பணம் சேர்க்கிறோமே... அது யாருக்காக? அது, நம்முடன் கடைசி வரை வரப் போகிறதா இப்படி யெல்லாம் சிந்திக்க ஆரம்பித்து விட்டால், வாழ்க்கை என்றால் என்ன என்பதற்கு, விடை கிடைத்து விடும். ஆனால், இதையெல்லாம் சிந்திக்க விடாமல் ஆணவ இருள், மனிதனைத் தடுக்கிறது.

எல்லாமே தன்னால் தான் நடக்கிறது என்று மனிதன் எண்ணுகிறான். தனக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்ற எண்ணத்தையே அவன் விட்டுவிடுகிறான். இந்த அகம்பாவமாகிய இருளில் இருந்து, நம்மை மீட்டுக் கொள்ளவே நவராத்திரி வருகிறது.

இதன் முதல் மூன்று இரவுகளில், துர்க்கையை வணங்கி, பொறாமை, ஆசை போன்ற தீய குணங்களில் இருந்து விடுபட வேண்டும். அடுத்த மூன்று நாட்கள், லட்சுமியை பிரார்த்திக்கும் போது, "எனக்கு பணம் கொடு' என்று உரிமையுடன் கேட்பது போல, "அன்பு, இரக்கம், தானம் ஆகிய குணங்களையும் கொடு' என்றும் கேட்டுப் பெற வேண்டும். சம்பாதிக்கும் பணம் தனக்கு மட்டுமின்றி, இயலாதவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.
இறைவன் என்பதே நிஜம் என்ற உணர்வைப் பெற வேண்டு மானால், சாதாரண கல்வியறிவு போதாது. மெய்யறிவு வேண்டும். அதற்காகத்தான் கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியை பூஜிக்க வேண்டும்.

இப்படி ஆத்மா சுத்தமாகி விட்டால், மனிதன் தன் ஆன்மிக நிலையில் வெற்றி பெறுகிறான். இந்த வெற்றியையே, பத்தாம் நாளில் விஜயதசமியாகக் கொண்டாட வேண்டும். வடமாநிலங்களில், ராவணன் போன்றவர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது வழக்கம். ராவணன் அசுர சக்தி. பொறாமை, ஆசை, கஞ்சத்தனம் போன்றவை மனிதனை பீடித்திருக்கும் அசுர குணங்கள். இந்த குணங்களை தீயிட்டுக் கொளுத்துவதன் அடையாளமே உருவ பொம்மை எதிர்ப்பு.
ஆன்மிகத்தை வெறும் புராண அளவுடன் நிறுத்திக் கொள்ளக் கூடாது. புராணக் கதைகளில் பொதிந்துள்ள தத்துவங்களே முக்கியம். அதைப் புரிந்து, திருவிழாக்களை கொண்டாட வேண்டும்.

இரவு தியானம், மகான்களின் வாழ்வில் திருப்பத்தைத் தந்தது.
காளி உபாசகரான ராமகிருஷ்ண பரமஹம்சர், பஞ்சவடி எனும் மரங்கள் அடர்ந்த பகுதியில், பல இரவுகள் தியானத்தில் இருந்துள்ளார். தன் சீடர்களை இரவில் தூங்குவதற்கு அனுமதிப்பதில்லை. இரவில் தியானம் செய்தால் தான், இறைவனைக் காண முடியும் என சீடர்களிடம் சொல்வார்.

ராமகிருஷ்ணரின் சீடர்களான விவேகானந்தரும், (அப்போது அவர் நரேந்திரன் என்னும் இளைஞர்) கிரீஷ் சந்திரகோஷ் என்பவரும் இரவில் ஒரு தோட்டத்தில் அமர்ந்து தியானம் செய்வர். கொசுத்தொல்லை காரணமாக, கிரீஷால் தியானத்தில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. ஒருநாள், அவர் கண்விழித்து பார்த்த போது, நரேந்திரரின் மேல் கொசுக்கள் தேன் அடை போல் மொய்த்திருந்தன. ஆனால், அவர் கண்விழிக்கவில்லை. இரவு நேர தியானத்தால் கிடைத்த மனவுறுதி காரணமாகத்தான் அவர் விவேகானந்தராக முடிந்தது.
நவராத்திரி நாட்களில், நம் மனதிலுள்ள ஆணவத்தை வேரறுக்கும் வகையில், அம்பாளிடம் தியானம் செய்வோம்.
***

Wednesday, October 2, 2013

கழுகுமலை வெட்டுவான் கோயில்.


கழுகுமலையின் சிறப்பு, அந்த மலையின் பின்புறம் அமைந்து உள்ள ‘வெட்டுவான் கோயில்’ ஆகும். மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி, அந்த ஒற்றைப் பாறையிலேயே ஒரு கோயிலைச் செதுக்கி இருக்கிறார்கள். அதுதான், ‘வெட்டுவான் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய கோயில், தமிழகத்திலேயே இது ஒன்றுதான் என்பதுவே, கழுகுமலையின் மாபெரும் சிறப்பு ஆகும். இந்தியாவிலேயே கழுகுமலையைத் தவிர, மராட்டிய மாநிலம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் மட்டுமே, மலைக் குடைவரைக் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கரன்கோவில்-கோவில்பட்டி சாலையில், இரு நகரங்களுக்கும் நடுவே அமைந்து உள்ளது கழுகுமலை பேரூர். மலையின் பின்பகுதியில் உள்ள படிக்கட்டுகளின் வழியாக மேலே ஏறினால், பதினைந்து இருபது நிமிடங்களுக்கு உள்ளாக ஏறி விடலாம். மலையின் நடுவே ஓரிடத்தில், வரிசையாகப் பல சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன. சமணர்கள், தங்கள் குரு, தாய், தந்தை ஆகியோரின் நினைவாக, இங்கே சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளைச் செதுக்கி உள்ளனர். இச்சிற்பங்களின் கீழே, அவற்றைச் செதுக்கியவர்களின் பெயர்கள் தமிழ் வட்டு எழுத்துகளில் பொறிக்கப்பட்டு உள்ளன. சிறுசிறு குகைகளும் உள்ளன. அங்கே அமைந்து இருந்த சமணர் பள்ளிகளில், சமண மதக் கருத்துகளைப் போதித்தனர்.

வெட்டுவான் கோயில், ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது (Monolithic). கழுகுமலையின் ஒரு பகுதியில், 7.50 மீட்டர் ஆழத்துக்குச் சதுரமாக வெட்டி எடுத்து, அதன் நடுப்பகுதியைக் கோவிலாகச் செதுக்கி உள்ளனர். ஆனால் அந்தக் கோவிலின் பணி முழுமையாக நிறைவு பெறவில்லை. இதில், கரு அறையும், அர்த்த மண்டபமும் உள்ளன. கோவில் கோபுரத்தில், உமா மகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா வடிவங்கள் காணப்படுகின்றன.

விமானத்தின் மேற்குத்திசையில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளில் நந்தி சிலைகளும், இவற்றுக்குக் கீழே யாளி வரிகளும், கபோதகமும் உள்ளன.

பராந்தக நெடுஞ்சடையன் என்ற மன்னனின் காலத்தில், கழுகுமலையில் சிற்பங்களைச் செதுக்கி இருக்கிறார்கள்.

கழுகுமலையில், மூன்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. 1. சமணர் பள்ளி 2. வெட்டுவான் கோயில் 3. முருகன் கோவில்.

மலையின் பழம்பெயர் ‘அரைமலை’. இன்றைய பெயர் ‘கழுகுமலை’.

ஊரின் பழம்பெயர்: பெருநெச்சுறம் அல்லது திருநெச்சுறம்.

நாட்டுப் பிரிவு: இராஜராஜப்பாண்டி நாட்டு, முடிகொண்ட சோழவளநாட்டு, நெச்சுற நாட்டு நெச்சுறம்.

ஊரில் குறிக்கப்பட்டு உள்ள அரசர்கள்:

1. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தக நெடுஞ்சடையன்)

2. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தக வீரநாராயணன்).

கழுகுமலையின் அடிவாரத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோயில் உள்ளது. இதன் மூலவர் இருக்கின்ற இடமும் ஒரு குடைவரைதான். இந்தக் கோவிலின் தெப்பக் குளத்தில், பால் போன்ற நிறத்தில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. அதுதான், இந்த ஊர் மக்களின் குடிநீராக, அண்மைக்காலம் வரையிலும் பயன்பட்டு வந்தது. எனவே, அந்தக் குளத்தைத் தூய்மையாகப் பராமரித்து வருகிறார்கள். இப்போது, தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வருகிற திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

வெட்டுவான் கோவில் குறித்து, அந்தப் பகுதி மக்களிடையே பல கதைகள் உலா வருகின்றன. அவற்றையெல்லாம் தேடிச் சேகரித்து எழுதினால், மேலும் பல செய்திகள் பதிவு ஆகலாம்; இந்தப் பணியை, தமிழ் ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கழுகுமலை இளைஞர்கள் செய்ய வேண்டும்!

(2010 ஆம் ஆண்டு வெளியான, அந்தமானில் அருணகிரி என்ற நூலில் இடம் பெற்று உள்ள கட்டுரை-திருத்தங்களுடன்)

Tuesday, October 1, 2013

ரோகினி நட்சத்தில் பிறந்தவர்களி பரிகாரத்தலம் அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்

ரோகினி நட்சத்தில் பிறந்தவர்களி பரிகாரத்தலம்
அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
மூலவர்:பாண்டவ தூதர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:சத்யபாமா, ருக்மணி
தல விருட்சம்:-
தீர்த்தம்:மத்ஸ்ய தீர்த்தம்
ஆகமம்/பூஜை:-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருப்பாடகம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்: காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து அன்று வெஃகணை கிடந்தது எண்ணிலாத முண்ணெலாம் அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன் நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே.
-திருமழிசையாழ்வார்.
திருவிழா:
கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம். அருளாளப்பெருமாள் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் நடக்கிறது.
தல சிறப்பு:
கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், 28, பி, பாண்டவதூதப் பெருமாள் கோயில் தெரு, காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91 44-2723 1899
பொது தகவல்:
ரோகிணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:கற்றறிந்தவர்களுடன் நட்பை விரும்புபவராகத் திகழ்வர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் ஊர் சுற்றும் இயல்பைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த நம்பிக்கை உண்டு. இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு இருக்கும். மக்கள் செல்வாக்கு சிறப்பாக இருக்கும். மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலம். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72,000 அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு.
தலபெருமை:
கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். பெருமாளின் சிலை 25 அடி உயரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரை, இங்குள்ள கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிப் பிட்டுள்ளனர். கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளுகிறார். எனவே இங்கு அடிப் பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர் களுக்கு துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார்.
எட்டாம் தேதி விசேஷம்:ரோகிணி தேவி, இத்தலத்து பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில் ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவிகளை மணந்தார். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த பெருமாளை, இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வணங்க வருவதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன், சனிக்கிழமை, அஷ்டமி திதி, 8ம் தேதிகளில் இங்கு வழிபாடுசெய்வது சிறந்த பலனைத்தரும்.
தல வரலாறு:பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் கவுரவர்களிடம் தன் நாட்டை இழந்தார். ஆளுக்கொரு வீடு வீதம் ஐந்து வீடுகளையாவது கேட்டுவாங்க, துரியோதனனிடம் தூது சென்றார் பகவான் கிருஷ்ணர். அவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். கிருஷ்ணர் அமர்வதற்காக போடப் பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு பெரிய நிலவறையை (பாதாளம்) உண்டாக்கி அதன்மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கிருஷ்ணனும் அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்தது, கிருஷ்ணரும் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்கினர் சில மல்யுத்த வீரர்கள். அவர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார். பாண்டவர்களுக்காக தூது சென்ற இவரை பாண்டவதூத பெருமாள் என்பர்.
பாரத யுத்தம் முடிந்து வெகுகாலத்திற்கு பின், ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக்கதையை கேட்க வந்தார்.கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், என ரிஷியிடம் மன்னர் வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார். பெருமாள், தன் தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.

புனர்பூசம் நட்சத்திரம் அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்

புனர்பூசம் நட்சத்திரம்
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
மூலவர்:அதிதீஸ்வரர்
உற்சவர்:
அம்மன்/தாயார்:பெரியநாயகி, பிரகன் நாயகி
தல விருட்சம்:அகண்ட வில்வமரம்
தீர்த்தம்:சிவதீர்த்தம்
ஆகமம்/பூஜை:
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:வாணியம்மைபாடி
ஊர்:வாணியம்பாடி
மாவட்டம்: வேலூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை.
தல சிறப்பு:
இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார்.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி, (பழைய வாணியம்பாடி) வேலூர் மாவட்டம்.
போன்:
+91 4174 226 652,99941 07395, 93600 55022
பொது தகவல்:
புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:கல்வியில் ஊக்கம் கொண்ட இவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்களாக இருப்பர். ஊர் சுற்றும் சுபாவமும் இயல்பும், ஆடம்பர குணமும் கொண்டிருப்பர். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்ல விரும்ப மாட்டார்கள். பிறரை நன்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். நன்றியுணர்வுடன் உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும். இக்கோயில் பல்லவப்பேரரசர்களால் கட்டப்பட்டது. மூன்று நிலை மேற்கு ராஜகோபுரமும், ஐந்து நிலை கிழக்கு ராஜகோபுரமும் உள்ளது. சிவன் மேற்கு நோக்கியும், சரஸ்வதி கிழக்கு நோக்கியும் உள்ளது சிறப்பு.
பிரார்த்தனை
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
பால், தேன், நதிநீர், அன்னம் ஆகியவற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
தலபெருமை:
மேற்கு நோக்கிய இந்தக் கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயிலை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். ராமபிரான் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காச்ய முனிவரின் தர்ம பத்தினி அதிதி. இவள் புனர்பூசம் நட்சத்திரம் தோறும் இத்தலத்தில் விரதமிருந்து தேவர்களை பெற்றாள் என புராணங்கள் கூறுகிறது. எனவே புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் வாணியம்பாடி. மாதம் தோறும் புனர்பூசம் நட்சத்திரத்தில் மளிகைசாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும்.புதுவீடு, வாடகை வீடு பால் காய்ச்சுதல் போன்ற விருத்தியாககூடிய செயல்களை இந்த நட்சத்திரத்தில் செய்வது சிறப்பு வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும், பள்ளிமாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு இங்கு வந்து வாணியை வழிபாடு செய்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆசிரியர்கள் தங்கள் தொழிலை துவங்கும் முன்பும் இங்குள்ள வாணியை வழிபடுவது சிறப்பு. ஹோட்டல் தொழில் செய்பவர்கள் அடிக்கடி இங்கு வந்து அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். இதனால் தங்களது தொழிலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீங்கும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
பிரம்மா சரஸ்வதியிடம், உலக உயிர்களை படைக்கும் நான் தான் பெரியவன். எனவே தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என எனது பெயரை முதலில் கூறுகிறார்கள், எனக் கூறினார். இதைக்கேட்டு கலைமகளுக்கு சிரிப்பு வந்தது. கோபமடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சபித்தார். வருந்திய வாணி பூலோகம் வந்து சிருங்கேரி என்னும் தலத்தில் தவம் இருந்தாள். வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களைத் திருப்திப் படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர். எனவே பலதிசைகளிலும் தேடி, சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார். செல்லும் வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் தங்கினார். இதனால் மகிழ்ந்த சிவனும்,பார்வதியும் வாணிக்கு அருள்செய்து அவளைப்பாடும்படி கூறினர். வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள். (கலை)வாணி பாடிய தலம் என்பதால், இவ்வூர் வாணியம்பாடி ஆனது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார்
இருப்பிடம் :
வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
வாணியம்பாடி
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி :
வேலூர்
ஹோட்டல் கண்ணா போன்: +91 - 416; 2223060, 2223160.
ஹோட்டல் டார்லிங் ரெஸிடன்ஸி போன்: +91 - 416-2213001, 2313005.
ஹோட்டல் சுரபி இன்டர்நேஷனல் போன்: +91 416-2216399, 22164999.
ஹோட்டல் ரிவர்யூ போன்: +91 - 416-2225251, 2222349