வியாழக்கிழமை சமையலறையில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் செய்தாலே போதும். வெள்ளிக்கிழமை விடியும் போது மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு தான் முதலில் வருகை தருவார்கள்.**
பொதுவாகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீடு தேடி வர வேண்டும் என்பதற்காக நம் வீடு முழுவதையும் சுத்தம் செய்து விடுவோம். குறிப்பாக பூஜை அறையை வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து, வெள்ளிக்கிழமை பூஜைக்குத் தயாராக வைத்து இருப்போம். ஆனால் நம் வீட்டில் மகாலட்சுமி குடி கொண்டிருக்கும், அன்னலட்சுமி குடி கொண்டிருக்கும், அஷ்டலட்சுமிகளும் குடி கொண்டிருக்கும், சமையலறையை யாரும் கவனிப்பது கிடையாது. வியாழக்கிழமை இரவு சமைத்து சாப்பிட்டு முடித்துவிட்டு நம்முடைய சமையலறையில் என்னென்ன விஷயங்களைக் கடைப்பிடித்தால், வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மனநிறைவோடு நம் வீட்டிற்குள் முதலில் வருகை தருவார்கள் என்பதை பற்றிய சிறிய தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
வியாழக்கிழமை அன்று இரவு மட்டும் அல்ல, தினம் தோறும் இரவு நேரத்தில் சமையலறையில் எச்சில் பாத்திரங்கள் கட்டாயம் இருக்கக் கூடாது. முடிந்தவரை குடும்பத் தலைவிகள் அந்த எச்சில் பாத்திரத்தை சுத்தம் செய்துவிட்டு, அதன் பின்பு தூங்கச் செல்வது நம் வீட்டிற்கு நன்மையைத் தரும். அடுத்தபடியாக குறிப்பாக வியாழக்கிழமை அன்று சமையலறையை சுத்தம் செய்துவிட்டு, மேடையை சுத்தம் செய்து அடுப்பை சுத்தம் செய்து சில இடங்களில் மஞ்சள் குங்கும பொட்டை வைத்திருக்க வேண்டும்.
எந்தெந்த இடங்கள். அடுப்பு, உப்பு ஜாடி, அஞ்சறைப் பெட்டி, அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரம், அறுவாமனை அல்லது கத்தி இந்த பொருட்களெல்லாம் கட்டாயம் மஞ்சள் குங்கும பொட்டு வைப்பது மிகவும் நல்லது. இதை தவிர்த்து உங்களுக்கு வேறு ஏதேனும் பொருட்களுக்கு மஞ்சள் குங்கும பொட்டு வைக்கவேண்டும் என்ற இஷ்டம் இருந்தால் நீங்கள் தாராளமாக வைத்துக் கொள்ளலாம் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.
இதோடு சமையலறை மேடையில் கொஞ்சமாக பச்சரிசி மாவில் மஞ்சள் பொடியை கலந்து மஞ்சள் நிறத்தில் சிறிய கோலம் போட வேண்டும். வியாழக்கிழமை இரவு இதை செய்துவிடுங்கள். மறுநாள் காலை வெள்ளிக்கிழமை குளித்து முடித்துவிட்டு முதலில் மகாலட்சுமி வேண்டி உங்களுடைய சமையலறையில் பாலைக் காய்ச்சுங்கள். அந்தப் பால் பொங்கி வழிவது போல உங்கள் இல்லமும் எப்போதும் சந்தோஷத்தில் பொங்கி வழியும்.
வாரம் ஒரு நாள் வியாழக்கிழமை அன்று சிரமம் பார்க்காமல் எந்த ஒரு வீட்டில், அவரவர் சமையலறையை இப்படி பராமரித்து வருகின்றார்களோ அந்த வீடு நிச்சயமாக சுபிட்சம் அடையும். இதேபோல் தினந்தோறும் இரவு நேரத்தில் சமையல் அறையில் இருக்கக்கூடிய வேண்டாத எதிர்மறை ஆற்றல் அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்றால் சமையல் அறையில், ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்க வேண்டும்.
சிறிய அளவிலான மெழுகுவர்த்தியை ஏற்றினால் போதும். இரண்டு நிமிடங்கள் அந்த மெழுகுவர்த்தி எரிந்து உருகி அணைந்து போனாலும் சரி, உங்கள் சமையலறையில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் சமையலறையை விட்டு நீங்கிவிடும். சமையலறையில் எப்படி கெட்ட சக்தி குடிகொள்ளும், என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்.
சமையலறையில் சமைக்கும் பெண்கள் ஒரே மனநிலையில் சமைப்பது கிடையாது. சில சமயங்கள் சந்தோஷமாக சமைக்கும் தருணங்களும் உண்டு. சிலசமயம் அடுத்தவர்களை திட்டிக்கொண்டு சமைக்கும் தருணங்களும் உண்டு. அடுத்தவர்களை திட்டும் போது கட்டாயமாக அந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல் செயல்பட தொடங்கிவிடும். இதோடு மட்டுமல்லாமல் சிலபேர் அசைவம் சமைக்கும் பழக்கத்தையும் வைத்திருப்பவர்கள். அதன் மூலம் ஏதேனும் தோஷங்கள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்வதற்கு ஒரு சிறிய மெழுகுவர்த்தி போதும். (மெழுகுவர்த்தியை பொருத்தும்போது கவனத்தோடு இருக்க வேண்டும். கேஸ் சிலிண்டர் அருகில் எக்காரணத்தைக் கொண்டும் மெழுகுவர்த்தியை பற்ற வைத்து விடாதீர்கள்.) முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.