*🙏🕉️“புதன் கிழமை விரதம் ”*
பச்சை நிறம் என்பது வளமையின் நிறம். நமது பசியை போக்கி, சக்தியை அளிக்கும் பல வகையான தாவரங்கள், செடிகள், கீரைகள் என அனைத்தும் பச்சை நிறத்திலேயே இருக்கின்றன. நவகிரகங்களில் பச்சை நிறம் கொண்ட புதன் கிரகமும் மனிதர்களுக்கு அறிவு, செல்வ வளமையை தரும் கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். அவரின் அருளை நாம் பெற மேற்கொள்ள கூடிய “புதன் கிழமை விரதம்” பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் புதன் கிழமையில் வருகிற விசாகம் நட்சத்திர தினத்தன்று புதன் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 புதன் கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையை கழுவி சுத்தம் செய்து, பீடம் வைத்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.
பீடத்தில் புத பகவானின் சிறிய படத்தை வைத்து, அப்படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது பச்சை நிற துணியை வைத்து, பச்சை காய்கறிகள் மற்றும் இனிப்புகளை நைவேத்தியம் வைக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்களும் பச்சை நிற உடைகளை அணிந்து கொண்டு நெய் தீபங்கள் ஏற்றி, சந்தன மணம் கொண்ட தூபங்கள் கொளுத்தி புதன் பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.
புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல், அருந்தாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும். மாலையில் புதனுக்கு பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் ஒரு பிராமணருக்கு தானம் அளிப்பது மிகுந்த நன்மையை தரும். பச்சை நிற ஆடைகள், பச்சை நிற காய்கறிகள் தானம் அளிப்பது உங்களின் புதன் கிரக தோஷங்கள் நீங்கி புதன் பகவானின் ஆசிகளை உங்களுக்கு தரும்.
No comments:
Post a Comment