Friday, February 27, 2015

நோய்களை குணமாக்கும் சமயபுரம் மாரியம்மன்

நோய்களை குணமாக்கும் சமயபுரம் மாரியம்மன் 


தமிழகத்திலேயே பக்தர்கள் வருகை அதிகமாகவும், அறநிலையத் துறைக்கு அதிக வருமானமும் பெற்றுத் தரும் சில கோயில்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் முக்கியமானது. தாலி வரம் வேண்டி தாலி தங்கம் இங்கு மிக அதிக அளவில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது. இத்தலத்தில் வேண்டிகொண்டால் சர்ஜரி இல்லாமல் பல நோய்கள் குணமாகும் அதிசயம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று மாரியம்மன், பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது. உடல் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள், கண்பார்வை குறையுள்ளவர்கள் அம்மனை வணங்கினால் குணமாகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

குடும்பங்களை ரட்சிக்கும் அகிலாண்டேஸ்வரி

திருச்சி திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில். அகிலத்துக்கெல்லாம் ஈஸ்வரியானதால் அவளுக்கு அகிலாண்டேஸ்வரி என்று பெயர். இங்கு ஜம்புகேஸ்வரரும், அகிலாண்டேஸ்வரியும் அருள்புரிகின்றனர். கோயிலுக்குள் நுழைந்தால் பிரமாண்ட மண்டபங்களை காணலாம். உள்ளுக்குள் சிறிய மூர்த்தியாக இருக்கின்ற ஜம்புகேஸ்வரர், ஒரு முதிர்கன்னி வடிவத்தில் அழகாக நிற்கின்ற அகிலாண்டேஸ்வரி தாயார் இருவரையும் தரிசித்துவிட்டு வரலாம். உயரமான குத்துவிளக்கு தீபம் அசைய அந்த அசைவின் ஒளியில் புன்னகையோடு வீற்றிருக்கும் அகிலாண்டேஸ்வரி தாய் குடும்பங்களை ரட்சிக்கிறவள். குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைப்பவள். இருளில் தவிக்கும் பல குடும்பங்கள் அகிலாண்டேஸ்வரி தாயின் தரிசனத்தால் ஒளி பெற்று விளங்குகின்றன. இந்தக் கோயில் மிகப் புராதனமானது. மிக வலிமையான அதிர்வுகளை கொண்டது

திருமண தடை, புத்திர தோஷம் நீக்கும் வெக்காளியம்மன்

அன்னை பராசக்தியின் அவதாரங்களில் முக்கியமானது காளி அவதாரமா கும். திருச்சி உறையூர் அம்மன் சன்னதியில் வடக்கு நோக்கிய யோக பீடத்தில் அமர்ந்து வெக்காளி அம்மன் கம்பீரமாக காட்சி தருகிறாள். இந்த கோயில் விமானம்(மேற்கூரை) இல்லாத ஒரு கோயிலாகும். வெக்காளி அம்மன் வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள். மக்கள் தங்கள் மனதில் உள்ள குறைகளையும் கோரிக்கைகளையும் சீட்டில் எழுதி அன்னை முன்புள்ள திரிசூலத்தில் கட்டி விடுகின்றனர். இதன்மூலம் தங்கள் குறைகள் நிவர்த்தியாகும் என நம்புகின்றனர். அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடையும் புத்திர தோஷமும் நீங்கும்.

அம்மை நோய் தீர்க்கும் புன்னைநல்லூர் மாரியம்மன்

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் பசுமையான வயல்களுக்கு மத்தியில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. சதாசிவ பிரம்மேந்திர சுவாமி புற்றுவடிவில் இருந்த அம்மனுக்கு மாரியம்மன் வடிவத்தைக் கொடுத்து, ஸ்ரீசக்கரமும் பிரதிஷ்டை செய்தார். இத்திருக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களில் ஒன்றாகும். அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்துக்கு பெருமளவில் பிரார்த்தனை செய்து குணமடையப் பெறுவது இத்தலத்தின் சிறப்பு. இதுதவிர தோல் வியாதி, கண் நோய், மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்து குணமடைகிறார்கள். அம்மை நோய் கண்டவர்கள் அம்மை இறங்கியவுடன் அம்மனுக்கு மாவிளக்கு போடுகிறார்கள்.

வியாபார சிக்கலுக்கு தீர்வு தரும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில். குலோத்துங்க சோழனால் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டது. வாரத்தின் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது. கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.


No comments:

Post a Comment