Wednesday, February 25, 2015

அகத்தியரும் பொதிகை மலையும்;

அகத்தியரும் பொதிகை மலையும்;
( படங்கள் மற்றும் போதிய தகவல் தந்து உதவிய அருமை நண்பர் பாலாஜி ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் )
>> அகத்தியர் மலை தென்னிந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது பொதிகை மலை, அகத்தியர் மலை, தமிழ் மலை, தென்மலை போன்ற பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இங்கு அகத்தியர் வாழ்ந்ததால் இது அகத்திய மலை என்று வழங்கப்படுகிறது.

>> இம்மலையில் பல சிற்றாறுகளும், அருவிகளும் உள்ளன.இங்கு ஏலம், காப்பி, தேயிலை, சந்தணம், அகில், தேக்கு ஆகியவற்றுடன் பல மூலிகைகளும் நிறைந்துள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதிகளையும், குன்றுகளையும், பள்ளத்தாக்குகளையும் உடையது இம்மலை.. அகத்தீஸ்வரர், குறுமுனி என்றழைக்கப்படும் அகத்தியர் இயற்றிய அகத்தியம் தமிழ் இலக்கியத்தில் முதலாவதாக கருதப் படுகிறது. தமிழும் மருத்துவமும் ஜோதிடமும் இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின..
>> பொதிகை மலைத்தொடரில் தான் தமிழகம் எங்கும் கோயில் கொண்டுள்ள சாஸ்தாக்களுக்கெல்லாம் மூல சாஸ்தாவான சொரிமுத்தையனார் கோயில் உள்ளது. ஐயப்பன் பிறப்பும் வளர்ப்பும் இங்கு நிகழ்ந்ததாக கர்ண பரம்பரை கதை உள்ளது.
>> கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.
>> அகத்தியர் தமிழ் முனிவர்: அகத்தியர் தமிழ் முனிவரைத் தரிசிக்க திருவனந்தபுரம் (கேரளம்) பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் (Guide) மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.

>> இம் மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகது.

>> தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்திரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர்

No comments:

Post a Comment