Saturday, September 28, 2013

கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேசர் கோவில்


கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேசர் கோவில் திருப்பதி - திருமலையில் உள்ள ஏழுமலை யானை மட்டும் தான் ``வெங்கடேசா'' என்பார்கள். மற்ற தலங்களில் அவர் தோன்றுவதை ``பிரசன்ன வெங்கடேசர்'' என்பார்கள். தமிழ்நாட்டில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்ற பெயரில் ஏராளமான வைணவத் தலங்கள் உள்ளன. அதில் தனித்துவம் கொண்டது, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம். இத்தலத்தில் உள்ள மூலவர் அப்படியே திருமலையில் உள்ள ஏழுமலையான் போலவே காணப்படுகிறார். இதனால் திருப்பதி தலத்தில் நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ... ... அவை எல்லாவற்றையும் இங்கு செய்யலாம் என்பது ஐதீகம். அதனால் தான் கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வழிபட்டால், திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட எல்லா பலன்களும் கிடைக்கும் என்கிறார்கள். திருப்பதி ஏழுமலையானின் சிறப்பை புகழ்ந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அன்னமாச்சாரியார் பாடிய பாடல்கள், கீர்த்தனைகள் புகழ் பெற்றவை. இந்த வைணவ அடியார் 1400களில் சென்னை வந்தபோது கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேசரை வணங்கி மனம் உருகினார். இது ஒன்றே போதும்... திருப்பதிக்கும் இத்தலத்துக்கும் உள்ள தொடர்பை உறுதிபடுத்துவதற்கு. இந்த தலம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சோழ மன்னர்கள் இந்த கோவிலை கட்டியது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது. அடையார் ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஆலயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நீர்நிலைகள் சூழ்ந்த பகுதியில் மிக, மிக ரம்மியமான இயற்கை எழிலுடன் இருந்தது. சென்னை நகரின் வளர்ச்சி காரணமாக இத்தலம் உள்ள பகுதியின் சுற்றுச்சூழலே இன்று மாறி, ஒரு சிறிய கோவில் போல காட்சி அளிக்கிறது. இந்த தலம் ஒரே ஒரு பிரகாரத்துடன் உள்ள போதிலும், இதன் கீர்த்தியும், இத்தலம் தரும் புண்ணிய பலன்களும் அளவிடற் கரியது. சென்னை நகர மக்கள் இதை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமே. இத்தலத்து மூலவரை எத்தனை முறை பார்த்தாலும் சரி, மனதில் சலிப்பே வராது. ஒவ்வொரு தடவை அவரை பார்க்கும் போதும் நம் மனதில் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படும். இத்தகைய சிறப்புடைய பிரசன்ன வெங்கடேசர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு திசையை நோக்கியபடி உள்ளார். இவரைத் தொடர்ந்து அலர் மேல் மங்கை தாயார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீசுதர்சன சக்கரத்தாழ்வார், ஸ்ரீ வேணுகோபால சுவாமி, நவக்கிரகங்கள், பக்த ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனித்தனியே 6 சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த 6 சன்னதிகளிலும் வழிபாடு செய்தால் அரிய பலன்களைப் பெறலாம். அலர் மேல் மங்கை, ஆண்டாள் சன்னதியில் ஐதீகப்படி வழிபாடுகள் செய்யும் பெண்களுக்கு ஆசை பட்டப்படி அருமையான கணவர் அமையப் பெறுவார்கள். சுதர்சன சக்கரத்தாழ்வார் சன்னதியில் வியாழக்கிழமை அர்ச்சனை செய்து வழிபட்டால் எவ்வளவு பெரிய எதிரி நம்மை மிரட்டினாலும், சக்கரத்தாழ்வார் பார்வைப்பட்டு காற்றில் கரைந்து போய் விடுவார்கள். அதுபோல ஸ்ரீ வேணுகோபால சுவாமியும் சக்தி வாய்ந்தவர். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள், ரோகிணி நட்சத்திர நாளில் இவரை அர்ச்சனை செய்து வழிபட்டால்....... வீட்டில் நிச்சயம் தொட்டில் ஆடும். பொதுவாக சிவாலயங்களில் தான் நவக்கிரக சன்னதி அமையப் பெற்றிருக்கும். ஆனால் இத்தலத்தில் நவக்கிரக சன்னதி இருப்பது மிக, மிக அபூர்வமாகக் கருதப்படுகிறது. ஆலயத்தின் வடக்குப் பகுதியில் உள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டால், எத்தகைய கிரக தோஷம் இருந்தாலும் சரி, அவை நிவர்த்தியாகி விடும். இங்குள்ள பக்த ஆஞ்சநேயரும் பக்தர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த ஆஞ்சநேயருக்கு அமாவாசை மற்றும் மூலம் நட்சத்திரம் நாட்களில் வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் நினைத்தது நிறை வேறும். மிகச் சிறந்த பிரார்த்தனை தலமான இத்தலத்தில் நீங்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் வெற்றி உண்டாகும். பொதுவாக பெருமாளை வழிபட்ட பிறகு அவரது ஸ்ரீ சடாரியை நம் தலையில் ஏந்த வேண்டுëம். நம் தலை மீது ஸ்ரீ சடாரி வைக்கப்பட்டால் தான் நமது வழிபாடு முழுமை பெறும். இத்தகைய சிறப்பான இத்தலத்து ஸ்ரீ சடாரி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்டு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராம நவமி, வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, மாத சிரவணம், புரட்டாசி சனிக்கிழமைகள், ஏகாதசி, அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. முக்கியமாக புரட்டாசி மாதம் வரும் 4 சனிக்கிழமையும் இத்தலத்தில் கோலாகல வழிபாடுகள் நடைபெறும். அன்றிரவு சுமார் 7 மணிக்கு மாட வீதி உலா நடை பெறும். இது மட்டுமின்றி சனிக்கிழமைகளில் இத்தலத்தில் அங்க பிரதட்சனம் செய்வதை பக்தர்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள். இங்கு அங்க பிரசட்சணம் செய்தால் நாம் விரும்பியதை பெருமாள் தருவார் என்பது ஐதீகம். திருப்பதிக்கு இணையாக இத்தலம் கருதப்படுவதால், அங்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனை, காணிக்கைகளை இங்கு செலுத்தி பயன் பெறலாம். திருப்பதியில் நடத்தப்படும் ``கல்யாண உற்சவம்'' மிகவும் புகழ்பெற்றது. ஆனால் ஆசைப்படும் எல்லாருக்கும் அந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்கான தேதி கிடைப்பது இல்லை. கல்யாண உற்சவம் தள்ளிக் கொண்டே போகிறதே என்று கவலைப்படுபவர்கள் இத்தலத் தில் வந்து கல்யாண உற்சவத்தை நடத்தினால் அதற்குரிய புண்ணிய பலன்கள் கிடைக்கும். இத்தலம் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், பிறகு மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும். இத்தலம் தொடர்பான மேலும் தகவல்களை இவ்வாலய மேலாளர் குப்புசாமியை 9803170178 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டுப் பெறலாம். கொம்புகளால் தாங்கப்படும் தலம்: கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம் தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆட்சிகைக்குட்பட்டு, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. மருந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டில் இப்பகுதி, ``சோழ மண்டலத்து புலியூர் கோட்டத்து கோட்டூர்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோடு+ஊர்=கோட்டூர். கோடு என்றால் தமிழில் 27 விதமான அர்த்தம் உள்ளது. அதில், ``விலங்குகளின் சொம்பு'' என்பதும் ஒரு அர்த்தமாகும். இந்த அர்த்தத்தில் தான் இத்தலத்தின் வரலாறு அடங்கி இருப்பதாக கருதப்படுகிறது. மகா விஷ்ணுவின் தசாவதாரத்தில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தில் விஷ்ணு பன்றி உருவம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கு அடியில் கொண்டு சென்ற இரண்யாட்சன் என்ற அசுரனுடன் விஷ்ணு (வராக உருவில்) சுமார் 1000 ஆண்டுகள் போரிட்டு வென்றார் என்பது வரலாறு. பூமியை மீட்ட வராகர், அதை தன் கொம்புக்கு இடையில் வைத்து தாங்கிக் கொண்டு அருள் செய்தார். அப்படி வராகரால் தாங்கப்பட்ட புண்ணியத் தலமாக கோட்டூர்புரம் தலம் கருதப்படுகிறது. இத்தலத்தை ஆதி காலத்தில் கோட்டு இடை என்றே அழைத்தனர். கோட்டு இடை என்றால் வராகத்தின் கொம்புகளின் இடையில் உள்ள தலம் என்று அர்த்தமாகும். இந்த கோட்டு இடை நாளடைவில் கோட்டூர் ஆகியது. வெளியூர் மக்கள் அங்கு குடியேறியதால் அப்பகுதி விரிவடைந்து கோட்டூர்புரம் ஆனது. அடையார் சிஎல்ஆர்ஐ (லெதர் இன்ஸ்டிடியூட்) பின்புறம் இத்தலம் அமைந்துள்ளது. வராக அவதாரத்தில் விஷ்ணுவால் தாங்கப்பட்ட தலம் என்பதால், இத்தலத்தில் மனம் உருகி வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். இத்தலத்துக்கு என இருந்த புஷ்கரணி, தீர்த்தங்கள் குடியிருப்புகளாகி விட்டன. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இத்தலத்தின் விருட்சமாக மாமரம் இருந்தது. இப்போது தல மரம் இல்லை. புதிதாக தல மரம் ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. இத்தலத்துக்கு சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் செல்ல பஸ் வசதி உள்ளது. சைதாப்பேட்டையில் இருந்து நிறைய பஸ்கள் இங்கு செல்கின்றன.

No comments:

Post a Comment