Friday, April 1, 2016

கதலி நரசிங்கர் கோவில்:

 கதலி நரசிங்கர் கோவில்:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள ஜம்புலிபுத்தூரில் அமைந்திருக்கிறது இந்த கதலி நரசிங்கர் (நரசிம்மர்) ஆலயம். ஆண்டிபட்டியிலிருந்து இருந்து பெரியகுளம் அல்லது வைகை அணைக்குச் செல்லும் பேருந்துகள் இந்த ஊர் வழியாகச் செல்கின்றன

முன்பு ஒரு காலத்தில், செண்பக மரங்கள் நிறைந்த பகுதியாக இந்த ஊர் இருந்ததால் இந்த ஊருக்கு, 'செண்பக வனம்' என்றும் பெயர் உண்டு

பாம்பு புற்றினுள் வாழைப்பூ வடிவில் கல் விக்கிரகமாக எம்பெருமான் சுயம்புவாக தரிசனம் கொடுத்து அவதரித்ததால், 'கதலி நரசிங்கர்' (கதலி என்றால் வாழை!) என்ற பெயரில் அந்தத் தெய்வத்தை வழிபட ஆரம்பித்தனர். பிறகு, பாண்டியர்கள் ஆட்சியில் கோயில் கட்டப்பட்டது. அதன்பின் நாயக்க மன்னர்கள் மண்டபங்கள் உள்ளிட்ட திருப்பணிகள் செய்துள்ளனர்.

சன்னதி தீர்த்தம் :

அழகிய தெப்பக்குளத்துடன் அழகாக அமைந்திருக்கிறது ஆலயம். ஸ்தல விருட்சம் நாவல் மரம். முகப்பில் பந்தக்கால் மண்டபம். சிற்பங்களுடன் கூடிய சிறிய கோபுரத்துடன் திகழ்கிறது. உள்ளே நுழைந்ததும் ஸ்தம்பம் மற்றும் பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கடந்து சென்றால் சிற்ப தூண்களுடன் திகழும் மகா மண்டபம். இங்கு கதலி நரசிங்க பெருமாளை நோக்கி மேற்கு பார்த்த சிறியதும் பெரியதுமாக சிறிய சன்னதியில் இரண்டு கருடாழ்வார்களின் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எப்போதும் ஒரு கருடாழ்வார் விக்கிரகம் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். இத்திருத்தலத்தில் மட்டும் இரு கருடாழ்வார்கள் உள்ளனர். இவர்களை வணங்கி இடப்புறம் திரும்பினால் நின்ற திருக்கோலத்தில் காலபைரவர். விசேஷ நாட்களில் இவருக்கு வடை மாலை சார்த்தி வழிபடுகிறார்கள்.

சுமார் 180 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். இந்தக் கோயிலின் பட்டாச்சார்யர் ஒருவர் பூஜைகளை முடித்து விட்டு, கால பைரவர் சந்நிதிக்கு எதிரே உறங்குவது வழக்கமாம்! ஒரு நாள் இந்த அர்ச்சகர், தனது கால்களை பைரவருக்கு எதிராக நீட்டி படுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட பைரவர், அர்ச்சகரைத் தூக்கி தெருவில் தேரடியில் போட்டு விட்டாராம். விடிந்ததும், பைரவரது செயலை அறிந்த பட்டர், தினமும் அபிஷேகம்.

நைவேத்தியம் எல்லாம் செய்யும் என்னை இப்படிச் செய்யலாமா? என்று ஆத்திரத்துடன் அங்கிருந்த இரும்பு ஆயுதத்தை எடுத்து பைரவரின் தலையில் அடித்தாராம். இதனால் பைரவரின் தலையில் பெரிய வடு ஒன்று ஏற்பட்டு விட்டது. இதன் பிறகு, தனது தவறை உணர்ந்து பைரவரிடம் மன்னிப்பு கேட்டார் பட்டர். பிற்காலத்தில் பக்தர்களது முயற்சியால் புதிய பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். பழைய சிலை, கோயிலின் ஒரு மூலையில் புதைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்த பைரவர் வரம்தருவதில் மிகவும் வல்லவர் என்கிறார்கள்.

அதன் அருகில் தெற்கு நோக்கிய சந்நிதியில், இருகரம் கூப்பியபடி காட்சி தருகிறார் ஆஞ்சநேயர். இவரை மனமார பிரார்த்தித்துச் சென்றால் மகப்பேறு வாய்க்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை. அப்படி, தங்களது வேண்டுதல் பலித்தவர்கள் இவருக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டுச் செல்கின்றனர். அடுத்து, பெரிய முன்மண்டபம் தாண்டினால் முத்து மண்டபம். இதன் வடக்கு மூலையில், தெற்கு நோக்கி காட்சி தருகிறார் சேனை முதல்வர். உற்சவ காலங்களில் இவருக்கே முதல் மரியாதை. கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வரதராஜர், நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம். முன் வலக்கரம் அபய ஹஸ்தம் காட்ட,முன் இடக்கரத்தை தொடை மீது வைத்து, நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.இவரது திருவடி அருகில், சிறிய சிலை வடிவில் சுயம்புவாக தோன்றிய வாழைப்பூ போன்ற வடிவில் காட்சி தருகிறார் கதலிநரசிங்க பெருமாள். அபிஷேக, நைவேத்திய, தீபாராதனை வேளைகளில் மட்டுமே இவரை தரிசிக்க இயலும். மற்ற நேரங்களில் இவரது திருவுருவம் கவசத்தால் மூடி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதலிநரசிங்கப் பெருமாள், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் இந்த சந்நிதியில் உள்ளனர்.பெருமாளின் சந்நிதியை ஒட்டி வலப்புறத்தில் லட்சுமி நரசிம்மர் தனிசந்நிதி. இதையடுத்து கிழக்கு நோக்கிய தனிச் சந்நிதியில் செங்கமலத் தாயார் அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்களுடன் கருணை பொங்கக் காட்சி தரும் இந்த அன்னையை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

.தாயாரின் சந்நிதிக்கு எதிரே நான்கு தூண்களுடன் திகழும் மண்டபத்துக்கு திருமண் காப்பு மண்டபம் என்று பெயர். திருவிழாவின்போது உற்சவம் முடிந்து ஆலயம் திரும்பியதும் இந்த மண்டபத்தில் எழுந்தருளி இளைப்பாறுவார் கதலி நரசிங்கப் பெருமாள். அப்போது, வெண்சாமர உபசாரத்துடன் இவருக்கு தீபாராதனை காட்டி, அதையே தாயாருக்கும் காட்டுவார்கள். இது, இந்த ஆலயத்தின் விசேஷமாகக் கருதப்படுகிறது.

சன்னதி தீர்த்த தெப்பகுளம் :

இந்தக் கோயிலில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. நடை திறப்பு காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.15 மணி வரையும் திறந்திருக்கும். சனிகிழமை மட்டும் மதியம் 1 மணி வரையும் இரவு 8 மணிவரையும் திறந்திருக்கும்.

இக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம், புரட்டாசி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, பெரிய கார்த்திகை போன்ற விழா வைபவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஸ்வாமி நகர்வல புறப்பாட்டுக்கு அன்ன, சிம்ம, ஆஞ்சநேய, கருட, சேஷ, யானை மற்றும் குதிரை வாகனங்களும் சப்பரமும் உள்ளன. புதிய தேரும் உள்ளன.

No comments:

Post a Comment