Friday, April 1, 2016

பாவங்களைப் போக்கும் ஸ்ரீசித்திரகுப்தர்

பாவங்களைப் போக்கும் ஸ்ரீசித்திரகுப்தர்!

பௌர்ணமி தரிசனம்...
திருப்பூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில், சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது சின்னாண்டிபாளையம் கிராமம்.

இங்கே அற்புதமாகக் கோயில் கொண்டு, அருள்பாலித்து வருகிறார் சித்திரகுப்தர். நம் பாவ- புண்ணியங்களைக் கணக்கிடும் சித்திரகுப்தரை வழிபட்டால், நமக்கு அருள்புரிந்து, நம் பாவங்களைக் களைவார் என்பது ஐதீகம்!

சுமார் 100 வருடப் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில், தலைப்பாகையுடன் வலக் கையில் இரும்பு எழுத்தாணியும், இடக் கையில் பனை ஓலையும் கொண்டு, கணக்கு எழுதும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார் சித்திரகுப்தர்.

எமதர்ம ராஜாவின் கணக்கரான ஸ்ரீசித்திரகுப்த பெருமான், சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று அவதரித்தவர். எனவே, கடந்த 85 வருடங்களாக, சித்ரா பௌர்ணமி நாளில் சித்திரகுப்தருக்குப் பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்கின்றனர் பக்தர்கள். மேலும், அந்த நாளில், சித்திர குப்த மகா யாகம் நடை பெறும். அப்போது சித்திரகுப்தரின் சரிதம், கதையாக வாசிக்கப்படுவது வழக்கம். இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற்றது இந்த வைபவம். அதிகாலை யில் துவங்கிய யாகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சித்திரை மாதம் பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட, சகல வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், கல்யாண வரம், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மாதந்தோறும் பௌர்ணமி நாளில், மாலையில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சித்திரகுப்தரை வேண்டினால், விரைவில் இல்லத்தில் நல்ல காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment