Saturday, January 10, 2015

சித்தர்கள் காட்சி தரும் திருநம்பிமலை

சித்தர்கள் காட்சி தரும் திருநம்பிமலை
ஒய்யாரமாக விளங்கும் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆரம்பமான மலைப்பகுதி. அடர்ந்த காடுகளின் பசுமை, கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் குளிர்ச்சியாகக் காட்சி தெரிய-நம்பியாறு-யாரையும் கேட்காமல் மலையுச்சியிலிருந்து தன் இஷ்டத்திற்கேற்ப செடி, கொடி, மலையடிவார மரங்களின் வேர்களை ஆசையோடு தடவிக் கொண்டு கிடைத்த மூலிகைச் சாற்றையும் இழுத்துக் கொண்டு குளுமையாக புன்னகையோடு பவனி வந்து கொண்டிருக்கும் அற்புதக் காட்சியை ஆசைதீரப் பார்த்துக் கொண்டிருக்கும் அற்புதமான மலையைப் பெற்ற திருக்குறுங்குடி.
தரைமட்டத்திலிருந்து சுமார் எட்டு கி.மீ. கரடு முரடான பாறைக் கற்
களை மிதித்துக் கொண்டு மெல்ல மலையேறினால் நம்பிப்பெருமாளின் கோவிலைச் சென்று அடையலாம். கீழ் மட்டத்திலிருந்து நம்பிமலை ஏற குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் ஆகலாம்.
மலையில் சாலை போடும் பணி நடந்து கொண்டிருப்பதால் பாதி தூரம் ஜீப் வருகிறது. பிறகு பாதி தூரம் எப்பேர்ப்பட்டவர்களும் காலால் நடந்துதான் போகவேண்டும். மரத்தின் வேர்களும் பாறைக் கற்களும்தான் நமக்கு வழிகாட்டி. இடையிடையில் தங்கி ஓய்வெடுத்துச் செல்லலாம்.
முகத்தை அலம்பிக் கொள்ள நம்மை நாமே ஆசுவாசப் படுத்திக் கொள்ள அங்கங்கே பாறைக்கு நடுவில் ஓடையும் சிற்றருவிகளும் இருப்பதால் தொய்வில்லாமல், களைப்பும் இல்லாமல் செல்லலாம். மிக அடர்த்தியான காடுகள் இங்குமங்கும் இருந்தாலும் காட்டு மிருகங்கள் இருந்தும் அவற்றினால் எந்தவிதத் தொல்லையும் இல்லை.
நம்பி கோவிலில் ஓரளவு வசதியோடு திண்ணை இருக்கிறது. மற்றபடி எந்தவித வசதிகளையும் எதிர்பார்ப்பது கஷ்டம்தான். ஆயிரமாயிரம் குரங்குகள் நம்மைச்சுற்றி இருப்பதால் அந்த மலைக் கோவிலில் பொழுது மிக நன்றாகக் கழியும். கோவிலுக்குப் பக்கத்தில் நம்பியாறு வற்றாமல், பாறை இடுக்கு வழியில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆற்றின் தண்ணீர் சிறிது கூட மாசுபடவில்லை. அதோடு மூலிகைச் செடிகளிடையே தவழ்ந்து வருவதால் மூலிகை மணமும் வீசுகிறது. அந்தத் தண்ணீரை எடுத்து பல நாள்கள் வைத்திருந்தாலும் அந்த நீர் கெடுவதில்லை என்பது அனைவருக்கும் ஓர் ஆச்சரியம்.
நம்பி கோவிலின் கீழே மிகப் பிரம்மாண்டமான புளியமரம் இருக்கிறது. இந்த மரத்தின் அடியில் பல்வேறு சித்தர்கள் இன்றைக்கும் தவம் புரிகிறார்கள். என்றாலும் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் விடியற்காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அந்தப் புளிய மரத்தின் அடியிலிருந்து சித்தர்கள் வெளியே வருவதும் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பரிபாஷையில் பேசிக் கொள்வதும் இன்றைக்கும் நடக்கிறது என்கிறார் நம்பிமலைக் கோவிலில் பன்னிரண்டு ஆண்டுகளாகக் குடியிருக்கும் தொண்ணூறு வயதான மனிதச் சித்தர் ஒருவர்.
நம்பிமலைக் கோவிலிலிருந்து இடப்பக்கம் மிகவும் அடர்ந்த காட்டுப்பாதை ஒன்று இருக்கிறது. அங்கு ‘தாய் பாதம்’ என்று ஓரிடம் சென்றால் சித்தர்களின் தரிசனம் நிறையக் கிடைக்கும். அவர்கள் வசிக்கும் குகைகளும் ஆங்காங்கே நிறையக் காணப்படுகின்றன.
இந்த மலைப்பாதையில் துணிந்து செல்ல பெரும்பாலானோர்க்குத் தைரியம் வராது. ஆனால் இந்தப் பகுதியில் வசிக்கும் பலர், ஆண்டுக்கொரு முறை இந்த மலைப்பாதை வழியே நான்கு நாள்கள் பயணமாகச் சென்று பொதிகை மலைக்குச் சென்று வருகிறார்கள்.
இந்த மலைக்கோவிலுக்கு வருகிறவர்கள் தங்கள் பாபங்களை ஒழிப்பது ஒருபக்கம் இருந்தாலும், எதிர்காலத்தில் எந்தவிதக் கஷ்டம் இல்லாமல் மன அமைதியோடு வாழலாம் என்ற தன்னம்பிக்கையோடு செல்வதைக் காணலாம்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் இந்தக் கோவிலுக்கு அக்கம் பக்கத்திலிருந்து நிறையக் கூட்டம் வருகிறது. சித்திரை மாதம் பௌர்ணமி அன்று இந்தக் கோவிலில் யாகம் வளர்த்து பூஜை செய்வதால் அன்று மட்டும் ஆயிரக்கணக்கான பேர் மலையிலேயே தங்கி விடுவார்கள்.
சித்தர்கள் இங்கு புற்றில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் புற்றீசல் போல் அவ்வப்போது வெளிப்படுவதாகவும் பார்ப்பதற்கு மூன்று அடிக்குமேல் இருக்கமாட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த சித்தர்களைக் காண்பதற்காகப் பல நாள்கள் காத்துக் கிடப்பதுண்டு.
பொதுவாக சித்தர்கள் அத்தனை பேரும் சிவன் கோவிலின் மலைகளிலேதான் உலாவருவதாகச் சொல்வதுண்டு. ஆனால் வைணவக் கோவிலில் சித்தர்கள் இருப்பது பெரும் ஆச்சரியம்தான். அந்த அதிசயம் இந்தக் கோவிலில் தான் தினமும் நடக்கிறது.
ஆரோக்கியமான மலைக்காற்று அமிழ்ந்து நன்றாக குளிக்கும்படியான மூலிகைச் சாற்றோடு விழும் நம்பிமலை நம்பியாறு. சுற்றிலும் பசுமைப் புரட்சிகள். பொழுது போவதற்கு ஆயிரக்கணக்கான குரங்குகளின் சேஷ்டைகள். இந்த அருமையான காட்சிகள், நம் அனைவருக்கும் மன ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை இந்த மலைப் பெருமாளைக் கண்டு ஆனந்தமடைந்து வரலாம்.

No comments:

Post a Comment