Monday, January 12, 2015

கிளியோபாட்ரா என்ற கிரேக்க பேரழகி பூர்வ பிறவிகளில் வழிபட்ட தலமே இத்திருத்தலமாகும்

ஸ்ரீலலிதா பரமேஸ்வரி உறையும் ஸ்ரீசக்கரத்தை பலரும் பற்பல யந்திர வடிவில் வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீஆதிசங்கரர் உள்ளிட்ட பல மகான்கள் ஸ்ரீசக்கரத்தை கல், உலோகங்கள் போன்றவற்றில் பொறித்து பல திருத்தலங்களிலும் நிர்மாணித்துள்ளனர். திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம், திருவல்லிக்கேணி (சென்னை) ஸ்ரீபாரத்தசாரதி பெருமாள் ஆலயம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயம் போன்ற திருத்தலங்களில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை பக்தர்களின் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி திருவானைக் கோவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஸ்ரீசக்கரம் பொறித்த தாடங்கம் அணிந்து பக்தர்களுக்கு ஸ்ரீவித்யா சக்திகளை வாரி வழங்குகிறாள்.
இவ்வாறு ஸ்ரீசக்கரங்கள் பல வடிவங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் இவற்றில் சிறப்பான முறையில் ஸ்ரீதன ஸ்ரீசக்கர பீடம் அமைக்கப்பட்ட மிகவும் அபூர்வமான திருத்தலமே திருச்சி மணப்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலமாகும்.
மணப்பாறை ஸ்ரீஅகத்தீஸ்வரர்
இவ்வுலகில் மிகவும் பவித்திரமான, புனிதமான, தூய்மையான, தெய்வீகமான, அன்பான, சிறப்பான, நலமான, கனிவான, உண்மையான ஒரு பொருளைக் கூற வேண்டுமென்றால் அதுவே பெண்களின் தனமாகும். இக்காரணம் பற்றியே அகிலாண்டநாயகியும் ஸ்ரீஉண்ணாமுலை அம்மன் என்ற திருநாமம் கொண்டு அருளாட்சி செய்து வருகிறாள். ஆனால், இத்தகைய மதிப்பு வாய்ந்த, தெய்வீகப் பொக்கிஷமானது எதிர்காலத்தில் ஒரு வியாபாரப் பொருளாக அவமதிக்கப்படும் என்பதை தனது ஞான திருஷ்டியால் உணர்ந்த ஸ்ரீஅகத்தியப் பெருமான் மனித குலத்தை எதிர் வரும் துன்பத்திலிருந்த மீட்பதற்காக ஸ்ரீதன ஸ்ரீசக்ர சூட்சும பீடத்தை ஸ்ரீஅகத்தீஸ்வர திருத்தலத்தில் நிர்மாணித்து இறைவனின் நிரந்தர அன்பிற்குப் பாத்திரமானார்.
ஸ்ரீதனம் என்பது மக்களின் நற்சந்ததி விருத்திக்காக இறைவன் பெண்களுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம். மருமகள் என்னும் ஸ்ரீதனம் ஒரு இல்லத்தில் குடியேறாவிட்டால் அந்த இல்லத்தில் எப்படி சந்ததி தழைக்கும்? எனவேதான் அக்காலத்தில் திருமணம் என்பது பெண்கள் கொண்டு வரும் ஸ்ரீதனம் என்று போற்றினார்கள். இதை வருங்கால மாமியார்கள் உணர்ந்தால் மாமியார் மருமகள் தகராறு என்பது ஒரு கடந்த கால சம்பவம் என்று ஆகி விடும் அல்லவா?
அதே போல ஸ்ரீதனத்தைக் கொண்டு மருமகளாய் வரும் பெண்களும் வெறும் பணம், ஆடம்பரம், ஏட்டுப் படிப்பு, உடல் அழகு என்பது ஸ்ரீதனம் அல்ல, கடவுள் பக்தி, பணிவு, நற்குணம், தயை என்பதே பெண்களின் ஸ்ரீதனம் என்று உணர்ந்தால் அதை விட அமைதி நிலவும் சிறந்த குடும்பம் வேறேது?
எனவே, மணப்பாறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலம் பெண்களுக்கான ஒரு வரப்பிரசாத தலம் என்றே கூறலாம். பெண்களுக்கு வேண்டிய உடலழகு, நற்பண்புகள் அனைத்தையும் அருள வல்லதே இத்திருத்தலமாகும். கிளியோபாட்ரா என்ற கிரேக்க பேரழகி பூர்வ பிறவிகளில் வழிபட்ட தலமே இத்திருத்தலமாகும். பொங்குதனமாலினி என்று அழைக்கப்பட்ட கிளியோபாட்ரா ஆறு பிறவிகளில் இத்தல இறைவனுக்குத் தொண்டு செய்தே சக்கரவர்த்திகளும் கண்டு வியக்கும் அழகு ராணியாகத் திகழந்தாள் என்பது இதுவரை நீங்கள் அறியாத ரகசியமாகும்.
தெரிந்தோ தெரியாமலோ தங்கள் உடலழகைத் தவறாகப் பயன்படுத்திய பெண்களும் ஆண்களும் மீண்டும் அத்தகைய தவறுகளைச் செய்வதில்லை என்ற உறுதி பூண்டு இத்தல இறைவனை வேண்டி வழிபட்டால் தக்க பிராயசித்த வழிமுறைகளை பெற அருள்புரியும் தலம்.
இத்திருத்தலத்தின் தலவிருட்சமான கொன்றை மரம் தற்போது மறைந்து விட்டாலும் இங்குள்ள வில்வ மரத்திற்கோ, அரச மரத்திற்கோ துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் திருக்குள தீர்த்த நீரை அபிஷேகம் செய்து வழிபடுதலால் அற்புத பலன்களைப் பெறலாம்.

No comments:

Post a Comment