Friday, September 26, 2014

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி -கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி -
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே. - 11
பொருள்: அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.
கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே. - 12
பொருள்: என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!
பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே? -13
பொருள்: உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே: - 14
பொருள்: ஏ அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள், அசுரர்கள், மற்றும் உன்னை விரும்பிப் பல காலமும் தொழும் அடியார்கள்! நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவுமே உன்னைச் சிந்திப்பவர்கள்! நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர் என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே! இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம் செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே! உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!
தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே. - 15
பொருள்: அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள் நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும் பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா!
கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே. - 16
பொருள்: கிளி போன்றவளே! தாயே! உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும் அதிசயமாகும்!
அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே? - 17
பொருள்: அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன் முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து, அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே. - 18
பொருள்: அபிராமித் தாயே! என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பாசங்களை அகற்றி, என்னை ஆட்கொண்டு அருளிய நின் பொற்பாதங்களோடு, எந்தை எம்பிரானோடு இரண்டறக் கலந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரர் அழகும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும், கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள வேண்டும்.
வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. - 19
பொருள்: ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே! நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் இருப்பதை உணர்கிறேன். இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.
உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே. - 20
பொருள்: என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே

No comments:

Post a Comment