Wednesday, June 2, 2021

குண்டாங்குழி மகாதேவர் கோவில் மதகடிப்பட்டு புதுவை மாநிலம்

புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் புதுச்சேரியிலிருந்து 24 கி.மீ தொலைவில் #மதகடிப்பட்டு என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருபுவனை மகாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அன்னாளில் அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் தற்போது மதகடிப்பட்டு என்றழைக்கப்படுகிறது.
இவ்வூரில் நெடுஞ்சாலையின் தென்புறத்தே சிறிது தொலைவில் முதலாம் இராஜராஜன் சோழர் எடுப்பித்த குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படும் கோயில் அமைந்துள்ளது. 
அழகான கற்றளியாக விளங்கும் இக்கோயில் கி.பி.985லிருந்து 1016 வரை ஆட்சி செய்த முதலாம் ராசராசனால் கட்டப்பட்டது என இங்குள்ள ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.

குண்டாங்குழி என்ற குளத்தின் கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் உறையும் இறைவன் குண்டாங்குழி மகாதேவர் என்றும் கல்வெட்டுகள் குறிக்கின்றன. இவ்வூர் திருபுவனைப் புவிச் சதுர்வேதி மங்கலத்தின் (தற்போது திருபுவனை) ஒரு பகுதியாக விளங்கியது.

இக்கோயில் வளாகம்,குண்டாங்குழி மகாதேவர் உறையும் முழுதும் கருங்கற்களாலான அழகிய கோயில், அம்மன் திருமுன், சப்தமாதர்திருமுன் ஆகிய மூன்றினையும்உள்ளடக்கியது.
இக்கோயில் வளாகம், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் வேலி அமைக்கப்பட்டு நன்முறையில்  பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோயிலின் தகவல் பலகை, இக்கோயிலை திருகுந்தன்குடி மகாதேவர் கோயில், மதகடிப்பட்டு என்று தவறாக அறிவிக்கிறது. 
திருக்கோயில் விமானம், ஏகதளக் கலப்பு வேசர விமான அமைப்பினைக்கொண்டதாகும். முழுவதும் கருங்கற்களாலான இக்கோயிலின் அதிஷ்டானம் முதல் முதல் தளம் வரை சதுரமாகவும், மேலே கிரீவம் வட்டமாகவும், சிகரம் பெரிய மணி வடிவிலும் அமைந்துள்ளது.

வட்டவடிவுடன் கூடிய கிரீவத்தின் நாற்புறமும் கிரீவ கோஷ்டங்கள் அமைந்துள்ளன. கிழக்கில் முருகன் (பிரம்ம சாஸ்தாவாக), மேற்கில் விஷ்ணு, தெற்கில் யோக தட்சிணாமூர்த்தி, வடக்கில் பிரம்மா அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். கிரீவகோஷ்டத்தின் மேல் உள்ள மகாநாசிகைகள் வெறுமையாக உள்ளன. கிரீவத்தின் மேற்பகுதியில் சுற்றிலும் அழகிய அன்னவரிகள் காட்டப்பட்டுள்ளன.

சிகரம்:

சிகரம் வட்டவடிமாகவும் பெரிய மணியை கவிழ்த்த நிலையில் அமைந்துள்ளது. சிகரத்தின் மேற்பரப்பில் ஊர்த்துவபத்மம் மலர்ந்த தாமரை மலராகக் காட்டப்பட்டுள்ளது. சிகரத்தின் கீழ்பகுதி சற்று உயர்த்தியவாறு  கூரைபோன்று அமைக்கப்பட்டு பெரிய மணி போன்று காணப்படுகிறது.

ஸ்தூபி:

ஸ்தூபி வட்டவடிவுடன் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

கருவறை :

கருவறை சதுரமாகவும், இறை உருவமான லிங்கத்திருமேனி ஆவுடையின்றி பாணம் மட்டும் அமையப் பெற்று குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படுகிறது. அமர்ந்து நிலையில் நந்தி ஒன்று பாணத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ளது.நந்தி பிற்சேர்க்கையாக இருக்கலாம்.

கல்வெட்டு குறிப்புகள் :

1.இக்கோயிலில் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ அரசர்களின் காலக் கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன.

2.இக்கல்வெட்டுகள் வாயிலாக இக்கோயில் முதலாம் ராஜராஜசோழனால் (கி.பி 985-1016) எடுப்பிக்கப்பட்ட கற்றளி என்று அறியமுடிகிறது.

3."ஸ்ரீ ராஜராஜன் எடுபித்-தருளின திரு கற்றளி" என்ற வரிகளும், இக்கற்றளியை ஸ்ரீ ராஜராஜ சோழன் மற்றும் பூரி பட்டன் கட்டுனர் என்பவராவர் என்ற செய்தியைத் இக்கோயிலின் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.

4.இவ்விடம் குண்டாங்குழி என்றும் இக்கோயிலில் வீற்றிருக்கும் தேவர் திருக் குண்டாங் குழ-சேரி  ஒழுக்கரை மகாதேவன் என்றும் கல்வெட்டுகள் குறிக்கின்றன. இவ்வூர் திருபுவனை மகாதேவி சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்பட்டது.

குண்டாங்குழி மகாதேவர் திருக்கோயில் சிகரத்தின் வடிவம் நார்த்தாமலை, மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரம் மற்றும் இதர முதலாம் ராஜராஜனுடைய விமான சிகரத்தினை ஒத்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment