Friday, July 29, 2016

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நம: "இராமானுச வைபவம்"

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
"இராமானுச வைபவம்"

 "இராமானுச வைபவம்" என்னும் பெரும் சாகரத்தைச் சொல்லி கடந்துவிட முடியாது எனினும், “இதுதான் அந்த சாகரம்” என்று அதன் கரையில் நின்று தரிசிக்கலாம் அல்லவா? சாகரத்தை மேலும் தரிசிப்போம்..

"விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என்ற பழமொழிக்கேற்ப, “இளையாழ்வாராகிய இராமானுசர்” சிறு பிராயம் முதலே பெருமான்மீது மிகுந்த அன்பு நிறைந்த பக்தியோடும், வேத சாஸ்திரங்களில் ஞானத்தோடும் விளங்கினார்.

இது கண்டு பொறுக்க முடியாத அத்வைத வேதாந்தியான யாதவப்பிரகாசர், "இப்படியே இந்த இளையாழ்வார் வளர்ந்துகொண்டு வந்தால் வேதாந்தங்களின் உண்மையான பொருளை எடுத்துரைத்து, அத்வைதம் பட்டுப் போகும்" என அஞ்சினார். "இனி இவரை வளர விடக்கூடாது, தீர்த்துக் கட்டுவது ஒன்றே வழி" என்று தீர்மானித்தார். தனக்கு வேண்டிய அந்தரங்க சிஷ்யர்களை அழைத்து "காசி யாத்திரை செல்வது போல் சென்று, அங்கு கங்கையில்  இளையாழ்வாரை அழுத்திக் கொன்றுவிடலாம்." என்று ஒன்று கூடி சதி திட்டமும் தீட்டலாயினர்.

அப்போது இளையாழ்வாரின் வயது 18. அந்த அப்போதுதான் இளையாழ்வாரின் தந்தையான ஆசூரி கேசவர் பரமபதம் அடைந்தார். பின் இளையாழ்வார் ஸ்ரீபெரும்பூதூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு குடி பெயர்ந்தார். இளையாழ்வாரின் தாய்க்கு உடன் பிறந்தவரான பெரிய பிராட்டியாரின் (பெரிய திருமலை நம்பியின் இளைய சகோதரி) பிள்ளையே கோவிந்தன் ஆவார். அவரும் இளையாழ்வாருடன் குருகுலத்தில்தான் பயின்றுகொண்டு  இருந்தார்.

யாதவப் பிரகாசர் தன் திட்டத்திற்கு நாள் குறித்து, யாத்திரையை இளையாழ்வாரோடு தொடங்கலானார். இளையாழ்வாரும் தன் தாயிடம் அனுமதி பெற்றுக்கொண்டு சென்றார். உடன் கோவிந்தனும் சென்றார்.

யாத்திரையில் விந்திய மலைத்தொடர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது உடன் வந்த அந்த யாதவரின் அந்தரங்க சிஷ்யர்கள் சிலர் யாத்திரையின் சதி திட்டத்தினை கூடிக்கூடிப் பேசுவதை கோவிந்தன் கேட்டுவிட்டார்.
நெஞ்சம் கலங்கினார், இந்த விஷயத்தினை இளையாழ்வாருக்கு சொல்லி அவரை உடனே தப்பிக்கச் செய்ய முடிவுவும் செய்தார்.

ஒரு நாள் காலை நேரம் இளையாழ்வார் தனிமையில் இருக்கும் சமயம் பார்த்து அவரிடம் இந்த சதி திட்டத்தினை எடுத்துக்கூறி உடனே  "இங்கிருந்து சென்றுவிடும்" என்று கூறினார்.
இளையாழ்வாரும் அங்கிருந்து கோவிந்தனைப் பிரிந்து விந்தியத்தின் காட்டில் தெற்கு நோக்கி நடக்கலானார்.

அங்கு இளையாழ்வாரைக் காணாத யாதவரும், சிஷ்யர்களும் தேடிக்கவலையுற்றனர். பின் யாதவப் பிரகாசர் "ஐயோ பாவம்! எந்தக் காட்டு மிருகமோ இளையாழ்வாரை அடித்துக் கொன்றிருக்க வேண்டும்.
என் செய்வது? விதியை வெல்வது யாரால்  முடியும்??" என்று கோவிந்தனுக்கு ஆறுதல் கூறி, தன் எண்ணம் எப்படியோ ஒருவழியாக  நிறைவேறியதை எண்ணி திருப்தி அடைந்தார். யாத்திரையையும் தொடர்ந்தார்.

 திக்கு தெரியாத காட்டினில், வழி கேட்பதற்கும் ஆளின்றி "நல்வழி பிறக்கும்" என்ற நம்பிக்கையில் கால்போன போக்கில் நடக்கலானார் பதினெட்டு பிராயத்தவரான இளையாழ்வார்.
பகல் முழுவதும் உணவின்றி வழிநடந்து களைத்திருந்தார். இனி இராப்பொழுதை எங்கே, எங்கனம் கழிப்பது? என்று கவலையும் உற்றார்.

"ஆவார் ஆர் துணை? என்று அலைநீர்க் கடலு ளழந்தும்
நாவாய் போல் பிற விக்கட லுள்நின்று நான்துளங்கத்தே
வார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்துஅடி யேனொடும் ஆனானே."

அதாவது,
"காப்பார் ஒருவரும் அற்று இருக்கும் தனக்கு துணை ஆவார் யார்? என்று, நீரின் அலைகளையுடைய கடலிலே அழுந்துகின்ற கப்பலைப்போன்று, பிறவியாகிய பெருங்கடலுள் நின்று நான் நடுங்கிக்கொண்டிருக்க, திவ்யமான திருமேனியோடும் திருச்சக்கரத்தோடும் திருச்சங்கினோடும் அந்தோ! அந்தோ!! என்று இரங்கி வந்து அடியேனோடும் கலந்தான்"

 என்று நம்மாழ்வரின் நிலையில் இளையாழ்வார் வாடி இருக்க, உடனே ஓர் வேடன் தன் மனையாளுடன் வில்லோடு அவ்வழியில் அங்கு வந்து நின்றான். (வழியும் பிறக்கும்..)

இனி அமுதனார் இராமானுசரை போற்றிய அடுத்த இன்தமிழ் பாசுரத்தையும், அது தாங்கி வந்த பொருளை எளிய தமிழ் நடையிலும் காண்போம்.

"இராமானுச நூற்றந்தாதி"

பாசுரம்:7

மொழியைக் கடக்கும் பெரும்புகழான் * வஞ்சம் முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின் *
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ்பாடி அல்லா
வழியைக் கடத்தல் * எனக்கு இனியாது வருத்தமன்றே.

பொருள்:
வார்த்தைகளால் வருணிக்க முடியாதபடி பெரும் புகழையுடையவரும், வேதசாஸ்த்திர கலையில் தலை சிறந்தவரும், ஆத்மஞான அறிவிற்கு தடைக்கற்களாக இருக்கும் முக்குறும்புகளாக(தோஷங்களாக)  விளங்கும்,
கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு, குலச் செருக்கு ஆகிய படுகுழிகளைக் கடந்தவரும், என் நாதனாகவும் (ஆசார்யன்) இருப்பவர் கூரத்தாழ்வான்.
இப்பேர்ப்பட்ட மகானின் திருவடிகளை நான் அண்டியதன் பலனாக, சர்வ பாபங்களையும் போக்கும் வல்லமை உடையவரான எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களை வாயாரப்பாடும் பாக்கியம் வாய்க்கப்பெற்றேன்.
மேலும் இனி என் ஆத்ம ஸ்வரூபத்திற்கு (அறிவிற்கு) விரோதிகளாக உள்ள தீய வழிகளை எளிதாக கடக்கும் நிலை உண்டாகி விட்டது. ஆகையினால் இனிமேல் வரும் காலங்களில் எனக்கு குறையொன்றுமில்லை.

(“எம்பெருமானாரைத் துதித்து பாட தமக்கு போக்கியதை இல்லை” என்று பின் வாங்கப்பார்த்த அமுதனார், தமக்குள்ள ஆழ்வான்(கூரத்தாழ்வான்) திருவடி சம்பந்தத்தை எண்ணித் தேறி "இஃது இருக்கும் பக்ஷத்தில் நமக்கு அஸாத்யமாகாது" என்று மேலும் பாடத் தயாராகிறார்.)

English Translation:
After taking refuge in our Kurattalvar, -his glory is beyond our words, -who takes us out of the piffalls of deceptive knowledge, I sing the praise of Ramanuja who lifts me above sin.  I have escaped from non-paths, now I have no regrets.

பாசுரம்:8

வருத்தும் புறவிருள் மாற்ற * எம்பொய்கைப்பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி * ஒன்றத்
திரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் * இராமானுசன் எம் இறையவனே.

பொருள்:

"பகவத்பாகவத" விஷயங்களைப் பற்றியல்லாத அஞ்ஞானத்தினால் விளையும் மற்ற சப்தாதி விஷயங்கள் ( அந்தரங்க மற்றும் லௌகீக விஷயங்கள்) அனைத்தும் 'புறவிருள்' எனப்படும். முதலில் அவைகள் சுகமளிப்பதை போன்று தோன்றினாலும் அதன் விளைவுகள் ஓர் நாள் துக்கத்தில் மட்டுமே கொண்டு போய்ச் சேர்க்கும்.

அத்தகைய அஞ்ஞான இருளில் (சப்தாதி விஷயங்களில்) பலரும் சிக்கித்தவிக்கின்றனர்.
"பொய்கை ஆழ்வார்"  நமக்கு உபகாரம் செய்து இப்படிப்பட்டதான இருளைப் போக்கும் வண்ணம்,

"வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று."

-என்று திருவந்தாதி எனும் விளக்கேற்றி வைத்தார்.
அதற்க்கு திரியாக வேதங்களின் சாரமான அர்த்தங்களையும், இனிய தமிழ்ச் சொற்களையும் ஒன்று சேர்த்து திரித்தார்.
(அந்த நிகழ்வை முழுவதும் படிக்க இந்த இணைப்பை பயன்படுத்தவும்:

No comments:

Post a Comment