Thursday, October 22, 2015

ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!



ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!
வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என காவிரியின் பெருமையை விவரிப்பதே துலா புராணம் ஆகும்.ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே துலா ஸ்நானம் வழிபாடாகும்.இதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி 2 நாட்களில் நீராடுவது மிகவும் சிறப்பு.காவிரியில் புனித நீராடிய பிறகு துலா புராணத்தினை முழுவதுமாகவோ அல்லது ஒவ்வொரு பகுதியாகவோ தினமும் படிப்பது சகல நலன்களையும் தரும்.பொதுவாக 2 நதிகள் கூடும் இடத்தை கூடுதுறை அல்லது சங்கமம் என்று கூறுவோம்.தமிழ்நாட்டில் பவானி,உ.பி.யில் அலகாபாத்,கர்நாடகாவில் திருமுக்கூடல் ஆகியவைகள் மிகவும் சிறப்பு வாய்ந்த சங்கம இடங்களாகும்.
63 கோடி தீர்த்தம்:இந்தியாவில் கங்கை உள்பட 63 கோடி தீர்த்தங்களும் தங்களிடம் சேர்ந்துவிட்ட பாவத்திலிருந்து விடுபட ஐப்பசியில் காவிரியை நாடி வருவதாக பல புராணம் கூறுகிறது.துலா ஸ்நானத்திற்கு மிகவும் முக்கியமான தலங்கள் சிவாலய சிறப்புடைய மயிலாடுதுறையும்,விஷ்ணுவாலய சிறப்புடைய ஸ்ரீரங்கமும் ஆகும். இந்த ஸ்நானத்திற்கு கடை முழுக்கு அல்லது முடவன் முழுக்கு என்று பெயர்.பார்வதி மயில் உருவம் எடுத்து சிவனை வழிபட்ட தலமாதலால் மாயூரம் என்று வடமொழியிலும் மயிலாடுதுறை என்று தமிழிலும் வழங்கப்படுகிறது.இத்தலம் தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது.திருக்கடையூரில் சிவன் எமனை பதவியிலிருந்து நீக்கி விட்டார்.அப்போது எமன்(தர்மதேவன்)மாயூரத்தில் உள்ள மாயூரநாதரை வழிபட்டு மீண்டும் அந்த பதவியை பெற்றான்.எனவே இத்தலம் தர்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இடபத்தின் செருக்கு:ஒரு சமயம் சிவன் தன் வாகனமான இடபத்தின் மீது ஏறி உலகை சுற்றி வந்தார்.அப்போது இடப வாகனம் செருக்கடைந்து சுற்றி வந்து காவிரியின் நடுவில் தங்கி விட்டது.அதன் கர்வத்தை அடக்க சிவன் தன் கால் விரலை ஊன்றி அதை பாதாளத்தில் அமிழ்த்தி விட்டார். பிறகு இடபம் மனம் வருந்தி இறைவனை வேண்ட சிவனும் மனமிறங்கி அந்த இடபத்தை அங்கேயே இருந்து காவிரியில் நீராடுவோர்க்கு அருள்புரிந்து வருமாறு கட்டளையிட்டு மறைந்தார்.வானா அரசன் வாலி சிறந்த சிவபக்தன்.அவன் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடு துறையில் அருளுகின்ற சிவனை வழிபட்டு வந்தான் என்றும், அவனே பிற்காலத்தில் ராவணனை ஒடுக்கியவன் என்றும் திருஞானசம்பந்தர் தன் பாடலில் தெரிவிக்கிறார்.காவிரியிலிருந்து வெகுதூரத்தில் இருப்பவர்கள் ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட செல்லலாம். இயலாதவர்கள் தாங்கள் நீராடும் நதியையே காவிரியாக கருதி நீராடுவது நல்லது.ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி.ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

தகவல்-ஹரிஹரன்- பதிவு-ஆன்மீக சிந்தனையில்  அடியேன் -கணேசன் பாண்டிச்சேரி


No comments:

Post a Comment