Monday, November 24, 2014

நட்சத்திர அதிசயங்கள்! கார்த்திகை

நட்சத்திர அதிசயங்கள்! கார்த்திகை

மாத்ரி மண்டல நட்சத்திரம்


நானூறு நட்சத்திரங்கள் கொண்ட மாத்ரி மண்டலத்தில் தீ ஜுவாலை போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஆறு நட்சத்திரங்களான அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி,மேகயந்தி,வர்ஷயந்தி ஆகியவை மிக முக்கியமானவை. இவையே கார்த்திகை மாந்தர். கந்தனை வளர்த்தவர்கள்!

மாத்ரி மண்டலம் என்ற பெயரே மாதர்கள் கொண்ட கூட்டத் தொகுதி என்று குறிப்பிடப்படுவது வியப்பிற்குரியது! சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்த முருகனை கார்த்திகை மாந்தர் அறுவரும் தனித் தனியே ஆறு உருவங்களில் சீராட்டி மகிழ்வித்ததால் அவன் கார்த்திகேயன் என்ற பெயர் பெற்றான் என்று புராணம் கூறுவதை அனைவரும் அறிவோம்!

ரிஷப ராசியில் கார்த்திகை நம் தலைக்கு மேலே தோன்றும் போது சந்திரன் தோன்றும். ஆகவே தான் கார்த்திகைக்குத் தமிழர் கார்த்திகை மாதம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.தமிழரின் தெய்வம் முருகன் என்பதாலும் கார்த்திகை தமிழர் மனதில் தனி ஒரு இடத்தைப் பிடிக்கிறது!

கத்தி போல உள்ளதால் கார்த்திகை என்ற பெயரை இந்த நட்சத்திரம் பெற்றது. ப்ளையாடீஸ் என்று மேலை நாடுகளில் புகழ் பெற்றுள்ள இந்த கார்த்திகை நட்சத்திரம் அக்னி,தீபம் என ஒளி சம்பந்தமான எல்லாவற்றுடனும் புராணத்திலும் விஞ்ஞானத்திலும் தொடர்பு படுத்தப்படும் ஒரு அபூர்வ நட்சத்திரம்!



அறிவியல் வியக்கும் அதி உஷ்ண பகுலா

ஒரு வருடத்தின் 365 நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனமாகும் நாட்களே மிகவும் உஷ்ணமான நாட்களாக உள்ளன என அறிவியல் அறிவிக்கிறது. இந்த அதிக பட்ச உஷ்ணம் பூமி வாழ் மக்களின் ‘மித்ரன்’ என்று வர்ணிக்கப்படும் சூரியனுக்கு எப்படிக் கிடைக்கிறது என்ற காரணத்தை நோக்கினால் அது கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்வதால் தான் என்று தெரிய வருகிறது.

வெறும் கூட்டணியிலேயே சூரியனுக்கே இந்த உஷ்ணத்தைக் கொடுக்கிறது என்றால் கார்த்திகையின் உஷ்ணம் எப்படிப்பட்ட அதி பயங்கரமானதாக இருக்க வேண்டும்? நினைத்து நினைத்து பிரமிக்க வேண்டியது தான்!. சதபத பிராமணம் ஒன்றல்ல, இரண்டல்ல,மூன்றல்ல, நான்கல்ல, கார்த்திகை பல நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது என்று வியக்கிறது. ஆகவே இதற்கு பகுலா (பல நட்சத்திரம் கொண்டது )என்ற பெயரையும் சூட்டுகிறது.

இதைப் பற்றி வேதத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் ஏராளமான குறிப்புகளைக் காணலாம்.வால்மீகி “அந்த ஸ்கந்த கடவுளின் மீது நம்பிக்கை கொண்டோர் அவனுடன் சேர்ந்து இருப்பதை அனுபவிக்க முடியும்” என்று உறுதியாகக் கூறி கார்த்திகேயனின் மகிமையை வியக்கிறார்!

மஹாபாரதம் வன பர்வத்தில் மார்க்கண்டேயர் அக்னியின் தோற்றம் மற்றும் மகிமையை விளக்குவதாக ஆரம்பித்து சுப்ரமண்யருடைய உற்பத்தி, வீர அணிவகுப்பு ஆகியவற்றை விளக்கமாகக் கூறுகிறார். மார்க்கண்டேய ஸமாஸ்யா பர்வத்தில் ஸ்கந்த சரித்திரம் இடம் பெறுகிறது.


விசுவாமித்திரர் பதிமூன்று மங்கள கர்மங்களைச் செய்வித்து ஸ்கந்தருக்கு நாமகரணம் செய்து வைக்கிறார். இந்திரன் தேவ ஸேனாபதியாக ஸ்கந்தனுக்கு முடி சூட்டி தேவசேனையை திருமணம் செய்விக்கிறார். சிவனின் கட்டளைக்கிணங்க தேவ ஸேனையை அணிவகுத்துத் தலைமை தாங்கிச் சென்ற கந்தன் மகிஷாஸ¤ரனைக் கொல்கிறார்.மாத்ரு கண மாதரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கு எல்லா உலகங்களும் பூஜிக்கத் தக்க உயர் நிலையை அருளுகிறார்.


அத்தோடு பிரம்மாண்டமான தேவ ஸேனை அணிவகுப்பை கந்தன் தலைமை தாங்கிச் சென்றார் என்பதை உறுதிப் படுத்தும் வகையில் ஜொலிக்கும் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் அணிவகுப்பாகக் கூட்டம் கூட்டமாக கார்த்திகைக்குப் பின்னால் இருப்பதையும் பார்த்து அதிசயிக்கலாம்.இவற்றின் பல்வேறு அதிசய உருவங்களையும் ஜொலிஜொலிப்பில் உள்ள பல்வேறு தரங்களையும் பார்த்து சுப்ரமண்ய சேனையின் மகிமையை முற்றிலுமாக உணரலாம்!

மயில்வாகனன் முருகன்

முருகனின் வாகனமான மயிலையும் வானத்தில் கண்டு மகிழலாம். இதைப் பற்றி ஜே.பென்ட்லி என்ற ஆங்கிலேயர் வியந்து, “கார்த்திகேயன் மயிலின் மீது ஏறி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அவனே கார்த்திகை நட்சத்திரத்தில் தலைமையாக இருப்பதையும் அவன் பின்னால் அனைத்து கிரகங்களும் நட்சத்திரங்களும் தொடர் வரிசையாக அணிவகுப்பதையுமே இது குறிக்கிறது” என்று கூறுகிறார்!

புகழ், கீர்த்தி, காந்தி,ஆயுள் ஆகிய அனைத்தையும் முருகன் அருளுவான் என்ற வேத மற்றும் மஹாபாரத வாசகத்தை மனதில் இருத்தி கார்த்திகை மாந்தரையும் கார்த்திகேயனையும் வானத்தில் பார்த்துத் வணங்கி மகிழலாம்!

No comments:

Post a Comment