Thursday, October 16, 2014

மாயூரநாதர் திருக்கோவில்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று. முந்தைய சோழ நாட்டிலும், தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்திலும் காவிரி ஆற்றுக்கு தென்பகுதியில் அமைந்துள்ள மயிலாடுதுறைக்கு பெருமைத் தேடித்தரும் விதமாக கம்பீரமாக நிற்கிறது, அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் திருக்கோவில். 

மயில் உருப்பெற்ற பார்வதிதேவி, சிவனை தரிசித்து அவரால் ஆட்கொள்ளப்பட்ட தலம். கங்கை, யமுனை போன்ற நதிகள் தங்கள் பாவச் சுமையை இறக்கி வைக்க, இந்த ஊருக்கு வந்து காவிரி நதியில் கலந்து புனிதம் பெற்றனர் என்பது தல புராண வரலாறு. இந்த ஐதீகம் காரணமாக ஐப்பசி மாதம் முழுவதும் துலா நீராடலும், ஐப்பசி 30–ந் தேதி கடைசி முழுக்கு அன்று, தீர்த்தவாரியும் நடைபெற்று வருகின்றது. 

ஏகநாதராகிய சிவபெருமான் தோன்றி அருள்பாலிக்கும் அனைத்துத் தலங்களும் சிறப்புடைய தலங்கள்தான். இத்தலத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் எழுந்தருளி, திருப்பதிகம் பாடியுள்ளனர். சூதவனம், சிகண்டிபுரம், பிரும்மபுரம், தென்மயிலை, மாயூரம், மயூரம், மாயவரம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது இந்த ஊர். பழங்காலத்தில் மயில்கள் அதிகம் நிரம்பிய பகுதியாக இந்த ஊர் இருந்துள்ளது. 

மயில் வடிவில் அம்பாள் : 

மயிலாடுதுறைக்கு கிழக்கே சற்று தொலைவில் செம்பனார்கோவில் அருகே பரசலூர் (திருப்பறியலூர்) என்னும் திருத்தலம் உள்ளது. சிவனை மதிக்காது, தட்சன் யாகம் செய்த தலம் இது. தட்சனின் யாகத்திற்கு பயந்து தப்பி வந்த மயில்களுக்கு அன்னை மலைமகள், அபயம் அளிக்க, அபயாம்பிகை என்று பெயர் பெற்றாள். 

தன்னை அழைக்காது தட்சன் யாகம் நடத்தியதாலும், தான் தடுத்தும் கேளாமல் பார்வதி தேவி யாகத்தில் பங்கேற்று அவமானப்பட்டு திரும்பியதாலும் சிவபெருமான், பார்வதி தேவியை பெண் மயிலாக மாறும்படி சபித்தார். தட்சனின் யாகத்தை அழித்து அவனையும் சம்ஹாரம் செய்தார். 

பெண் மயில் வடிவம் பெற்ற பார்வதி, சிவனை வணங்கிவர, சிவபெருமான் ஆண் மயில் வடிவெடுத்து பார்வதியுடன் இணைந்து நடனமாடி அவரை ஆட்கொண்டதாக கூறப்படுகின்ற வரலாற்றுக்குரிய கோவிலாகும். மயில் வடிவம் எடுத்து சிவன் ஆடிய தாண்டவம், ‘மயூரத்தாண்டவம்’ என்று கூறப்படுகிறது. 

பார்வதிதேவி பெண் மயில் வடிவம் கொண்டு சிவபூஜை செய்ததற்கான சான்றாக திருக்கோவிலின் வடக்கு மதிலை ஒட்டி, கிழக்கு முகமாக அமைந்துள்ள ஆதிமாயூரநாதர் கோவிலையும், அதிலுள்ள தாமிரத்திலான மயிலையும் குறிப்பிடலாம். 

கோவில் அமைப்பு : 

மயிலாடுதுறை மக்களால் பெரியக் கோவில் என்று அழைக்கப்படும், இந்தக் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். ஒன்பது நிலைகளைக் கொண்ட சிற்ப வேலைபாடுகள் மிகுந்த கோபுரம், இந்தக் கோவிலின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கிறது. திருக்கோவிலானது அர்த்த மண்டபம், மகா மண்டபம், கர்ப்பக்கிரகம், அந்தராண மண்டபம், வசந்த மண்டபம், சுற்றுச்சுவருடன், நான்கு புறமும் வளாகங்களும், மாடவீதிகளும் கொண்டு அழகுற காட்சியளிக்கிறது. 

கோபுர தரிசனம் முடித்து தெற்கு முகமாக உள்ளேச் சென்றால் தங்க முனிஸ்வரரையும், கொடிமரத்தின் கீழே உள்ள விநாயகரையும் தரிசிக்கலாம். கொடிமரத்தின் முன்பாக மிகப்பெரிய விநாயகரும், வடக்கு புறமாக ஆறுமுகப்பெருமானும் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். 

வசந்த மண்டபத்தைக் கடந்து நந்தீஸ்வரரை வணங்கி உள்ளே சென்றால், கருவறையில் மாயூரநாதர், சிவலிங்க திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கருவறையின் உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் உற்சவர்களாகவும், மூலவர்களாகவும் மற்றும் நால்வர்களும், சப்தமாதர்களும் காட்சி தருகின்றனர். 

தென் பிரகாரத்தில் குதம்பை சித்தர் ஐக்கியமான விநாயகர் உள்ளார். இந்த விநாயகருக்கு சந்தனகாப்பு மட்டும் சாத்தப்படுகிறது. அடுத்ததாக நடராஜர், ஆலிங்கன சந்திரசேகர், இந்திரன், அக்னி, நிருதி, எமன், வாயு ஆகியோர் பூஜித்த லிங்கங்கள் உள்ளன. மேலும் அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, சகஸ்ர லிங்க சன்னிதிகளும் இருக்கின்றன. 

கருவறையின் நேர் பின் புறம் வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான் காட்சி தருகிறார். வடக்குப் பிரகாரத்தின் மேற்புறத்தில் சட்டநாதரும், துர்க்காபரமேஸ்வரியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். அருகில் பிரம்மாவும், பிச்சாண்டவரும் காட்சியளிக்கின்றனர். 

அம்பாள் சன்னிதி : 

மாயூரநாதரின் சன்னிதிக்கு வடக்கு புறத்தில் தனிச் சன்னிதியில் நான்கு திருக்கரங்களுடன், அபயாம்பிகை அம்பாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். கை களில் கிளியும், அபய ஹஸ்தமும் கொண்டு கருணை ததும்பும் முகத்துடன் அன்னை அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகுடன் காணப்படுகிறாள். 

அபயபிரதாம்பிகை, ஆங்சல் நாயகி, ஆங்சலை, மயிலம்மை போன்றவை அம்பாளின் வேறு பெயர்களாகும். அம்பிகையின் தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சாந்த சொரூபமாக காட்சி தருகிறார். ஆலயத்தின் உள்ளே நுழையும்போதே இடபுறமாக எதிர்படும் தீர்த்தம், பிரம்ம தீர்த்தமாகும். 

பிரம்மதேவர் தன் படைப்புத் தொழிலை மீண்டும் கைவரப்பெற, இந்த தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வணங்கியதால் இது பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. அடுத்ததாக துலாம் மாத உற்சவ தீர்த்தவாரி நடைபெறும், காவிரி ஆற்றின் நடுவில் உள்ள இடம் ‘இடப தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. 

நந்திதேவருக்கு ஏற்பட்ட செருக்கை அடக்கி, ஈசன் அருள்பாலித்த இடம் இதுவாகும். இது தற்போது முழுக்குத்துறை என்று பெயர் பெற்றுள்ளது. இறைவன் சன்னிதியில் தட்சிணாமூர்த்திக்கு கீழ்புறம் உள்ள சதுரண கிணறு, ‘அகத்திய தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இது அகத்தியர் அமைத்ததாகும். 

தல விருட்சம் :

கோவில் தல விருட்சமாக மாமரம் உள்ளது. தலவிருட்சம் அமைந்துள்ள இடத்தை சூதவனம் என்று வடமொழி நூல்கள் கூறுகின்றன. இந்த மாமரத்திற்கு அடியில் மாமரத்து விநாயகர் என்னும் பெரிய விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இந்த திருக்கோவிலில் நடைபெறும் மிகப்பெரிய உற்சவம் துலா உற்சவம் ஆகும். 

ஐப்பசி மாதம் முழுவதும் இந்த உற்சவத்தின் போது கோவில் களை கட்டி இருக்கும். இந்த நாட்களில் மயிலாடுதுறையில் உள்ள அய்யாரப்பர், காசி விஸ்வநாதர், ஸ்ரீபடித்துறை விஸ்வநாதர், வேதாரண்யேஸ்வரர் ஆகியோரும் துலாக் கட்டத்திற்கு வந்து தீர்த்தவாரியில் கலந்து கொள்வார்கள். 

இது தவிர மாத உற்சவம், பட்ச உற்சவம், பிரதோஷம், சஷ்டி, வசந்த காலத்தில் நடைபெறும் சைத்ரோற்சவம் போன்றவை விசேஷமாக நடைபெறும் விழாக்களாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று லட்ச தீப பெருவிழாவும், நவராத்திரியில் ஒன்பது நாள், ஒன்பது விதமான அலங்காரம் அம்பாள் காட்சியளிப்பதும் சிறப்பான ஒன்றாகும். 

வைகாசி திருவிழாவில் பிரம்ம தீர்த்தத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்தப்படும்.

No comments:

Post a Comment